இஞ்சி -சமையலில் பயன்படுத்தப்படும் இஞ்சி பல்வேறு மருத்துவ குணங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. இஞ்சியில் கால்சியம், இரும்பு சத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம் உள்ளிட்ட தாது உப்புகள் உள்ளன. எ, பி, சி போன்ற வைட்டமின்களும் காணப்படுகின்றன.
பயன்
இஞ்சி சாறில், தேன் கலந்து தினசரி காலை ஒரு கரண்டி சாப்பிட்டு வர நோய் தடுப்பு திறன் கூடும். உற்சாகம் ஏற்படும். இளமை பெருகும். தேன் கலந்த இஞ்சி சாறு புற்றுநோய் தாக்கத்தில் இருந்து நல்ல பாதுகாப்பு வழங்கும். எப்படியெனில் இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுத்துவிடும்.
இஞ்சி சாறுடன், வெங்காய சாறு கலந்து ஒரு வாரம், காலையில் ஒரு கரண்டி வீதம் குடித்துவர நீரிழிவு குறையும்.
இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு, வெங்காய சாறு மூன்றையும் கலந்து ஒருவேளை அரை அவுன்ஸ் வீதம் சாப்பிட்டுவர ஆரம்ப கால ஆஸ்துமா, இரைப்பு, இருமல் குணமாகும்.
இஞ்சியை, தட்டி தேனீர் கொதிக்க வைக்கும் போது அதில் சேர்த்து கொதிக்க வைத்து தேனீர் பருகலாம். சுவையும் நன்றாக இருக்கும், உடலுக்கும் நல்லது.
சில சமையல் வகைகளில் இஞ்சியை மசித்துப் போட்டு செய்வார்கள். அதுபோன்ற உணவு வகைகள் வயிற்றைக் கெடுப்பதில்லை.
இஞ்சி தேன் கலவை செரிமானத்தை மேம்படுத்துவதோடு, வயிற்றில் தங்கியுள்ள கொழுப்பைக் கரைக்கும். இதனால் தொப்பை குறையும். நல்ல மாற்றத்திற்கு தொடர்ந்து 40 நாட்கள் இஞ்சி சாற்றில் தேன் கலந்து குடித்து வர வேண்டும்.
இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும். இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும். இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும். இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீரணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு ஏற்படும்.
காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடம்பு இளமை பெறும்.
பத்துகிராம் இஞ்சி, பூண்டு இரண்டையும் அரைத்து, ஒரு கப் வெந்நீரில் கலந்து காலை, மாலை இரண்டு நாட்கள் சாப்பிட மார்பு வலி தீரும்.
இஞ்சி அதிகம் சாப்பிடுவதால் வரும் தீமைகள்
இஞ்சிக்கு அஞ்சாதது எதுவுமே இல்லை, என்பது சித்த மருத்துவர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை. எந்த மாதிரியான நோயாக இருந்தாலும் அதற்கான மருந்தில் பெரும்பாலும் இஞ்சி இடம்பிடித்துவிடும். ஆனாலும் எதுவானாலும் எல்லாமே அளவு இருக்க வேண்டும்.
வயிற்றில் அல்சர் பிரச்சனை, சிறுகுடல் பாதிப்பு உள்ளவர்கள் இஞ்சி டீயை அதிகமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. ஏனெனில் அது பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடும்.
மருத்துவ மகத்துவம் கொண்ட இஞ்சியை தினமும் உணவில், சட்னி, பொங்கல் சேர்த்து பயன் பெறலாம். அப்படி செய்வதன் மூலம் உணவே மருந்தாகிவிடும். சக்தி நிறைந்த இஞ்சியின் தோல் பகுதி மட்டும் நஞ்சு போன்றது. தோலை நீக்கிவிட்டுத்தான் இஞ்சியை பயன்படுத்த வேண்டும்.
இஞ்சியை அதிகமாக குடிப்பதால், அது அமிலத் தன்மையை அதிகரிக்கச் செய்து, நெஞ்செரிச்சல், வயிற்று வலி பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
இஞ்சிக்கு உஷ்ணப்படுத்தும் குணம் உண்டு. பலவீனமான கர்ப்பிணிகள் மற்றும் அறுவை சிகிச்சை செய்தவர்கள் இஞ்சி டீயை அதிகமாக எடுத்துக் கொண்டால், அது உதிரப்போக்கை அதிகப்படுத்திவிடும்.
நோய்களால் பாதிக்கப்பட்டு, அதற்கு மருந்துகளை சாப்பிட்டு கொண்டிருக்கும்போது இஞ்சி டீயை குடிக்கக் கூடாது. ஏனெனில் அது மருந்துக்களுடன் வினைபுரிந்து பக்க விளைவுகளை ஏற்படுத்தும். இஞ்சியை அளவுக்கு அதிகமாக உட்கொள்ளக்கூடாது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.