எலும்பு, பற்கள் ஆகியவை வலிமை அடைவதற்கு என்ன உணவுகளை சாப்பிடலாம் என்று இந்த செய்திக் குறிப்பில் காணலாம்.
நம் உடலில் 99 சதவீத கால்சியம் எலும்பு மற்றும் பற்களில் இருக்கிறது. ஒரு சதவீதம் மற்ற பாகங்களில் இருக்கிறது. இதன் முக்கிய பணியே எலும்பு மற்றும் பற்களை வலிமையாக வைத்திருப்பது தான். மேலும் தசைகள் சீராக இயங்குவதற்கும் கால்சியம் சத்து அவசியம்.
சுமார் 60 கிலோ எடை கொண்டவர்களுக்கு 1,000 மில்லி கிராம் கால்சியம் தேவைப்படும் என வல்லுநர்கள் கூறுகிறார்கள். பிரசவமாக இருப்பவர்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு 1,500 மில்லி கிராம் கால்சியம் தேவைப்படும்.
100 மில்லி லிட்டர் பாலில் 125 மில்லி கிராம் கால்சியம் இருக்கிறது. இதேபோல், ஒரு முட்டையில் 25 மில்லி கிராம் கால்சியம் இருக்கிறது. எனவே, புரதத்திற்கு மட்டுமல்லாமல் கால்சியத்திற்காகவும் முட்டை சாப்பிட வேண்டும்.
மீன்களிலும் கால்சியம் சத்து அதிகமாகவே இருக்கிறது. குறிப்பாக, 100 கிராம் மத்தி மீனில் 300 மில்லி கிராம் கால்சியம் இருக்கிறது. இதேபோல், பழங்கள் சாப்பிடுவதன் மூலமாகவும் கால்சியம் சத்தை பெற முடியும். 100 கிராம் ஆரஞ்சு பழத்தில் 40 மில்லி கிராம் கால்சியம் இருக்கிறது. 100 கிராம் அத்திப்பழத்தில் 160 மில்லி கிராம் கால்சியம் இருக்கிறது.
அசைவ உணவு சாப்பிடாதவர்கள் ராகி எடுத்துக் கொள்ளலாம். அதன்படி, 100 கிராம் ராகியில் 350 மில்லி கிராம் கால்சியம் காணப்படுகிறது. இருப்பதிலேயே எள்ளில் தான் அதிகப்படியான கால்சியம் இருக்கிறது. 100 கிராம் எள்ளில் 975 மில்லி கிராம் கால்சியம் இருக்கிறது.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.