நம் வீடுகளில் சமையலுக்கு பயன்படுத்தும் சுரைக்காயின் நன்மைகளை இப்போது பார்க்கலாம். சுரைக்காயை ஜூஸாக குடிக்கலாம் அல்லது சாம்பார் மற்றும் கூட்டுபொரியல்களில் பயன்படுத்தலாம். இதன் சுவை பெரும்பாலானோர்க்கு பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் உடலுக்கு அற்புதமான நன்மைகளைத் தரும். சுரைக்காயில் வைட்டமின்கள் சி மற்றும் கே , கால்சியம், ஃபைபர் மற்றும் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.
நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும்
நீரிழிவு நோயாளிகள் குறைந்த கிளைசெமிக் குறியீடைக்கொண்ட உணவுப்பொருட்களை எடுத்துக்கொள்வது நல்லது. சுரைக்காய் குறைந்த கிளைசெமிக் குறியீடைக்கொண்டதால் இது நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்தது. சுரைக்காய் கிளைசெமிக் குறியீடு 15 என்ற அளவில் உள்ளது. இதனை உணவாக எடுத்துக்கொள்வதால் இரத்தில் குறைந்த சக்கரை அளவை வெளியிடும். மேலும், இதில் ஃபைபர் உள்ளதால் இரத்தில் சர்க்கரை உறிஞ்சும் அளவை குறைக்கிறது. இந்த இரு செயல்பாடுகளும் நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகின்றன.
எடை குறைப்புக்கு உதவும்
குறைந்த கலோரிகள் மற்றும் அதிக நார்ச்சத்து உள்ளதால் எடை இழப்புக்கு ஏற்றதாக அமைகிறது. சுரைக்காயில் தண்ணீர் அதிகமாக உள்ளது. மேலும் ஒரு கிராமில் குறைந்த கலோரிகளை கொண்டுள்ளது. உங்களை நீண்ட நேரம் செயல்பாட்டில் வைக்ககூடிய நார்ச்சத்துக்களை கொண்டுள்ளது. இதனால், இது எடை இழப்புக்கு மிகவும் உதவுகிறது. சுரைக்காய் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துவதோடு நல்ல உறக்கத்தையும் தருகிறது.
ஞாபக சக்தியை மேம்படுத்தும் மன அழுத்தத்தை குறைக்கும்
ஞாபக சக்தியை தக்கவைப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் உதவுகிறது. மற்ற காய்கறிகளை விட சுரைக்காயில் அதிக அளவு கோலின் என்ற ஊட்டச்சத்து உள்ளது. இது மூளைச்செயல்பாடுகளில் ஞாபக சக்தியை மேம்படுத்தும் நரம்பியல்கடத்திகளுக்கு உதவுகிறது. கோலின் மன அழுத்தத்தை தடுப்பதோடு மன ஆரோக்கியம் தொடர்புடைய பல பிரச்சனைகளை தீர்க்க உதவுகிறது. இதிலுள்ள அதிகப்படியான நீர்ச்சத்து வயிற்றை குளிர்ச்சியாக வைப்பதால் உடல் வெப்பத்தையும் குறைக்கிறது.
கல்லீரல் பாதுகாப்பு
சுரைக்காயிலுள்ள ஆண்டிஆக்ஸிடண்ட் கல்லீரல் அழற்சிக்கு சிகிச்சையளிக்கிறது. உடல் உறுப்புகளில் கல்லீரல் மிக முக்கியமான ஒன்று. ஆண்டிஆக்ஸிடண்ட் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வதன் மூலம் கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்கலாம். மேலும், இது உடலிலுள்ள நச்சுக்களை நீக்கி கல்லீரலையும் சிறுநீரகத்தையும் பாதுகாக்கிறது.
பக்கவிளைவுகள்
இருப்பினும் அதிக அளவு சுரைக்காய் எடுத்துக்கொள்வது நல்லதல்ல. சமீப காலங்களில் சுரைக்காய் ஜூஸ் அதிகமாக குடிப்பதால் வயிற்றுபோக்கு, இரத்த வாந்தி, குமட்டல், வயிற்றுவலி, அல்சர் போன்ற பக்க விளைவுகள் ஏற்படுவது தெரியவந்துள்ளது. இதனால் சுரைக்காயை ஜூஸாக எடுத்துக்கொள்ளும்போது இனிப்பு சேர்த்துக்கொள்வது நல்லது. அதைவிட சமைத்த சுரைக்காயாக எடுத்துகொள்வது நல்லது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil