cooking hacks in tamil: தினந்தோறும் புதிய புதிய உணவுகளை தயார் செய்யும் நாம் அதன் ருசியை அதிகரிக்கவும், எளிமையான முறையில் தயார் செய்யவும் சில வழிகளை அறிந்து வைத்திருப்போம். அந்த வகையில், இன்று நாம் பார்க்கவுள்ள சில குறிப்புகள் மூலம் நம்முடைய சமையலில் இன்னும் கூடுதலான ருசியை கொண்டு வர முடியும். அப்படியான சில எளிய குறிப்புகளை இங்கு பார்க்கலாம்.
மிருதுவான தோசைக்கு வெண்டைக்காய்:
நாம் அடிக்கடி தயார் செய்யும் உணவுகளில் தோசை முக்கிய இடம்பிடிக்கிறது. நீங்கள் தோசைக்கு என தனியாக மாவு அரைக்கும் போது அவற்றுடன் கொஞ்சமாக வெண்டைக்காய் துண்டுகளை சேர்த்து அரைக்கவும். இது தோசை மிருதுவாகவும், மெத்தென்றும் வர உதவும்.
கெட்டி சாம்பாருக்கு பொட்டுக் கடலை:
இட்லி, தோசை, சாதம் போன்றவற்றுக்கான சாம்பார் செய்யும்போது அதிக தண்ணீராக உள்ளது என்று தெரிந்தால், கொஞ்சம் பொட்டுக் கடலையை மிக்ஸியில் போட்டு அரைத்து, அந்த மாவை சாம்பாருடன் சேர்க்கவும். இது சாம்பார் கெட்டியாகவும் ருசியாகவும் இருக்க உதவும்.
தேங்காய் பாலுக்கு 5 நிமிடம் போதும்:
டிபன் மற்றும் சில உணவுகளுக்கு தேங்காய் பால் அவசியம். அவை தயார் செய்ய நேரம் கிடைக்கவில்லை என்றால், துருவிய தேங்காயை கொதிக்கும் தண்ணீரில் இடவும். 5 நிமிடங்களுக்கு பிறகு அவற்றை பிழிந்தால் சூப்பரான தேங்காய் பால் கிடைக்கும்.
தக்காளி சட்னிக்கு எள்ளு - எலுமிச்சை:
தனி தக்காளி சட்னி தயார் செய்யும் போது, அதனுடன் வறுத்து அரைத்த எள்ளு பொடியும், புளிக்கு பதில் எலுமிச்சை சாறும் சேர்த்து அரைத்தால் கூடுதல் ருசி கொடுக்கும்.
ரவா இட்லிக்கு சேமியா:
நம்முடைய வீடுகளில் ரவா இட்லி தயார் செய்யும்போது, அந்த இட்லி மாவுடன் ஒரு கைப்பிடி சேமியாவை வறுத்து, 10 நிமிடங்களுக்கு தண்ணீரில் ஊற வைத்து பின் மாவு கலந்து அவிக்கவும். இது இட்லி சாஃப்ட்டாக வரவும், கூடுதல் ருசி தரவும் உதவும்.
சூப்பர் ஆப்பத்துக்கு கோதுமை மாவு:
ஆப்ப தயார் செய்யும்போது, அந்த மாவுடன் ஒரு டேபிள் ஸ்பூன் அளவுக்கு கோதுமை மாவு சேர்த்து கலந்து கொள்ளவும். இது ஆப்பம் எளிதில் காயாமல் இருக்கவும், மேல் பகுதி மொறுமொறுப்பாக இருக்கவும் உதவும்
புதினா, கொத்தமல்லி துவையலும் மாங்காய்:
புதினா - கொத்தமல்லி துவையல்களுக்கு சிறிது புளிப்பு அவசியம். அதற்கு நாம் பொதுவாக புளி சேர்ப்போம். இதற்கு பதில் பொடியாக நறுக்கிய மாங்காய் துண்டுகளை துவையல் அரைக்கும்போது சேர்த்து அரைக்கவும். மாங்காயின் ருசியும், மணமும் துவையலை அமர்க்களப்படுத்தும்.
பருப்பு கீரைக்கு பால்:
கீரையுடன் பருப்பு சேர்த்து கடையும் போது சிறிதளவு பால் சேர்த்து அரைக்கலாம். இது அசத்தலான ருசியை தரும்.
சாஃப்ட்டான இட்லி- தோசைக்கு வேக வைத்த சாதம்
இன்றியாமையாத உணவாக அனைவரது வீட்டிலும் வலம் வரும் இட்லி- தோசைக்கு மாவு அரைக்கும் போது, ஒரு கைப்பிடி அளவு வேக வைத்த சாதத்தை சேர்த்து அரைத்தால் அவை ரொம்பவே சாஃப்ட்டாக இருக்கும்.
தேங்காய்க்கு பதில் புழுங்கல் அரிசி:
காய்கறிக் கூட்டுக்கு தேங்காய் சேர்த்தல் அதன் ருசி தனிதான். அவை இல்லாதபோது, சிறிதளவு புழுங்கலரிசியை வறுத்து மாவாக்கி, அதைத் தேங்காய்க்கு பதில் பயன்படுத்தலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.