பிரேசிலில் மழை, வெள்ளம்: பலி எண்ணிக்கை உயர்வு
தென்அமெரிக்க நாடான பிரேசிலில் பருவநிலை மாற்றம் காரணமாக கனமழை, வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடர்கள் அடிக்கடி நிகழ்கின்றன. சமீபத்தில் பெய்த மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 78 பேர் உயிரிழந்துள்ளனர்
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ மாகாணத்தில் நேற்று முன்தினம் இடைவிடாது கனமழை பெய்தது. 30 நாட்கள் பெய்ய வேண்டிய மழை வெறும் 3 மணி நேரத்தில் பெய்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
இப்படி ஒரே நாளில் கொட்டித் தீர்த்த பேய் மழையால் மாகாணத்தில் உள்ள பெரும்பாலான நீர்நிலைகளில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
பலத்த மழையால் அங்குள்ள பல்வேறு நகரங்களில் வெள்ளம் கரை புரண்டோடுகிறது. இதில் ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின.
சாலைகளில் வெள்ளம் ஆறாக பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியுள்ளது. மேலும் சாலைகளில் நிறுத்தப்பட்டிருந்த ஏராளமான வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி நாசமாகின. வெள்ளம், நிலச்சரிவு பாதித்த பகுதிகளில் நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டன.
இதுவரையில், வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 78 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிளில் மீட்பு பணிகள் தொடர்ந்து வரும் நிலையில், பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இதனிடையே ரஷியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரேசில் அதிபர் ஜெயீர் போல்சனரோ, ரியோ டி ஜெனிரோ மழை பாதிப்பு குறித்து டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் “பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு கடவுள் ஆறுதல் அளிக்கட்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை உடனடியாக வழங்குமாறு மந்திரிகள் மற்றும் அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளேன்” என குறிப்பிட்டுள்ளார்.
பாலியல் புகார் கூறிய பெண்ணுக்கு ரூ.120 கோடி
பாலியல் பலாத்கார குற்றச்சாட்டை முன்வைத்த பெண்ணுக்கு ரூ.120 கோடி தந்து அரசக் குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் ஆண்ட்ரூ சமரசம் செய்துகொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத், இளவரசர் பிலிப் தம்பதியரின் இளைய மகன், இளவரசர் ஆண்ட்ரூ (வயது 61). இவர் கடந்த 2001-ம் ஆண்டு வர்ஜீனியா கியூப்ரே என்ற 17 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார் என்று குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக அந்தப் பெண் தரப்பில் நியூயார்க் நகர கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்து வரும் ஆண்ட்ரூ, தன் மீதான பாலியல் புகாரை தள்ளுபடி செய்ய வேண்டும் என கோர்ட்டில் முறையிட்டார்.
ஆனால் அவர் தன்மீதான பாலியல் பலாத்கார வழக்கில் விசாரணையை சந்தித்துத்தான் ஆக வேண்டும் என கடந்த மாதம் நியூயார்க் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது.
இலங்கையில் எரிசக்தி தட்டுப்பாடு; 40,000 மெட்ரிக் டன் எரிபொருள் அளித்து உயிர்கொடுத்த இந்தியா
ராணி இரண்டாம் எலிசபெத் அரியணை ஏறியதன் 70-வது ஆண்டை அரச குடும்பம் கொண்டாடி வரும் இந்த நேரத்தில், அரச குடும்பத்துக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி உள்ள இந்த வழக்கை சுமுகமாக தீர்க்க இளவரசர் ஆண்ட்ரூவுக்கு ராணி 2-ம் எலிசபெத் மற்றும் இளவரசர் சார்லஸ் அழுத்தம் கொடுத்து வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் தன் மீதான பாலியல் வழக்கை முடிவுக்கு கொண்டு வர இளவரசர் ஆண்ட்ரூ வர்ஜீனியா கியூப்ரேவுடன் சமரசம் செய்து கொண்டதாகவும், அதன் ஒரு பகுதியாக வர்ஜீனியா கியூப்ரே நடத்தி வரும் தொண்டு நிறுவனத்துக்கு 16 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.120 கோடி) வழங்க அவர் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
உலகளவில் கொரோனா பாதிப்பு குறைவு: உலக சுகாதார அமைப்பு தகவல்
உலகளவில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த வாரத்தில் உலகம் முழுவதும் 1 கோடியே 60 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. 75 ஆயிரம் பேர் தொற்றுக்கு பலியாகி உள்னனர். உலகளவில் ஒரு வார கால தொற்று பாதிப்பு 19 சதவீதம் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. ஆஸ்திரேலியா, கம்போடியா, சீனா, பிஜி, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட 37 நாடுகளைக் கொண்ட மேற்கு பசிபிக் பிராந்தியத்தில் தொற்று பாதிப்பு 19 சதவீதம் அதிகரித்துள்ளது.
