scorecardresearch

இலங்கை குண்டு வெடிப்பு சம்பவம் : தற்கொலைப்படை தாக்குதலில் ஈடுபட்ட நபர்கள் குறித்த திடுக்கிடும் தகவல்கள்

வெளியூர்களுக்கு அனுப்பப்படும் தபால்கள், ஊழியர்களின் முன்னிலையில் தான் பேக்கிங் செய்யப்பட வேண்டும் என்ற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Sri Lanka Bomb Blast Suicide Bombers
Sri Lanka Bomb Blast Suicide Bombers

Sri Lanka Bomb Blast Suicide Bombers : புனித ஞாயிறு அன்று தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர உணவு விடுதிகள் என 8 இடங்களில் குண்டுகள் வெடித்தன. இதில் 300க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இந்த தற்கொலைப்படை தாக்குதல்களுக்கு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

இந்நிலையில் இலங்கையில் மிகப் பிரபலமான தொழிலதிபரின் இரண்டு மகன்கள் இந்த தாக்குதலில் தற்கொலைப்படை தீவிரவாதிகளாக செயல்பட்டு வந்துள்ளனர் என்று கண்டறியப்பட்டுள்ளது.

கறுப்பு மிளகு, வெள்ளை மிளகு, வெண்ணிலா, கிராம்பு என மசாலாப்பொருட்களை ஏற்றுமதி செய்து வரும் தொழிலபதிபர் முகமது யூசஃப் இப்ராஹிம் என்பவரை தற்போது காவல்த்துறை விசாரணை செய்து வருகிறது. அவருடைய மகன்கள் இன்ஷாஃப் மற்றும் இல்ஹாம் இந்த தீவிரவாத தாக்குதலில் மனித வெடிகுண்டுகளாக பயன்படுத்தப்பட்டிருப்பது குறித்து தீவிரமாக அவர்களது தந்தையிடம் விசார்ரணை நடத்தப்பட்டு வருகிறது.

Sri Lanka Bomb Blast Suicide Bombers : அனைவரும் நன்றாக படித்தவர்கள்

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தாக்குதலில், ஒரு தாய் அவருடைய இரண்டு குழந்தைகளின் கண் முன்பே தீவிரவாத செயலில் ஈடுபட்டு அனைவரையும் கொன்றுவிட்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்திய அதிகாரிகளில் ஒருவர், அந்த பெண் இப்ராஹிமின் மருமகள்களில் ஒருவராக இருக்கலாம் என்று கூறினார்.

இலங்கைத் தரப்பு அதிகாரிகள், தற்கொலைப்படை தாக்குதலில் ஈடுபட்ட நபர்கள் குறித்த தகவல்களை வெளியிட மறுத்துவிட்டனர். ஆனால் இலங்கையில் ராணுவத்துறை அமைச்சர் ருவான் விஜேவர்தெனே, இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அனைவரும் நன்றாக படித்தவர்கள் மேலும் நடுத்தர மற்றும் வசதி படைத்த குடும்பத்தினை சார்ந்தவர்கள் என்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.

அவர்கள் அனைவரும் வசதியாகவும், குடும்பத்தின் சூழல் மேம்பட்டதாகவும் இருப்பதால் அவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் வெளிநாடுகளில் சென்று படித்துவந்தவர்கள்.

அமெரிக்காவில் இருந்து எஃப்.பி.ஐ புலன் விசாரணை அதிகாரிகள் இலங்கையில் மையமிட்டுள்ளனர். பாதுகாப்புத்துறை அமைச்சர் கூறுகையில், கைது செய்யப்படாதவர்கள் இன்னும் நிறைய பேர் வெளியே உள்ளனர் என்றார். அதிகாரிகள், இந்த தற்கொலைப்படை தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அனைவரும் எந்த புள்ளியில் ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருந்தார்கள் என்று தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கிழக்கு இலங்கையை சேர்ந்த முகமது ஜஹரான் என்ற இளைஞர் குறித்த தகவல்களையும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளது இலங்கை அரசு. ஜஹரான் இஸ்லாமிய மதத்தை பரப்பும் நோக்கில், வன்முறைக் கருத்துகளை தன்னுடைய சொந்த கிராமத்திலும், யூட்யூப் வழியாகவும் பரப்பி வந்ததாக இந்திய அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால் அவருடைய கிராமத்தில் அந்த கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க : இலங்கை தொடர் வெடிகுண்டு தாக்குதல்கள் : இந்தியா எச்சரித்தும் பாதுகாப்பினை தளர்த்தியது ஏன்?

இலங்கையில் இருக்கும் சில இஸ்லாமிய தலைவர்கள் கூறுகையில், ஜஹரான் தனக்கென சிறு நம்பிக்கையான கூட்டத்தை உருவாக்கிக் கொண்டான் என்று உறுதிபட தெரிவித்தனர்.

ஐ.எஸ். பொறுப்பேற்றுக் கொண்டதுடன், வேறெந்த தகவல்களையும் முன் வைக்கவில்லை. அதே போன்று, அவர்கள் இந்த தற்கொலைப்படை தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளுக்கு பணம் அல்லது பயிற்சி அளித்தார்களா என்ற கோணத்திலும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. மேலும், இந்த நபர்கள், மத்திய கிழக்கு ஆசியாவிற்கு சென்று ஐ.எஸ் அமைப்பிற்காக போரில் ஈடுபட்டார்கள் என்று கூறுவதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தாக்குதலில் மூன்று தேவாலயங்கள் மற்றும் மூன்று நட்சத்திர விடுதிகள் முற்றிலும் சேதாரமாகின. அதில் ஒரு வெடிகுண்டு மிகவும் சக்தி வாய்ந்தது. தேவாலயத்தின் மேற்கூரை தூக்கி வீசப்பட்டதோடு, ஓடுகள் அனைத்தும் வேகமாக மக்களின் தலை மீது வந்து விழுந்துள்ளது. நாட்டின் ஒரு மூலையில் இயங்கி வரும் மிகச் சாதாரணமான அமைப்பால் இவ்வளவு பெரிய சதி வேலையை செய்ய இயலுமா என்று அனைவருக்கும் பலத்த சந்தேகம் தான் நிலவி வருகின்றது.

10 ஆண்டுகளுக்கு முன்பு முடிந்த உள்நாட்டுப் போரின் வடுக்களே இன்னும் மக்கள் மனதில் இருந்து ஆறாத நிலையில், இது மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிகள் திங்கள் கிழமை வர மூட உத்தரவிடப்பட்டுள்ளது. வெளியூர்களுக்கு அனுப்பப்படும் தபால்கள், ஊழியர்களின் முன்னிலையில் தான் பேக்கிங் செய்யப்பட வேண்டும் என்ற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொல்லப்பட்டவர்களின் இறுதி சடங்குகள் அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது. சில இடங்களில் இஸ்லாமியர்களுக்கும் கிருத்துவர்களுக்கும் கலவரம் மூண்ட நிலையில் தங்கள் சொந்த ஊர்களுக்கு மக்கள் திரும்பிச் செல்கின்றனர்.

Stay updated with the latest news headlines and all the latest International news download Indian Express Tamil App.

Web Title: Sri lanka bomb blast suicide bombers included two sons spice tycoon