Advertisment

ரஷியா மீது அமெரிக்க அதிபர் குற்றச்சாட்டு.. ஐரோப்பாவை தாக்கிய புயல்.. மேலும் உலகச் செய்திகள்

இதுதொடர்பாக பல்வேறு வழக்குகளை பதிவு செய்த இலங்கை போலீசார், இது தொடர்பாக ஏராளமானோரை கைது செய்து விசாரித்தனர்.

author-image
WebDesk
New Update
ரஷியா மீது அமெரிக்க அதிபர் குற்றச்சாட்டு.. ஐரோப்பாவை தாக்கிய புயல்.. மேலும் உலகச் செய்திகள்

தவறான தகவலை அளித்தது ரஷியா-அமெரிக்கா குற்றச்சாட்டு

Advertisment

உக்ரைன் மீது தாக்குதல் நடத்துவதற்காக ரஷியா தவறான தகவல்களை அளித்தது என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் குற்றம்சாட்டியுள்ளார்.

வெள்ளை மாளிகையில் ரஷியா-உக்ரைன் விவகாரம் தொடர்பாக அதிபர் பைடன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

உக்ரைன் விவகாரத்தில் ரஷியா, உக்ரைன் மீது படையெடுப்பதற்காக  தவறான தகவல்களை அளித்துள்ளது. மேலும் தவறான தகவல்கள் ரஷிய மக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளன.  

ரஷியாவின் 40 சதவீத ராணுவ படைகள் தாக்குதல் நடத்த உக்ரைன் எல்லையில் முகாமிட்டுள்ளன. கடந்த வாரம் சில படைகளை ரஷியா பின் வாங்கியிருந்தாலும் இப்போதும் அங்கு 1,50,000 படைகள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

ரஷிய அதிபர் புதின், உக்ரைன் மீது அடுத்த வாரம் அல்லது அடுத்த சில தினங்களில் தாக்குதலை தொடங்கலாம். ரஷியா உக்ரைனின் தலைநகரான கையிவ் நகரத்தை விரைவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும்.

இன்னும் காலம் கடந்து போகவில்லை, ரஷிய அதிபர் புதின் அமைதி பேச்சுவார்த்தைக்கு வரலாம். 

அமெரிக்கா மற்றும் கூட்டணி நாடுகள் உக்ரைன் மக்களுக்கு துணை நிற்கும். ரஷியா மீது கடுமையான நடவடிக்கைகள் மற்றும் தடைகள் தொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும் என்று தெரிவித்தார்.

ஐரோப்பாவில் யூனிஸ் புயல்: 8 பேர் பலி

ஐரோப்பிய நாடுகளில் யூனிஸ் புயல் தாக்கியதில் 8 பேர் உயிரிழந்தனர்.

யூனிஸ் புயல் இங்கிலாந்தைத் தாக்கியதால் நாடு முழுவதும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கடந்த 32 வருடங்களில் இல்லாத அளவில் மிக மோசமான புயலாக யூனிஸ் புயல் கருதப்படுகிறது. இங்கிலாந்தின் வைட் தீவில் மணிக்கு 122 மைல் வேகத்தில் காற்று வீசியது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

யூனிஸ் புயல் காரணமாக  ஆயிரக்கணக்கான வீடுகளுக்கு மின்சாரம் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. பள்ளிகள் மற்றும் வணிக வளாகங்கள் மூடப்பட்டுள்ளன. அப்பகுதிகளுக்கான பேருந்து மற்றும் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. விமான சேவையும்  நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

புயலின் தாக்கம் நெதர்லாந்து, பிரான்சு, ஜெர்மனி, அயர்லாந்து ஆகிய நாடுகளிலும் உண்டானது. யூனிஸ் புயலால் ஐரோப்பிய நாடுகளில் பெருமளவு சேதம் ஏற்பட்டுள்ளது.

இந்த புயலால் இதுவரை 8 பேர் உயிரிழந்தனர். லண்டனில் இரண்டு பேர், ஹாம்ப்ஷயரில் ஒருவர், நெதர்லாந்தில் 3 பேர், பெல்ஜியத்தில் ஒருவர், அயர்லாந்தில் ஒருவர் என மொத்தம் 8 பேர் உயிரிழந்தனர்.

