Chutney Recipe in tamil: கறிவேப்பிலை அல்லது கறி இலைகள் என அழைக்கப்படும் கறிவேப்பிலை சமையல் பயன்பாடுகளைத் தவிர, மருத்துவ குணம் வாய்ந்த ஒன்றாகவும் உள்ளன. இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கபதோடு தோல் மற்றும் முடி சம்பந்தமான பிரச்சனைகளுக்கு தீர்வு தருகின்றன.
இவற்றில் ஃபைபர், புரதம், கால்சியம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்து காணப்படுகின்றன. மேலும் இவை உடல் பருமன் போன்ற வாழ்க்கை முறை சிக்கல்களையும் நிர்வகிக்க உதவுகின்றன.
இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளை உள்ளடக்கியுள்ள கறிவேப்பிலையில் கொங்கு நாட்டு ஸ்டைலில் சட்னி எப்படி செய்யலாம் என்று இங்கு பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
சமையல் எண்ணெய் – 3 ஸ்பூன்
உளுந்தம் பருப்பு – 1 ஸ்பூன்
சின்ன வெங்காயம் – 7 -8
காய்ந்த சிவப்பு மிளகாய் – 3
வறுக்கப்பட்ட நிலக்கடலை – 1 1/2 டேபிள் ஸ்பூன்
புளி – சிறிதளவு (சுவைக்கேற்ப)
தேங்காய் துருவல் – சிறிதளவு
கறிவேப்பிலை
நீங்கள் செய்ய வேண்டியவை
முதலில் ஒரு கனமான கடாய்யை எடுத்து அதில் 3 ஸ்பூன் எண்ணெய் விடவும். பிறகு 1 ஸ்பூன் உளுந்த பருப்பை சேர்த்து நன்றாக சிவக்க வறுக்கவும். அதன் பின்னர் உரித்து வைத்துள்ள சின்ன வெங்காயத்தை அவற்றோடு சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பிறகு காய்ந்த சிவப்பு மிளகாயைச் சேர்த்து மீண்டும் வதக்கவும்.
இப்போது நன்கு வறுக்கப்பட்ட நிலக்கடலை, புளி, தேங்காய் துருவல் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து தொடர்ந்து வறுக்கவும். கடைசியாக நாம் முன்பு உருவி வைத்துள்ள கறி இலைகளை அவற்றோடு சேர்த்து நன்றாக வதக்கவும்.பின்னர், இந்த கலவையை ஒரு மிக்சியில் எடுத்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு அரைக்கவும்
இப்போது, அவற்றை திறந்து பார்த்தால் நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்த கறிவேப்பிலை சட்னி தயாராக இருக்கும். இந்த சட்னியை உங்கள் காலை உணவுகளான இட்லி, தோசை போன்றவற்றுடன் சேர்த்து சுவைக்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“