தென்கிழக்கு ஆசியாவில் 37 சதவீதம் சரிவு அடைந்துள்ளது. உலகளவில் இது மிகப்பெரும் சரிவு ஆகும். மத்திய கிழக்கு நாடுகளில் கொரோனா இறப்பு 38 சதவீதம் அதிகரித்துள்ளது.
புதிய பாதிப்புகள் ரஷியாவில் ஏற்பட்டுள்ளது. கிழக்கு ஐரோப்பாவில் பாதிப்புகள் சமீப வாரங்களில் இரு மடங்கு ஆகி உள்ளது. இது ஒமைக்ரான் வைரசால் வந்த வினை ஆகும்.
ஆல்பா, பீட்டா, டெல்டா உள்ளிட்ட உருமாறிய கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்ந்து வீழ்ந்துள்ளது. ஒமைக்ரான் தொற்று அவற்றை வெளியேற்றி உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் பயங்கரவாத தடைச் சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தல்
பயங்கரவாத தடைச் சட்டத்தை திரும்பப் பெறுமாறு இலங்கை அரசை மனித உரிமைகள் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
இலங்கையில் கடந்த 1979-ம் ஆண்டு பயங்கரவாத தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாக ஒருவரை சந்தேகத்தின்பேரில் விசாரணையின்றி கைது செய்ய இந்த சட்டம் வகை செய்கிறது. இதனால் அப்பாவிகள் பலர் இந்த சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்டு வருகின்றனர்.
எனவே இந்த சட்டத்தை நீக்க வேண்டும் என்று அங்குள்ள தமிழர்கள், முஸ்லிம்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது தொடர்பாக தற்போது கையெழுத்து இயக்கம் ஒன்றையும் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், சர்ச்சைக்குரிய இந்த சட்டத்தை திரும்பப்பெற வேண்டும் என இலங்கை அரசுக்கு அந்த நாட்டு மனித உரிமை ஆணையம் வலியுறுத்தி உள்ளது.
இது குறித்து அந்த ஆணையத்தின் தலைவரான நீதிபதி ரோகிணி மாரசிங்கே கூறுகையில், ‘இந்த சட்டத்தின் மூலம், அரசியல்-சித்தாந்தம் அல்லது மத காரணத்திற்காக அப்பாவி பொதுமக்களை குறிவைப்பது வெளிப்படையாக உள்ளது’ என்றார்.
முன்னதாக ஐரோப்பிய கூட்டமைப்பு மற்றும் ஐ.நா. மனித உரிமை ஆணையம் போன்றவை இந்தச் சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து, இந்த சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படும் என இலங்கை அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
உக்ரைன் போர் பதற்றம்: ஜப்பான்–பிரிட்டன் பிரதமர்கள் ஆலோசனை
உக்ரைனில் போர் பதற்றம் நிலவிவரும் சூழலில் அந்த விவகாரம் தொடர்பாக ஜப்பான் மற்றும் பிரிட்டன் பிரதமர்கள் ஆலோசனை நடத்தினர்.
ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே பல ஆண்டுகளாக எல்லைப்
பிரச்சினை உள்ளது.
உக்ரைனின் கிரிமியா தீபகற்பத்தை 2014ம் ஆண்டு ரஷியா கைப்பற்றியது. இதனை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையான மோதல் அதிகரித்து வருகிறது.
உக்ரைன் எல்லையில் கடந்த ஆண்டு நவம்பர் முதல் ரஷியா தனது படைகளை குவித்தது. 1 லட்சத்திற்கும் அதிகமான வீரர்களை உக்ரைன் எல்லையில் ரஷியா குவித்தது. இதனால், உக்ரைன் மீது ரஷியா படையெடுக்கலாம் என்ற அச்சம் நிலவி வந்தது.
ரஷியா படையெடுக்கும் பட்சத்தில் உக்ரைனுக்கு ஆதரவளிப்போம் என அமெரிக்கா, நேட்டோ படைகள் தெரிவித்தன.
இதனால், ரஷியா – உக்ரைன் எல்லையில் போர் பதற்றம் அதிகரித்து வந்தது. போர் பதற்றத்தை தணிக்க பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்றன.
இந்த சூழ்நிலையில், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடோ மற்றும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தொலைபேசி மூலம் ஆலோசனை நடத்தினர்.
அப்போது உக்ரைன் விவகாரத்தில் போர் பதற்றத்தை தணிப்பதற்கான முயற்சியில் இருநாடுகளும் இணைந்து செயல்பட போவதாகவும், உக்ரைனின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கான தங்கள் நிலையான ஆதரவை இருநாட்டு தலைவர்களும் தெரிவித்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“