இன்றைய உலகத்தில் பல தரப்பட்ட அலுவலகங்களில் இரவு நேர பணி அவசியமாகிறது. தொடர்ச்சியாக இரவு நேர பணிகளில் ஈடுபடுவதால் கருவுறுதலில் பிரச்சனைகள் ஏற்படுவதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இது குறித்து புனேவைச் சேர்ந்த மருத்துவர் பாரதி தொரேபாடில் தெரிவித்துள்ளார். அதன்படி, தொடர்ச்சியக இரவு நேரங்களில் வேலை பார்ப்பது கருவுறுதலில் பிரச்சனையை ஏற்படுத்துவதாக ஆய்வு முடிவுகள் கூறுவதாக அவர் விளக்கமளித்துள்ளார்.
பெண்களைப் பொறுத்தவரை மாதவிடாயில் மாற்றம், கருச்சிதைவு உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு இரவு நேர வேலை வழிவகுக்கும் எனக் கூறப்படுகிறது. ஆண்களைப் பொறுத்தவரை உயிரணுக்களில் பாதிப்பு, டெஸ்டோஸ்ட்ரோன் அளவில் மாற்றம் ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் இருந்து தற்காத்துக் கொள்ள வாழ்க்கை முறையில் சில மாற்றங்கள் செய்ய வேண்டுமென அறிவுறுத்தப்படுகிறது.
அதன்படி, சீரான தூக்கத்திற்கான சூழலை உருவாக்க வேண்டும். அறையில் வெளிச்சம் வராத வகையில் இரவு போன்றே பகல் நேரத்தில் தூங்க வேண்டும்.
இரவு நேரத்தில் கண்களில் அதிக ஒளி கொண்டு பார்க்காமல் இருத்தல் அவசியம். கண்களுக்கு தேவையான அளவு வெளிச்சத்தில் மட்டுமே பார்க்க வேண்டும். கணினி பயன்படுத்துபவர்கள் நீல நிற வெளிச்சத்தை தடுக்கும் கண்ணாடிகள் பயன்படுத்தலாம்.
ஆரோக்கியமான, ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது மிக அவசியம். காய்கறிகள், புரதம் நிறைந்த உணவுகள், தானியங்கள் ஆகியவற்றை தினசரி உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
தினசரி உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். எனினும், தூங்குவதற்கு முன்பாக அதிகப்படியான உடற்பயிற்சி மேற்கொள்ளக் கூடாது.
யோகா, மூச்சுப்பயிற்சி போன்றவை மன அழுத்தத்தை குறைக்க உதவும். இதனால், மனநலன் ஆரோக்கியமாக இருக்கும்.
சுழற்சி முறையில் பணியாற்றுவது நீண்ட நாள் இரவு பணிகளில் இருந்து பாதிப்பை தடுக்க உதவும். அதற்கு ஏற்றார் போல் வேலையை சீரமைத்துக் கொள்ள வேண்டும்.
வேலை பார்க்கும் போது தேவையான நேரங்களில் இடைவெளி எடுத்துக் கொள்ள வேண்டும். முடிந்தால் இரவு நேர பணிகளின் போது, குறைந்தபட்சம் சிறுது நேரம் தூங்கினால் உடலுக்கு சோர்வு குறையும்.
அதிகப்படியான வெளிச்சத்தை தவிர்த்து, தேவையான அளவிலான வெளிச்சத்தில் பணியாற்ற வேண்டும்.
பணியாற்றும் நிறுவனங்களின் உதவியை, இரவு நேர பணியாளர்கள் நாட வேண்டும். தேவைக்கேற்ப சுழற்சி முறையில் வேலை நேரத்தை மாற்றியமைக்க வேண்டும்.
இது போன்ற சிலவற்றை மேற்கொள்வதன் மூலம், இரவு நேரத்தில் அலுவலக பணியில் ஈடுபடுபவர்களுக்கு ஏற்படும் கறுவுறுதல் பிரச்சனைகளில் இருந்து தற்காத்துக் கொள்ள முடியும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.