இலங்கை குண்டு வெடிப்பு : “தவறான ஆட்களிடம் இருந்து இஸ்லாத்தை கற்ற அவன் இறந்தது மகிழ்ச்சி தான்” - தீவிரவாதியின் தங்கை

வஹாபி இஸ்லாமிய கோட்பாடுகள் அவனை முற்றிலும் தீவிரவாதியாக மாற்றிவிட்டது

Arun Janardhanan

Sri Lanka Suicide Bomber Zahran Hashim : கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று இலங்கையின் பல்வேறு இடங்களில் தொடர் வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டு 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு முக்கிய காரணகர்த்தாவாக விளங்கிய தலைவனின் குடும்பத்தினர் உட்பட அனைவரும் கல்முனை என்ற இடத்தில் தற்கொலைப்படை தாக்குதல் மற்றும் துப்பாக்கிச் சூடு மூலம் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகின.

அந்த தாக்குதலில் 15 நபர்கள் உயிரிழந்தனர். அதில் 6 குழந்தைகள் அடக்கம். ஜஹ்ரான் ஹாசிம் என்ற தீவிரவாதி தான் இந்த தற்கொலைப்படை தாக்குதல்கள் அனைத்திற்கும் காரணம். புனித ஞாயிறுக்கு மூன்று நாட்களுக்கு முன்பாக அவரின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் காணாமல் போன நிலையில், கல்முனையில் பத்திரமாக இருந்தனர். ஆனால் காவல்துறை தொடர் வேட்டை காரணமாக அங்கிருந்தோர் உயிரிழந்துள்ளனர்.

இது தொடர்பாக ஜஹ்ரான் ஹாசிமின் தங்கை மதனியா மற்றும் அவருடைய கணவர் செரிஃப் நியாஸை நேரில் அழைத்து கொல்லப்பட்டவர்களை அடையாளம் காண கேட்டுக் கொண்டது இலங்கை அரசு.

15 பேரின் உடல்களும் வைக்கப்பட்டுள்ள அம்பறா மருத்துவமனையில் அவர்களின் உடலை அடையாளம் காண வந்தார் மதனியா ஆனால் புகைப்படங்களை மட்டும் காட்டுங்கள் நான் அடையாளம் காட்டுகின்றேன் என்று மதனியா மறுக்க நியோஸோ, அவர்கள் உன் உறவினர்கள் தான் என்றால், நீ அவர்களை பார்ப்பது இதுவே இறுதி முறையாகும். எனவே சென்று பார்த்துவிட்டு வா என்று வற்புறுத்தினார்.

மேலும் படிக்க : இலங்கை குண்டு வெடிப்பு சம்பவம் : தற்கொலைப்படை தாக்குதலில் ஈடுபட்ட நபர்கள் குறித்த திடுக்கிடும் தகவல்கள்

ஏப்ரல் 21ம் தேதி சங்கரி-லா விடுதியில் தன்னை மனித வெடிகுண்டாக வெடிக்கச் செய்து உயிரிழந்துவிட்டார் ஜஹ்ரான் ஹாஷிம். மதனியாவின் மற்றொரு அண்ணனான முகமது ஸெயின் ஹாஷிம் இன்று வரை காணவில்லை. தாக்குதலில் அவரும் உயிரிழந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

வெள்ளிக்கிழமை கல்முனையில் நடைபெற்ற தாக்குதலின் போது ஜஹ்ரானின் மூன்றாவது சகோதரன், அவருடைய மனைவி, அவர்களுடைய இரண்டு குழந்தைகள் கொல்லப்பட்டனர். ஸெயினின் மனைவி, அவர்களுடைய இரண்டு குழந்தைகள், ஜஹ்ரானின் சகோதரி, அவருடைய கணவர் மற்றும் அவர்களின் ஒரு குழந்தை உயிரிழந்துள்ளனர். மேலும் ஜஹ்ரானின் இரண்டு குழந்தைகள், மற்றும் ஜஹ்ரானின் வயதான பெற்றோர்களும் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர்.

