உடல் எடை குறைப்பு குறித்து உங்கள் மனதில் இருக்கிறதா? இது தொடர்பாக ஒரே வழிமுறையை பின்பற்றினால் உங்களுக்கு விரைவாக சலிப்பு ஏற்பட்டு விடும் என்று மருத்துவர் மல்ஹர் கன்லா தெரிவித்துள்ளார். இது குறித்த சில தகவல்களை அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து கொண்டார்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Obesity reversal specialist shares 5 ways to reduce 15-25 kilos in a year: ‘You get bored’
துரித உணவு கட்டுப்பாடு
இதற்கான முயற்சியின் முதல் மாதத்தில் இருந்து உணவகங்களில் சாப்பிடுவதை கைவிடுங்கள். எண்ணெய் மற்றும் சுவையூட்டப்படும் பொருட்களை குறைத்துக் கொண்டால், உங்கள் உடல் எடையில் 3 முதல் 5 சதவீதம் குறையத் தொடங்கும்.
கார்போஹைட்ரேட் குறைப்பு
இரண்டாவது மாதத்தில் இருந்து கார்போஹைட்ரேட்களை குறைக்க வேண்டும். அரிசி, ரொட்டி மற்றும் இனிப்புகள் சாப்பிடுவதை பாதியாக குறைக்க வேண்டும். இந்த இரண்டு மாதங்களின் முடிவில், உங்கள் உடலின் இன்சுலின் அளவு பாதியாகிவிடும். இரண்டு மாத இறுதியில் ஒருவர் 8 - 10 கிலோவை குறைத்திருக்கலாம் என்று மருத்துவர் கன்லா கூறினார்.
இடைப்பட்ட உண்ணாவிரதம்
இப்போது தான் முக்கிய கட்டம் தொடங்கிகிறது. உங்களுக்கு பசிக்கும் போது மட்டுமே சாப்பிட வேண்டும். "இந்த கட்டம் 2-3 மாதங்கள் நீடிக்கும், இதற்குப் பிறகு, நீங்கள் 15 கிலோ எடையைக் குறைத்திருப்பீர்கள் " என்று மருத்துவர் கன்லா தெரிவித்தார்.
தசைகளுக்கான பயிற்சி மற்றும் புரதம்
உடற்பயிற்சி கூடங்களுக்கு சென்று தசைகளுக்கான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், புரதச் சத்தை சற்று அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த நிலையை சுமார் 2 முதல் 3 மாதங்கள் பின்பற்ற வேண்டும்.
தடகள பயிற்சி
ஓட்டம், நீச்சல், சைக்கிள் ஓட்டுதல், ஜூம்பா போன்ற நீங்கள் ரசிக்கும் உடல் தகுதி செயல்பாடுகளை இணைத்துக்கொள்ள வேண்டும் என்று மருத்துவர் கன்லா அறிவுறுத்துகிறார். இப்படி செய்யும் போது உடல் எடை சுமார் 20 கிலோ வரை குறையும் என்று அவர் கூறுகிறார்.
இந்த செயல்முறை பலன் அளிக்குமா?
இது குறித்த தகவல்களை மருத்துவர் பிரலி ஸ்வேதா நம்மிடையே பகிர்ந்து கொண்டார். குறிப்பாக, சீரான நடைமுறையை பின்பற்றுவதன் மூலம் ஒரு வருடத்தில் 25 கிலோ வரை எடையை குறைக்க முடியும் என்று அவர் கூறுகிறார்.
"துரித உணவுகளை குறைப்பதன் மூலம் அதிகமான கலோரிகள் மற்றும் ஆரோக்கியமற்ற கொழுப்புகளுடன் கூடிய கார்போஹைட்ரேட்களை குறைக்க முடியும். இதன் மூலம் இரத்தத்தில் சர்க்கரை அளவு சீராகி, கொழுப்பு சேர்வது குறையும். இடைப்பட்ட உண்ணாவிரதம் இருப்பது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும். எனினும், ஊட்டச்சத்து குறைபாடுகள் ஏற்படாத வகையில் பார்த்துக் கொள்ளுதல் அவசியம்" என்று அவர் கூறியுள்ளார்.
தசைகளை வலுவாக்கும் பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்க முடியும். மேலும், எடை குறைப்பின் போது தசை இழப்பை இது தடுக்கிறது. இதேபோல், தடகள பயிற்சிகளை மேற்கொள்ளும் போது இருதயம் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் மேம்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், உடல் எடை குறைப்பு வழிமுறைகள் அனைவருக்கும் ஒரே மாதிரியாக இருக்காது. உடல்நிலை, வாழ்க்கை முறை என ஒவ்வொருவருக்கும் ஏற்ற வகையில் இது மாறுபடுகிறது. "போதுமான புரதம், நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து கொண்ட சீரான உணவு மிகவும் அவசியம்" என மருத்துவர் பிரலி தெரிவித்தார்.