கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூளையில் திசுக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. கொரோனா பாதிக்கப்படுவதற்கு முன்பும் பாதிக்கப்பட்ட பிறகும் எடுக்கப்பட்ட ஸ்கேனை கொண்டு இந்த ஆய்வு முடிவு வெளியிடப்பட்டது
ஸ்கேனில் மூளையில் பாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. 51 வயது முதல் 81 வயதுக்குள்ளப்பட்டவர்கள் ஆய்வில் உள்படுத்தப்பட்டனர். இதில், வாசனையை உணரும் பகுதி உள்பட மூளையின் சில பகுதிகளில் கொரோனா மாற்றத்தை ஏற்படுத்தியிருப்பது கண்டறியப்பட்டது.
இந்த ஆய்வு அறிக்கை நேச்சர் ஆங்கில இதழில் வெளியானது.
போரை தற்காலிகமாக நிறுத்துவதாக ரஷியா மீண்டும் அறிவிப்பு
இந்தியர்கள் வெளியேற உக்ரைனின் சுமி நகரில் தற்காலிகமாக தாக்குதல்களை நிறுத்துவதாக ரஷியா அறிவித்துள்ளது.
சுமி நகரில் இருந்து இந்தியர்கள் வெளியேற தேவையான மனிதாபிமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என உக்ரைன் மற்றும் ரஷ்யா என இருதரப்பையும் இந்தியா கேட்டுக்கொண்டது.
இரு நாடுகளின் தலைவர்களிடமும் பிரதமர் மோடி தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த நிலையில் தலைநகர் கீவ், கார்கிவ், மரியுபோல் மற்றும் சுமி ஆகிய 4 நகரங்களிலும் போரை தற்காலிகமாக நிறுத்துவதாக ரஷியா நேற்று அறிவித்தது.
அந்த நகரில் சிக்கியுள்ளவர்களை பாதுகாப்பாக வெளியேறவும், மருந்து, உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்கான வாய்ப்புகளுக்காகவும் மனிதாபிமான அடிப்படையில் போரை நிறுத்துவதாக ரஷ்யா அறிவித்தது.
மனிதாபிமான அடிப்படையில் இந்தியர்கள் வெளியேற உதவுவதற்காக போர் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக இந்தியாவில் உள்ள ரஷ்ய தூதரகம் தெரிவித்துள்ளது.
சுமி பகுதியில் உள்ள இந்தியர்கள் வெளியேற உதவ ரஷ்யாவுக்கு இந்தியா கோரிக்கை விடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
நாங்கள் உங்கள் அடிமைகளா? இம்ரான் கான் ஆவேசம்
உக்ரைன் மீது ரஷ்யா போர் புரிந்துவருகிறது. இரு தரப்பு மோதலில் ராணுவ வீரர்களும், மக்களும் உயிரிழந்து வருகின்றனர். இதற்கிடையில், உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், ரஷ்யாவின் தாக்குதலை கண்டிக்க வேண்டும் என்றும், ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த மார்ச் 1 அன்று ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் உட்பட 22 தூதரகங்களின் தலைவர்கள் பாகிஸ்தானுக்கு ஒரு கூட்டுக் கடிதத்தை வெளியிட்டனர்.
இதுதொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறுகையில்,
“எங்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? நாங்கள் உங்கள் அடிமைகளா… நீங்கள் என்ன சொன்னாலும் நாங்கள் செய்ய வேண்டுமா?” ஐரோப்பிய யூனியன் தூதர்களிடம் நான் ஒன்றை கேட்க விரும்புகிறேன். நீங்கள் இந்தியாவுக்கு இப்படி ஒரு கடிதம் எழுதினீர்களா?” இந்தியாவும் இந்த வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.
பாகிஸ்தான் எப்போதும் நடுநிலையாக இருக்கும். இரு நாடுகளுக்கு இடையேயான போரை முடிவுக்கு கொண்டுவர முயற்சி செய்யும் நாடுகளுடன் இணைந்து செயல்படுவோம்” என்றார்.