Sri Lanka Suicide Bomber Zahran Hashim குறித்து மதனியா கூறும் தகவல்கள்

காத்தான்குடியில் மதனியா மற்றும் நியாஸ் வசிக்கும் அந்த இரண்டு அறைகள் கொண்ட வாடகை வீட்டிற்கு விசாரணைக்கு வந்தார்கள் காவல்துறையினர். அவர்களிடம் கல்முனை தாக்குதலில் உயிர் பிழைத்த இருவரின் புகைப்படம் காட்டப்பட்டது. ஒன்று ஜஹ்ரானின் மனைவியுடனைய புகைப்படம்.

இலங்கை ராணுவத்தின் செய்தித்தொடர்பாளரிடம் இது குறித்து கேட்டபோது, இலங்கை ராணுவம்- காவல்த்துறையோடு இணைந்து விசாரணையை மேற்கொண்டு வருகிறது என்றும், இதற்கு மேல் தகவல்கள் தர இயலாது என்றும் கூறிவிட்டார்.

ஏழு குழந்தைகள் மற்றும் ஜஹ்ரானின் பெற்றோர்கள் உட்பட 16 பேர் திடீரென மாயமானதை தொடர்ந்து, மதனியா பேசிய போது, இந்த கொலைகளுக்கும் ஐ.எஸ்.க்கும் தொடர்பு இருப்பது குறித்து ஒன்றும் தெரியாது என்று கூறினார்.

மதபோதகம் என்ற பெயரில் கடுமையான பரப்புரையில் தவறான கருத்துகளை பரப்பிய காரணத்தால் நானும் என் அண்ணனும் 2017ம் ஆண்டில் இருந்து பேசிக் கொள்வதை நிறுத்திவிட்டோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

என்னுடைய அண்ணன் சிறந்த பேச்சாளனாக, மக்களைக் கவரும் வகையில் பேசி வந்தான். ஆனால் எப்போது நாட்டிற்கு எதிராகவும், தேர்தல் மற்றும் தேசியக் கொடிக்கு எதிராகவும் பேசினானோ அன்றிலிருந்து எங்களின் குடும்பத்திற்கு பெரிய பிரச்சனையாகவே இருந்து வந்தது அவனுடைய பரப்புரை என்று அவர் கூறினார்.

இலங்கை கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள நகரம் தான் காத்தான்குடி. இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசித்து வருகின்றார்கள். தவ்ஹீத் ஜம்மாத் மசூதியில் இருந்து வெறும் 100 மீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது மதனியாவின் வீடு.

Sri Lanka Suicide Bomber Zahran Hashim -ஆல் ஏற்பட்ட விபரீதம்

இஸ்லாம் மற்றுமே உண்மையான மதம் என்று தொடங்கி, மற்ற மதங்களை தாக்கியும், தரக்குறைவாக பேசியும் வந்தார் ஜஹ்ரான் என்று குறிப்பிடும் மதனியா, சூஃபிகள் போதைக்கு அடிமையானவர்கள் என்றும் பரப்புரை செய்து வந்தார் என்கிறார். என்னுடைய கணவன், என்னுடைய சகோதரனிடம் இருந்து விலக ஆரம்பித்ததோடு, அவன் தவறான வழியில் செல்கின்றான் என எச்சரிக்கையும் விடுத்தார் என்கிறார் மதனியா.

என் அண்ணனுடனான பேச்சுவார்த்தை முற்றிலும் முறிந்த பிறகும் கூட, இதே தெருவின் மற்றொரு முனையில் அமைந்திருக்கும் என்னுடைய பெற்றோர்களுக்கு உணவு அனுப்ப ஒரு போதும் தவறியதில்லை. 18ம் தேதியில் இருந்து அவர்களின் வீடு பூட்டியே இருக்கிறது என்றும், வீட்டில் யாரும் இல்லை என்றும் அக்கம்பக்கத்தில் கூறினார்கள். நான் அவர்களை தொடர்பு கொள்ள முயற்சித்தேன். ஆனால் அவர்களின் போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. பின்பு வெடிகுண்டுகள் தொடர்பான செய்திகள் வெளியாகவும் ஜஹ்ரானின் பணி என்னவென்று எங்களுக்கு புரிந்துவிட்டது என்றார்.

