பன்முக கலாச்சாரமும், பண்பாடும் கொண்டு இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள அனைத்து வெளிநாட்டினருக்கும் அதிக ஆர்வம் உண்டு.
இதேபோல கனடாவை சேர்ந்த கிளிண்டன், தனது மகன் நிக்கோலஸ், மகள் லில்லியன் ஆகியோருடன் கேரளா மாநிலம் கொச்சின் வழியாக இந்தியாவை வந்தடைந்தார். கேரளாவில் ஆட்டோ ரிக்ஷா ரன் இந்தியா என்ற அமைப்பு பற்றி கேள்விப்பட்டார். இந்த அமைப்பு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஆட்டோவில் அழைத்து சென்று சுற்றிக் காண்பிக்கிறது.
இதையும் படியுங்கள்: சியர்ஸ் மக்களே! சென்னை- புதுவைக்கு ‘பீர் பஸ்’ சுற்றுலா.. இதன் ஸ்பெஷல் என்ன?
இதையடுத்து ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் செலுத்தி அதி நவீன வைபை, விளக்குகள் பொருத்தப்பட்ட ஆட்டோவை வாடகைக்கு அமர்த்தியுள்ளார். அந்த ஆட்டோவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் சென்ற கிளிண்டன் குடும்பத்தினர் புதுவைக்கு இன்று வந்தனர். புதுவையில் பிரெஞ்சு கலாச்சாரம் மிக்க இடங்களை பார்வையிட்டு வருகின்றனர்.
இதுகுறித்து கிளின்டன் கூறிய்தாவது: கனடா மிகவும் குளிர்ச்சியாக இருக்கும். வெப்பநிலை பூஜ்யத்தை தாண்டியும் செல்லும். ஆனால் இந்தியாவில் கடுமையான வெப்பம் நிலவுகிறது. இதற்கேற்ப மக்கள் வாழ்வதை பார்க்க வியப்பாக உள்ளது. இங்குள்ள மக்கள் மென்மையாகவும், அன்பாகவும் பழகுகின்றனர்.
இந்தியாவை அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு வந்தோம். அதன்படி ஆட்டோ மூலம் இந்தியா முழுவதையும் சுற்றிப்பார்த்து வருகிறோம். இங்கு ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு மதிக்கத்தக்க கலாச்சாரம் உள்ளது. இங்கு நாங்கள் அதிசயித்து பார்த்தது யானை, குரங்குகள்தான்.
கனடாவில் குரங்குகளே இல்லை. அவை மனிதர்களோடு அன்போடு பழகுகின்றன. புதுவையை அடுத்து ஒவ்வொரு மாநிலம் வழியாக இமாச்சல பிரதேசம் செல்கிறோம். அதன்பின் கொச்சின் திரும்பி எங்கள் நாடு செல்ல உள்ளோம். ஒவ்வொரு ஆண்டும் பல நாடுகளுக்கு பயணம் செய்வது எங்களின் பழக்கம். இந்த ஆண்டு இந்தியாவில் எங்கள் ஆட்டோ பயணம் மறக்க முடியாத ஒன்றாக அமைந்துள்ளது என தெரிவித்தனர்.
பாபு ராஜேந்திரன், புதுச்சேரி
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil