Saudi Arabia may call off hajj pilgrimage this year as covid19 spread increases : கொரோனா நோய் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில் மக்கள் அதிகம் கூடுவதற்கு பல்வேறு நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது. உலகில் அதிக அளவில் நடைபெறும் புனித பயணங்களில் ஒன்றாக கருதப்படுவது ஹஜ் பயணமாகும். இஸ்லாமியர்கள் கடமைகளில் மிகவும் முக்கியமானதாக கருதப்படும் நிகழ்வு இது. தற்போதைய கொரோனா சூழலில் ஹஜ் பயணத்திற்கு அனுமதி தருவதா வேண்டாமா என்று சவுதி அரேபிய அரசு விரைவில் முடிவெடுக்க உள்ளாதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : சென்னை எல்லை மூடல்: அலுவலகம் செல்ல முடியாமல் ஊழியர்கள் அவதி
கடந்த ஆண்டு மட்டும் 2.5 மில்லியன் நபர்கள் சவுதி அரேபியாவிற்கு புனித பயணமாக வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதிக அளவு இஸ்லாமியர்கள் வாழும் நாடான இந்தோனேசியாவில் இருந்து இந்த ஆண்டு புனித பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மலேசியா, சிங்கப்பூர் மற்றும் செனேகல் போன்ற நாடுகளும் இதே முடிவை மேற்கொண்டுள்ளனர். பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளில் இருக்கும் மதத்தலைவர்கள் ஹஜ் புனித பயணத்தை இந்த ஆண்டு தள்ளி வைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஆனால் எகிப்து,மொரோக்கோ, துருக்கி, லெபனான் மற்றும் பல்கீரியா போன்ற நாடுகள் இன்னும் சவுதியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காக காத்திருக்கின்றன. ஹஜ் பயணம் ரத்து செய்யப்படுகிறது என்ற அறிவிப்பு வெளியாகுமானால் நவீன வரலாற்றில் ஹஜ் பயணம் ரத்து செய்யப்படுவது இதுவே முதன்முறையாகும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
சவுதி அரசு உருவான நாளில் (1932) இருந்து முதன்முறையாக தற்போது தான் ஹஜ் பயணம் ரத்தாகும் சூழல் உருவாகியுள்ளது. எபோலா மெர்ஸ் போன்ற கொள்ளை நோய்கள் பரவல் காலத்திலும் கூட சமாளித்து ஹஜ் பயணத்தை வெற்றிகரமாக அமைத்தது சவுதி அரேபியா. ஆனால் தற்போது கொரோனா வைரஸ் மிகவும் பரவி வருவதால் இந்த நிலை உருவாகியுள்ளது.
இது போன்ற சூழலில் ஹஜ் புனித பயணத்திற்கான அனுமதியை சவுதி வழங்கினால் அந்நாட்டு மக்களின் ஆரோக்கியத்திற்கு மட்டும் அது அழுத்தம் தராது. உலகம் முழுவதும் கொரோனா அதி விரைவாக பரவ வழிவகுக்கும் என்று பலரும் கூறியுள்ளனர். ஏற்கனவே வைரஸ் மற்றும் எண்ணெய் விலை ஆகிய காரணங்களால் நொடித்து போயுள்ள சவுதி அரேபியா ஹஜ் பயணத்தையும் ரத்து செய்தால் பெரிய அளவில் பொருளாதார இழப்பை சந்திக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஹஜ் மற்றும் உம்ரா புனித பயணங்கள் மூலமாக சவுதி அரேபியாவிற்கு ஆண்டுக்கு 12 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வருமானம் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.