Sri Lankan PM Mahinda Rajapaksa resigns : இலங்கையில் பிரதமராக பதவி வகித்து வந்த ரணில் விக்ரமசிங்கேவினை, அக்டோபர் மாதம் 26ம் தேதி பதிவியில் இருந்து நீக்கிவிட்டு அதிபர் சிறிசேனா, ராஜபக்சேவினை பிரதமராக்கினார். இதற்கு அமைச்சர்கள், எதிர்க்கட்சி அமைப்பினர், அந்நாட்டின் நாடாளுமன்ற சபாநாயகர், நீதிமன்ற அமைப்புகள் அனைத்தும் தங்களின் எதிர்ப்பினை தெரிவித்தனர்.
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் ராஜபக்சே படுதோல்வி அடைந்தார். ஆனாலும் ராஜபக்சேவே பிரதமராக தன்னுடைய பதவியை நீட்டிப்பார் என்று சிறிசேனா அறிவித்திருந்தார்.
Sri Lankan PM Mahinda Rajapaksa resigns
ஆனால் அதற்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பவும் நவம்பர் 9ம் தேதி இலங்கை நாடாளுமன்றத்தை கலைப்பதாக அறிவித்தார் சிறிசேனா. இதனைத் தொடர்ந்து ரணில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி, ஜனதா விமுக்தி பெரமுனா, தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சிகளின் 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள், சிறிசேனாவின் இந்த அறிக்கையை எதிர்த்து இலங்கையின் மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தனர்.
இதனை விசாரித்த நீதிமன்றம் ராஜபக்சே மற்றும் அவருடைய அமைச்சரவையை சார்ந்தவர்கள் தங்களின் பணியை தொடரக்கூடாது என்றும் மீறினால் சரி செய்யவே இயலாத சேதங்களை நாடு சந்திக்கும் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
மேலும் படிக்க : ராஜபக்சேவின் பிரதமர் பதவி குறித்து இலங்கை நீதிமன்றம் அதிருப்தி
மீண்டும் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு
இலங்கை நாடாளுமன்றத்தில் டிசம்பர் 12ம் தேதி மீண்டும் ஒரு நம்பிக்கை வாக்கெடுப்பு நிகழ்த்தப்பட்டடது. அதில் ரணில் விக்ரமசிங்கேவிற்கு ஆதரவாக 117 வாக்குகள் கிடைத்தன.
இந்நிலையில் நாட்டின் நிலைத்தன்மையை பாதுகாக்க பிரதமர் பதவியில் இருந்து ராஜபக்சே ராஜினாமா செய்வதாக முடிவெடுத்துள்ளார் என அவருடைய மகன் நமல் ராஜபக்சே அறிவித்திருந்தார்.
இலங்கையில் இன்று நடைபெறும் பொதுக்கூட்டத்திற்கு பிறகு ராஜபக்சே பதவி விலகுகிறார் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தன்னுடைய ராஜினாமா கடிதத்தை மைத்ரிபால சிறிசேனாவிடம் ஒப்படைத்தார். நாளை ரணில் விக்ரமசிங்கே மீண்டும் பிரதமராக பதவி ஏற்க உள்ளார். அமைச்சர்கள் நியமனம் குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.