scorecardresearch

இம்ரான் கானை சந்தித்த பில் கேட்ஸ்.. அமெரிக்க தூதரக அதிகாரி வெளியேற்றம்.. மேலும் செய்திகள்

உக்ரைன் எல்லை அருகே படைகளை திரும்பப் பெற்றதாக ரஷியா அறிவித்தது. ரஷியாவின் இந்த அறிவிப்பு பொய்யானது என அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.

இந்தோனேஷியா: கொரோனா பாதிப்பு 50 லட்சமாக உயர்வு

இந்தோனேஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 63,956 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.  இதனையடுத்து, அந்நாட்டில் கொரோனா பாதித்தவா்களின் எண்ணிக்கை 50,30,002 ஆக உயா்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 206 பேர் கொரோனா பாதிப்புகளால் உயிரிழந்துள்ளனா். இதனால், கொரோனாவுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 1,45,828 ஆக அதிகரித்துள்ளது.

இந்தோனேசியாவில் இதுவரை 44,14,306 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா். 4,69,868 பேர் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்.  அவா்களில் 2,278 பேரின் உடல்நிலை கவலைக்குரிய வகையில் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இங்கிலாந்தில் கொரோனா பரவலால் ஏற்படும் பாதிப்புகள் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. ஒரேநாளில் புதிதாக 51,899 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் இதுவரை கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,84,99,058 ஆக உயர்ந்துள்ளது. 

ரஷியாவிலிருந்து அமெரிக்க தூதரக அதிகாரி வெளியேற்றம்

ரஷியாவிலிருந்து அமெரிக்கத் தூதரக அதிகாரி வெளியேற்றப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 1991-ஆம் ஆண்டில் சோவியத் யூனியன் உடைந்தபோது, அதில் அங்கம் வகித்த உக்ரைன் சுதந்திர நாடாக தன்னை அறிவித்துக் கொண்டது.

தனது எல்லையையொட்டி அமைந்துள்ள அந்த நாடு, சோவியத் யூனியனுக்கு எதிராக உருவாக்கப்பட்ட நேட்டோ அமைப்பில் இணைந்தால் அது தங்களது பாதுகாப்புக்கு அது மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று ரஷியா கருதுகிறது.

இந்த சூழலில் நேட்டோவுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், உக்ரைன் எல்லையருகே ஏராளமான எண்ணிக்கையில் படையினரை ரஷியா குவித்து வந்தது.

இதனால் இருநாட்டு எல்லைப் பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது.

இதனிடையே உக்ரைன் எல்லை அருகே படைகளை திரும்பப் பெற்றதாக ரஷியா அறிவித்தது. ரஷியாவின் இந்த அறிவிப்பு பொய்யானது என அமெரிக்கா குற்றம்சாட்டி வந்த நிலையில் அடுத்த ஓரிரு நாள்களில் உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்திருந்தார். 

பிரேசிலில் கனமழை.. ஜப்பான்-பிரிட்டன் பிரதமர்கள் ஆலோசனை.. மேலும் முக்கிய செய்திகள்

இந்த சூழ்நிலையில், ரஷிய தலைநகர் மாஸ்கோவில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் துணை தலைவர் பார்ட் கோர்மனை ரஷியா வெளியேற்றி உள்ளது. இதற்கு எந்த காரணமும் ரஷியா தரப்பில் கூறப்படவில்லை.

வெளியேற்றப்பட்ட பார்ட் கோர்மன், அமெரிக்க தூதரகத்தில் 2-ம் இடத்தில் இருப்பவர். 3 ஆண்டுகளாக அவர் அங்கு பணியாற்றி உள்ளதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் கூறினார்.

மாலியில் இருந்து படைகள் வாபஸ்: பிரான்ஸ்

மாலியில் இருந்து தனது படைகளை திரும்பப் பெற்றுக் கொள்வதாக பிரான்ஸ் அறிவித்தது.

மாலி நாட்டில் உள்நாட்டுப் போர் நடந்து வருவதால், அங்கு மத அடிப்படையிலான போராளிகளை எதிர்த்து பிரான்ஸ் படை வீரர்கள் சண்டையிட்டு வந்தனர். இந்த நிலையில் மாலியில் இருந்து தனது படைகளை திரும்பப் பெறுவதாக பிரான்ஸ் அறிவித்துள்ளது.

பாக். பிரதமருடன் பில்கேட்ஸ் சந்திப்பு

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனர் பில்கேட்ஸ் முதல் முறையாக பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்டார்.

தலைநகர் இஸ்லாமாபாத்தில் அவர் அந்த நாட்டின் பிரதமர் இம்ரான்கானை சந்தித்துப் பேசினார். கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மேற்கொண்ட முயற்சிகளுக்காக பாகிஸ்தான் அரசைப் பாராட்டினார்.

பில்கேட்சுக்கு இம்ரான்கான் மதிய விருந்து அளித்து கவுரவித்தார். பில் கேட்ஸ், வறுமை ஒழிப்புக்காகவும், மக்களின் ஆரோக்கியம் காக்கவும் எடுத்து வரும் நடவடிக்கைகளை பாராட்டி நடந்த நிகழ்ச்சியில் அவருக்கு ‘ஹிலால் இ பாகிஸ்தான்’ விருது வழங்கி அந்த நாட்டின் குடியரசுத் தலைவர் ஆரிப் ஆல்வி சிறப்பித்தார்.

இந்த நிகழ்ச்சியில் பாகிஸ்தான் மத்திய அமைச்சர்கள், உயரதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கனடா: முடிவுக்கு வருகிறது லாரி ஓட்டுநர்கள் போராட்டம்

கனடாவில் நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டிருந்த நிலையில் கட்டாய தடுப்பூசிக்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்டு வந்த லாரி ஓட்டுநர்கள் போராட்டம் முடிவுக்கு வருகிறது.

கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு செல்லும் லாரி ஓட்டுநர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் மற்றும் அமெரிக்காவில் இருந்து கனடா திரும்பும் லாரி ஓட்டுநர்களும் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என கனடா அரசு அறிவித்தது.

தடுப்பூசி கட்டாயம் என்ற உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கனடாவில் லாரி ஓட்டுநர்கள் கடந்த சில நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 

போராட்டத்தின் ஒரு பகுதியாக கனடா – அமெரிக்காவை இணைக்கும் முக்கிய பாலமான தி அம்பாசிடர் பாலத்தை போராட்டக்காரர்கள் முடக்கினர்.

இதையடுத்து, அந்த மேம்பாலம் மூடப்பட்டது. இதனால் இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது

அதன்பின்னர், அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதன் மூலம் போராட்டக்காரர்களை சிறையில் அடைக்கவும் அவர்களுக்கு அபராதம் விதிக்கவும், நாட்டின் முக்கியமான உள்கட்டமைப்புகளை பாதுகாக்கவும் காவல்துறைக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டது. இதனால் வடக்கு டகோட்டாவுக்கு எதிரே உள்ள எமர்சன், மனிடோபாவிலிருந்து போராட்டகாரர்கள் வெளியேறி வருகின்றனர். 

அமெரிக்க எல்லையில் எஞ்சியிருந்த கடைசி முற்றுகையை போராட்டகாரர்கள் வெளியேறி வருகின்றனர். இதனால், கனடா – அமெரிக்கா இடையேயான போக்குவரத்து சீராகியுள்ளது மேலும் கனடா – அமெரிக்கா எல்லை மீண்டும் திறக்கப்படும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest International news download Indian Express Tamil App.

Web Title: Tamil world news bill gates meets pak pm imran khan413254