உக்ரைன் மீது ரஷ்யா போரை தொடங்கிய நாள் முதல் அங்கு வசித்து வந்த வெளிநாட்டினர் உயிருக்கு பயந்து நாட்டை விட்டு வெளியேற தொடங்கினர்.
இந்த நிலையில் 10 ஆயிரம் இந்தியர்கள் உள்பட 1 லட்சத்து 30 ஆயிரம் வெளிநாட்டினர் நாட்டை விட்டு பாதுகாப்பாக வெளியேற உதவியதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், பிப்ரவரி 24 அன்று ரஷ்ய படைகள் உக்ரைனுக்குள் நுழைந்ததில் இருந்து தங்கள் நாட்டிற்குள் நுழைந்த மக்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியுள்ளதாக போலந்து எல்லைக் காவலர்கள் தெரிவித்துள்ளனர்.
எல்லை தாண்டி வரும் உக்ரேனியர்களை தங்க வைக்க போலந்தில் தற்காலிக தங்கும் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ரஷ்யாவில் சேவைகளை நிறுத்தியது டிக்டாக்
உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு தடைகளை உலக நாடுகள் ரஷியாவுக்கு விதித்து உள்ளன.
அதில் மேலும் ஒரு அடியாக அமெரிக்காவின் பண பட்டுவாடா நிறுவனங்களான விசா மற்றும் மாஸ்டர் கார்டு ஆகியவை ரஷியாவில் தங்களுடையை சேவையை நிறுத்தி உள்ளன.
இதனால் ரஷியாவில் இந்த கார்டுகளை பணம் எடுப்பதற்கு பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ரஷ்யாவில் தங்களது ஒளிபரப்பு சேவையை நிறுத்தி உள்ளதாக டிக்டாக் நிறுவனம் அறிவித்துள்ளது. உக்ரைனுக்கு எதிரான சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, ரஷ்யாவில் எங்கள் பதிவேற்றங்கள் மற்றும் நேரடி ஒளிபரப்பு சேவையை இடைநிறுத்த முடிவு செய்துள்ளோம் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவை கண்டித்து கஜகஸ்தானில் போராட்டம்
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் ராணுவ வீரர்கள், பொதுமக்கள் என பலர் உயிரிழந்தனர். உலக நாடுகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தும், ரஷ்யா போரை நிறுத்தவில்லை.
இதனால், பல நாடுகள் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகள் விதித்து வருகின்றன.
இந்த நிலையில், ரஷ்யாவின் கொடூர தாக்குதலை கண்டித்து கஜகஸ்தான் நாட்டின் அல்மாட்டி நகரில் சோவியத் ஒன்றிய நிறுவனர் விளாடிமிர் லெனின் சிலை முன்பு ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள் ரஷ்யாவின் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர்.
உக்ரைன் - ரஷ்யா இடையே இன்று 3-ம் கட்ட பேச்சுவார்த்தை
சோவியத் யூனியனின் அங்கமாக திகழ்ந்த உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 12 நாட்கள் ஆகிவிட்டன.
அந்த நாட்டின் முக்கிய நகரங்கள் அத்தனையையும் ஏவுகணை வீச்சு, வான் தாக்குதல், பீரங்கி தாக்குதல் என நடத்தி உருக்குலைய வைத்து வருகிறது ரஷ்யா.
இந்நிலையில், உக்ரைன், ரஷியா இடையே மூன்றாவது சுற்று அமைதி பேச்சுவார்த்தை திங்கட்கிழமை (இன்று) நடைபெறும் என்று உக்ரைன் தூதுக் குழுவை சேர்ந்த டேவிட் அராகாமியா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த கூடுதல் விவரங்கள் வெளியிடப்படவில்லை.
உக்ரைன் அதிபரை கொலை செய்ய 3 முறை முயற்சி
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை கொல்ல 3 முறை முயற்சி நடந்ததாக அமெரிக்காவில் இருந்து வெளியாகும் பிரபல நாளிதழ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
உக்ரைன் அதிபரை கொல்ல வாக்னர் குழு மற்றும் செச்சென் கிளர்ச்சியாளர்கள் என இரண்டு வெவ்வேறு கொலைக் குழுக்கள் அனுப்பப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உக்ரைனின் தேசிய பாதுகாப்பு மற்றும் ராணுவ கவுன்சில் செயலாளர் ஒலக்சி டனிலோவ் கூறுகையில், ரஷ்ய கூட்டாட்சி பாதுகாப்பு சேவை அமைப்பு கொலை முயற்சி குறித்து தங்களுக்கு முன் கூட்டியே தகவல் கொடுத்ததாகவும், உக்ரைன் அதிபரை கொலை செய்ய வந்த படையினர் தலைநகர் கீவ் அருகே உள்ள புறநகர் பகுதியில் கொல்லப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த வாரத்தில் 3 முறை நடந்த கொலை முயற்சிகளில் உக்ரைன் அதிபர் தப்பியுள்ளார்.
மக்கள் வசிக்கும் பகுதிகளில் ஏவுகணை தாக்குதல் – உக்ரைன் குற்றச்சாட்டு
உக்ரைனுடன் போரை விரும்பாத ரஷ்ய கூட்டாட்சி பாதுகாப்பு சேவை அமைப்பில் உள்ள சிலர் கொலை முயற்சி பற்றிய தகவலை உக்ரைனிடம் முன் கூட்டியே கூறியது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.