ஒட்டுமொத்த குடும்பமும் என்னையும் என் கணவனையும் விட்டுச் சென்றுவிட்டது. ஏன் என்றால், நான் அவனுடைய கொள்கைகளுக்கு முற்றிலும் எதிரான மனநிலையில் இருந்தன.

மதனியாவின் தகவல்படி, 6ம் வகுப்பிலேயே பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டான் ஜஹ்ரான். ஆனால் இஸ்லாமிய கல்வியில் அதிக அளவு நாட்டம் இருந்தது. குரானை அரபியில் படிக்கும் படிப்பை முற்றிலும் கற்றுத் தேர்ந்தான். இஸ்லாம் குறித்து அதிக ஆர்வம் கொண்டான். ஹாதித்துகள் குறித்து தவறான மக்களிடம் இருந்து கற்றுக் கொண்ட அவன், மக்களை கொல்லவும் கற்றுக் கொண்டான். அவன் உயிரோடு இல்லாமல் இருப்பது எனக்கு மகிழ்ச்சி தான் என்கிறார்.

சிலர் ஜஹ்ரான் அடிக்கடி தமிழகம் வந்ததை உறுதி செய்தனர். ஆனால் மதனியா கூறுகையில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஜப்பானில் இருக்கும் தமிழ் இஸ்லாமியர்களுக்கு குரான் குறித்த கல்வி அளிக்க சென்றான் என்றுக் கூறினார். ஆனால் அவன் அங்கு சென்றதையும் நான் சந்தேகிக்கின்றேன். ஏன் என்றால், அவனுடைய பாஸ்போர்ட் குறித்த அனைத்து தகவல்களும் காவல்த்துறையிடம் இருந்தது.

வஹாபி  அவனை முற்றிலும் தீவிரவாதியாக மாற்றிவிட்டது

ஒரு நாள் முழுவதும் குரானை கேட்டுக் கொண்டே இருப்பான். அதனைத் தவிர மற்ற அனைத்தும் பாவப்பட்ட செயல் என்று நம்பினான். பாடல்களை கேட்டால் கூட அவர்கள் பாவிகள் என்று கூறிக் கொண்டான். அவனுடைய இஸ்லாமிய கோட்பாடானது எங்களுடையது அல்ல.

2017ம் ஆண்டு, அவனுடைய ஆதரவாளர்கள் சூஃபி இஸ்லாமியர்களுடன் பிரச்சனை செய்தனர். மிதவாத இஸ்லாமியர்கள் குறித்தும், சூஃபிகள் குறித்தும் மிகவும் தவறான பரப்புரைகளை மேற்கொண்டான். பின்பு எங்கோ காணாமல் போய்விட்டான். காரணம் அவனை போலீஸ் தேடிக் கொண்டிருந்தது. அரபு தேசங்களுக்குச் சென்று வஹாபிசத்தை இலங்கையில் சேர்த்த முக்கியமான நபர்களில் இவனும் ஒருத்தன் என்று தன்னுடைய அண்ணன் பற்றி குறிப்பிடுகிறார் மதனியா.

சூஃபி இஸ்லாமியர்களுக்கு பயம் உண்டாகும் வகையில் தவறான கருத்துகளை பரப்புரை செய்ததோடு அவர்களை கஃபிர்கள் என்றும் அழைத்து வந்ததாக சூஃபி பதரியா மசூதியின் செயலாளர் எச்.எம். அமீர் தெரிவிக்கின்றார்.  வஹாபி இஸ்லாமிய கோட்பாடுகள் அவனை முற்றிலும் தீவிரவாதியாக மாற்றிவிட்டது என்று கூறுகிறார் அவர்.

2017ம் ஆண்டில் இருந்து தவ்ஹீத் ஜமாத் அமைப்பு அவனை வெளியேற்றிவிட்டது. அவருடைய மற்றொரு சகோதரன் அதனை பொறுப்பேற்று நடத்தினான். ஆனால் அவனையும் காணவில்லை என்கிறார் அமீர்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest International News in Tamil by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close