எதார்த்த வாழ்வியல் சினிமாவில் மூழ்கி முத்தெடுத்தவர் இயக்குனர் சேரன். அவரது படங்கள் நம் வீட்டின் திண்ணைகளை பேசும்; அடுப்பாங்கரையை பேசும், உறவுகளின் அன்பை பேசும். குடும்பத்தோடு சென்று படம் பார்க்க வைக்கும் இயக்குனர்களின் லிஸ்ட்டில் எப்போதும் சேரனுக்கு மறுக்க முடியாத இடமுண்டு.
Advertisment
மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கு பெற்ற இயக்குனராக வலம் வந்த சேரன், பிக்பாஸ் 3வது சீசனில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியது. சிலருக்கு கோபத்தையும், வருத்தங்களையும் ஏற்படுத்தியது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில், நடிகர் சரவணன் அவரை ஒருமையில் பேசியதும், சிலர் அவரை கிண்டல் செய்வதுமாக இருக்க, இயக்குனர் வசந்தபாலன் கொந்தளித்தேவிட்டார். எனினும், எனது தேவைக்காக நான் பிக்பாஸில் பங்கேற்றேன் என சேரன் தன்னிலையை உணர வைத்தார்.
நிகழ்ச்சியில் வெற்றிப் பெறாவிட்டாலும் ஒரு நல்ல போட்டியாளராக வெளியே வந்தார்.
இந்நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக இன்று (மார்ச் 22) ஒருநாள் காலை 7 மணி முதல் இரவு 9 வரை சுய ஊரடங்குக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார். வீட்டை விட்டு எவரும் வெளியே வர வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது.
பிள்ளைகளை வீட்டில் வைத்துக் கொண்டு என்ன செய்வது என யோசிக்கும் பெற்றோருக்கு ஒரு வாய்ப்பை சேரன் அறிவித்துள்ளார்.
நாளை என்ற ஒரு நாளை நம்பிக்கை தரும் நாளாக மாற்ற ஒரு முயற்சி.. பெற்றோர்களும் நண்பர்களும் தங்கள்வீட்டில் இருக்கும் குழந்தைகளை அவர்களின் கனவுகளை அறிய அவர்களுக்கு நம்பிக்கைதரும் நாளாக மாற்ற முயல்வோம். எந்த பயமும் இன்றி நாளையப்பொழுதை அவர்களை கழிக்கசெய்து பயமின்றி எதிர்கொள்வோம் எதையும். pic.twitter.com/PrDHPoPOZ9
அதாவது, இன்று 15 வயதுக்குட்பட்ட பிள்ளைகள் தங்கள் தனித்திறமையை வெளிப்படுத்தும் ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளலாம். அப்பா இயக்குனர், அம்மா கேமரா மேன், பிள்ளைகளை நடிகர், நடிகைகள். வரைவது, கவிதை எழுதுவது, வீட்டை சுத்தம் செய்வது என்று எந்த வேலையாக இருந்தாலும், அதை மூன்று நிமிடங்கள் மிகாமல் பதிவு செய்து அனுப்புமாறு சேரன் கோரிக்கை விடுத்திருக்கிறார்.
சிறந்த 10 குழந்தைகள் சேரனால் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
அப்புறம் என்ன வெயிட்டிங்.... ஆயுதத்தை எடுங்க!!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”