1,207 கி.மீ. தனியாக பயணம் செய்த சிறுவன்!
உக்ரைன் மீதான ரஷ்யா தாக்குதலில் 17 லட்சம் பேர் அகதிகளாக வேறு நாடுகளில் தஞ்சம் அடைந்து உள்ளனர்.
ரஷ்ய படைகள் சபோரிஜியாவில் உள்ள மின் உற்பத்தி நிலையத்தை தாக்கினர். இதானால் சபோரிஜியாவில் இருந்த ஜூலியா என்பவர் தனது 11 வயது மகன் பிரேவ் ஹசனையாவது காப்பாற்ற வேண்டுமென கருதி 750 மைல் (1,207 கி.மீ) தூரத்தில் உள்ள சுலோவாகியாவுக்கு தனியாக அனுப்பி வைத்தார்.
ஹசன் தனது பாஸ்போர்ட், அம்மாவின் எழுதி கொடுத்த கடிதம் மற்றும் கையின் பின்புறத்தில் எழுதப்பட்ட தொலைபேசி எண்ணுடன் மட்டுமே போரால் பாதிக்கப்பட்ட அந்த நகரை விட்டு வெளியேறினார்.
சிறுவன் ஹசன் 750 மைல்களுக்கு மேல் பயணம் செய்து சுலோவாக்கியா எல்லையை சென்றடைந்தார். அங்கிருந்த தன்னார்வலர்கள் சிறுவன் வைத்திஇருந்த கடிதத்தைப் படித்துவிட்டு, அவரது கையில் எழுதப்பட்ட எண்ணை தொடர்பு கொண்டு , அவர்களது தலைநகரான பிராட்டிஸ்லாவாவில் உள்ள சிறுவனின் உறவினர்கள் அவரை அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்தனர்.
அதிகாரிகள் சிறுவனுக்கு சூடான உணவையும், பானத்தையும் கொடுத்தனர், பின்னர் அவரது “புன்னகை, அச்சமின்மை மற்றும் உறுதிப்பாட்டிற்கு” பாராட்டு தெரிவித்தனர்.
300 அகதிகளுடன் சென்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்து
அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் குழப்பங்களை சந்தித்து வரும் கரீபியன் தீவு நாடான ஹைதியில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் அகதிகளாக வெளியேறி வருகின்றனர்.
பொருளாதாரம், வாழ்வாதாரத்தை தேடி ஹைதியில் இருந்து கடல் வழியாக அந்நாட்டு மக்கள் அமெரிக்காவுக்குள் நுழைய முயற்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஹைதியில் இருந்து 300-க்கும் மேற்பட்ட அகதிகளுடன் நேற்று அமெரிக்கா நோக்கி படகு ஒன்று பயணம் செய்தது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்திற்கு உள்பட்ட கடல்பரப்பில் அந்த படகு வந்த போது எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படகில் பயணம் செய்த அனைவரும் கடலில் மூழ்கினர்.
இந்த விபத்து குறித்து அமெரிக்க கடலோர காவல்ப்படைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கடலோர காவல்ப்படையினர் கடலில் தத்தளித்தவர்களை மீட்டனர்.
இதையும் படியுங்கள்: நெருக்கடி ஆழமடைகிறது, ‘இடைக்கால’ தந்திரங்கள்’ என மாஸ்கோ மீது உக்ரைன் குற்றச்சாட்டு!
அதிலும், அகதிகள் சிலர் நீந்தியே கரையை அடைந்தனர். மேலும், படகு விபத்தில் வேறு யாரேனும் கடலில் மூழ்கியுள்ளனரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளதால் தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு 400 மக்கள் பலி
ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். அந்நாட்டின் பொருளாதார சூழ்நிலை மிகவும் மோசமடைந்து வருகிறது.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் நடைபெற்ற தாக்குதல்களில் பொதுமக்கள் சுமார் 400 பேர் உயிரிழந்துள்ளனர் என ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதல்கள் பெரும்பாலும் ஐஎஸ் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“