புயலால் ஐரோப்பா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

ஆப்கன்: ஆழ்துளைக் கிணற்றில் தவறி

விழுந்த சிறுவன் உயிரிழந்த சோகம்

ஆப்கானிஸ்தானின் ஜாபுல் மாகாணத்தின் ஷோகாக் கிராமத்தில் சமீபத்தில் தோண்டப்பட்ட ஆழ்துளை கிணற்றில் கடந்த செவ்வாய்க்கிழமை 6 வயது சிறுவன் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தான்.

25 மீட்டர் ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில் 10 மீட்டர் ஆழத்தில் சிறுவன் சிக்கிக் கொண்டான். இதை தொடர்ந்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் கயிறு கட்டி சிறுவனை மீட்க முயன்றனர்.

அவர்களின் இந்த முயற்சி பலனளிக்காமல் போனதோடு, அங்கு நிலைமையை மோசமாக்கியது. அதை தொடர்ந்து ஜே.சி.பி. உள்ளிட்ட எந்திரங்கள் வரவழைக்கப்பட்டு மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டன. ஆனாலும் மீட்பு குழுவினரால் சிறுவனை நெருங்க முடியவில்லை.

அதே சமயம் சிறுவன் சுயநினைவுடன் இருப்பதை உறுதி செய்ய, அவனது தந்தை சிறுவனிடம் பேச்சு கொடுத்தவாறு இருந்தார். சிறுவனும் தந்தையுடன் பேசி வந்தான். ஆனால் நேற்று முன்தினம் காலை முதல் சிறுவனிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.

இம்ரான் கானை சந்தித்த பில் கேட்ஸ்.. அமெரிக்க தூதரக அதிகாரி வெளியேற்றம்.. மேலும் செய்திகள்

இந்த நிலையில் 4 நாள் போராட்டத்துக்கு பின் நேற்று மதியம் ஆழ்துளை கிணற்றில் இருந்து சிறுவன் மீட்கப்பட்டான். சிறுவனை காபூலில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல ஹெலிகாப்டர் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. ஆனால் ஆழ்துளை கிணற்றில் இருந்து மீட்டதும், அவனை பரிசோதித்த டாக்டர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் மீட்பு குழுவினரின் 4 நாள் போராட்டம் தோல்வியில் முடிந்தது.

இந்தத் தகவல் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா: குணமடைந்தோர் எண்ணிக்கை 34.64 கோடியாக உயர்வு

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 34.64 கோடியாக உயர்ந்துள்ளது.

சீனாவின் வூகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 221 நாடுகளுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42 கோடியே 19 லட்சத்து 44 ஆயிரத்து 104 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 6 கோடியே 95 லட்சத்து 59 ஆயிரத்து 746 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 34 கோடியே 64 லட்சத்து 92 ஆயிரத்து 418 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 58 லட்சத்து 91 ஆயிரத்து 940 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஈஸ்டர் தின குண்டுவெடிப்பு வழக்கு:

இலங்கையின் உயர் அதிகாரிகள்  விடுதலை

ஈஸ்டர் தின குண்டுவெடிப்பு வழக்கில் இலங்கை உயர் அதிகாரிகள் 2 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

இலங்கையில் கடந்த 2019-ம் ஆண்டு ஈஸ்டர் தினமான ஏப்ரல் 21-ந் தேதி 3 தேவாலயங்கள் மற்றும் ஆடம்பர ஓட்டல்களில் தொடர் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. தவ்ஹீத் ஜமாத் பயங்கரவாதிகள் நடத்திய இந்த மனித வெடிகுண்டு தாக்குதலில், 11 இந்தியர்கள் உள்பட சுமார் 270 பேர் உயிரிழந்தனர்.

இந்த விவகாரத்தில் பல்வேறு வழக்குகளை பதிவு செய்த இலங்கை போலீசார், இது தொடர்பாக ஏராளமானோரை கைது செய்து விசாரித்தனர்.

இந்த தாக்குதல் குறித்து முன்கூட்டியே உளவுத் துறை தகவல் கிடைத்தும் அலட்சியமாக இருந்ததாக அப்போதைய காவல் துறை தலைவர் புஜித் ஜெயசுந்தரா, பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் ஜாமீனில் விடுதலை ஆன அவர்கள் இருவரும் பணியில் இருந்து நீக்கப்பட்டனர். அவர்கள் மீதான வழக்கு கொழும்பு ஐகோர்ட்டில் நடந்து வந்தது.

இந்த வழக்கில் தற்போது ஜெயசுந்தரா மற்றும் பெர்னாண்டோ ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகளை ரத்து செய்துள்ள ஐகோர்ட்டு, இருவரையும் இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்து நேற்று உத்தரவிட்டது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

World News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment