காலை உணவை பெரும்பாலானோர் எடுத்துக் கொள்வதில்லை. நேரமின்மையால் பெரும்பாலானோர் காலை உணவை தவிர்த்து விடுகின்றனர். காலை உணவை ஒரு ராஜாவை போல சாப்பிட வேண்டும், மதிய உணவை ஒரு மந்திரியை போல சாப்பிட வேண்டும் மற்றும் இரவு உணவை பிச்சைக்காரனை போல சாப்பிட வேண்டும் என்று கூறுவதை கட்டாயம் கடை பிடிக்க வேண்டிய சூழ்நிலையில் நாம் அனைவரும் உள்ளோம்.
இரவு சாப்பிட்ட பின் 6 முதல் 10 மணி நேரங்கள் வரை எதுவும் சாப்பிடாமல், நீண்ட இடைவெளிக்கு விடப்படுகிறது. எனவே உடலுக்கு தேவையான சக்திக்கு, காலையில் உணவு சாப்பிடுவது கட்டாயம். தற்போதைய ஆராய்ச்சிகள் காலை உணவைக் கண்டிப்பாக ஒதுக்கக் கூடாது என்பதை வலியுறுத்துகின்றன.
காலை உணவை தவிர்ப்பதன் விளைவாக ரத்தத்தில் சர்க்கரை அதிகரித்து, நீரிழிவு நோய் வர 20 சதவீதம் அதிகச் சாத்தியம் உள்ளதாக ஆராய்யில் அதிர்ச்சி தகவல்களும் வெளியாகியுள்ளன. காலையில் சாப்பிடாமல் இருந்தால் குறிப்பாக பெண்களுக்கு டைப்-2 சர்க்கரை வியாதி உண்டாவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
நீங்கள் காலை உணவை தவிர்க்கும் போது உங்களது உடலில் பசிக்கான ஹார்மோன் அதிகமாக தூண்டப்பட்டு விடுகிறது. இதன் காரணமாக நீங்கள் அதிகம் சாப்பிட வேண்டிய சூழ்நிலை உண்டாகிறது. இதனால் உங்களின் உடல் பருமன் அதிகரிக்கிறது.
காலை உணவை தொடர்ந்து புறகணித்து வருபவர்களுக்கு இதய நோய்கள் ஏற்பட வாய்ப்புண்டு என்பது ஆராய்ச்சியில் நிரூபிக்கப்பட்டுள்ளது. காலை வேளையில் உணவை தவிர்க்காமல் சாப்பிடுவதால், இதயம், ஜீரண மண்டலம் மற்றும் எலும்பு ஆகியவையும் ஆரோக்கியமாக இருக்கும்.
காலை உணவை தவிர்த்தால் மூளை செயல்பாடு குறையும்.ஒரு நாள் உழைக்க தேவையான எனர்ஜி மற்றும் செல்களுக்கு தேவையான சத்துக்கள் காலை உணவிலிருந்தே பெறப்படுகின்றன.காலையில் நாம் சாப்பிடும் உணவு தான், நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும், புத்துணர்ச்சியுடனும் செயல்பட, மூளை மற்றும் தசைகளுக்கு தேவையான சக்தியை அளிக்கிறது.