Thengai Chutney in tamil: நம்முடைய பிரபல காலை உணவுகளாக இட்லி, தோசை, ஆப்பம் போன்றவை உள்ளன. இவற்றுக்கு பொருத்தமான சைடிஷ்கள் என்றால் அவை சட்னி, சாம்பார்கள் தான். சட்னியில் தேங்காய் சட்னி மிகவும் ருசியான ஒன்றாக இருக்கிறது. இதற்கு காரணம் தேங்காயில் காணப்படும் எண்ணெய் சத்துக்களே ஆகும்.
மேலும், தேங்காயில் புரதம், மாவு போன்ற ஊட்டச்சத்துக்களும், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உள்ளிட்ட தாதுப் பொருள்களும் நிரம்பியுள்ளன. தவிர உடலுக்கு தேவைப்படும் அனைத்துச் சத்துகளும் தேங்காயில் உள்ளன.
இன்னும் மிகுதியான சத்துக்களையும், எண்ணற்ற பயன்களையும் உள்ளடக்கியுள்ள இந்த அற்புத தேங்காயில் எப்படி சுவையான மற்றும் வித்தியாசமான சட்னி தயார் செய்யலாம் என்று இங்கு பார்க்கலாம்.
தேங்காய் சட்னி செய்யத் தேவையான பொருட்கள்
தேங்காய் – 1
பச்சை மிளகாய் – 3-4
சீரகம் – ½ தேக்கரண்டி
வறுத்த கடலை – 2 டீஸ்பூன்
முந்திரி பருப்புகள் – 6-8
இஞ்சி – 1 அங்குலம்
சுவைக்கு தேவையான அளவு உப்பு
எலுமிச்சை சாறு
வறுக்க…
தேங்காய் எண்ணெய்
கடுகு -1 தேக்கரண்டி
சிறிதளவு வெந்தயம்
உளுந்தம் பருப்பு – 2 டீஸ்பூன்
கடலைப் பருப்பு – 1 டீஸ்பூன்
காய்ந்த சிவப்பு மிளகாய் – 2
கறிவேப்பிலை – 1 கொத்து
தேங்காய் சட்னி சிம்பிள் செய்முறை
முதலில் ஒரு மிக்ஸியில் தேங்காய், பச்சை மிளகாய், சீரகம், வறுத்த கடலை, முந்திரி பருப்பு, இஞ்சி, உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும்.
பிறகு, ஒரு பாத்திரம் எடுத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வறுக்க மேலே வழங்கப்பட்டுள்ள பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்க்கவும். இவற்றை ஆற வைத்து அரைத்துக்கொள்ளவும்.
இப்போது தனியாக ஒரு பாத்திரத்தில் அரைத்த தேங்காயையும், எலுமிச்சை சாற்றையும் மிக்ஸ் செய்துகொள்ளவும். தொடர்ந்து தாளித்து அரைத்து வைத்துள்ளவற்றையும் இவற்றுடன் சேர்த்துக்கொள்ளவும். பிறகு நன்கு மிக்ஸ் செய்தால் நீங்கள் எதிர்பார்த்த சுவையான தேங்காய் சட்னி ரெடியாக இருக்கும்.
இவற்றை உங்களுக்கு பிடித்த இட்லி, தோசைகளுடன் சேர்த்து சுவைக்கலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“