Cucumber chapati recipe in tamil: நம்மில் பெரும்பாலானோருக்கு பிடித்த உணவுகளில் ஒன்றாக சப்பாத்தி உள்ளது. இதற்கு ஏற்ற சுவையான குருமா இருந்தால் கணக்கில் இல்லாமல் பல சப்பாத்திகளை உட்கொள்ளலாம். ஆனால், சாப்பாத்தியை அதிகவேகமாக தயார் செய்யும் நம்முடைய வீடுகளில் குருமா ரெடி செய்ய ஏனோ நேரம் எடுக்கிறது. குருமா இல்லாமல் சப்பாத்தி சாப்பிட்டால் சாப்பிட்ட உணர்வே நமக்கு இருக்காது.
எனினும், நாம் தயார் செய்யும் சப்பாத்தியுடன் குருமா மசாலாவையும் சேர்த்து சப்பாத்திகளை ரெடி செய்தால், அவை தயாராகும் போதே நாம் ஒவ்வொன்றாக உண்ண தொடங்கலாம். அந்த மாதிரியான வித்தியாசமான சப்பாத்திகளை எப்படி தயார் செய்து ருசிக்கலாம் என்று இங்கு பார்ப்போம்.

வெள்ளரிக்காய் சப்பாத்தி செய்யத் தேவையான பொருட்கள்
அரைக்க
வெள்ளரிக்காய் – 1
இஞ்சி – 1 துண்டு
பச்சை மிளகாய் – 4
கறிவேப்பிலை – ஒரு கொத்து
கொத்தமல்லி தழை – 1/4 கப்
பிசைய
மஞ்சள்தூள் – 1/2 டீ ஸ்பூன்
கரம் மசாலா தூள் – 1/2 டீ ஸ்பூன்
சீரக தூள் – 1/2 டீ ஸ்பூன்
எண்ணெய் – 1/4 டீ ஸ்பூன்
உப்பு – 1 1/2 டீ ஸ்பூன்
கோதுமை மாவு – 2 கப்
வெள்ளரிக்காய் சப்பாத்தி சிம்பிள் செய்முறை
முதலில் வெள்ளரிக்காய், பச்சைமிளகாய் , இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றை பொடியா நறுக்கிக் கொள்ளவும்.
பின்னர் இவையனைத்தையும் ஒரு மிக்சியில் இட்டு பேஸ்ட் பதத்திற்கு கெட்டியாக அரைத்துக்கொள்ளவும்.
தொடர்ந்து ஒரு சிறிய பாத்திரம் எடுத்து அதில் எண்ணெய், மஞ்சள்தூள், கரம் மசாலா தூள், சீரக தூள் ஆகிய பொருட்களை சேர்த்துக்கொள்ளவும்.
பின்னர் அவற்றுடன் முன்னர் அரைத்த பேஸ்ட் விழுதையும், தேவையான அளவு உப்பும் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
இதன்பிறகு அவற்றுடன் கோதுமை மாவு சேர்த்து எப்போதும்போல் சப்பாத்தி மாவுக்கு பிசைவதுபோல் பிசைய ஆரம்பிக்கவும். இவற்றுக்கு அதில் இருக்கும் ஈரப்பதமே சரியாக இருக்கும். கூடுதலாக தண்ணீர் சேர்ப்பதை தவிர்க்கவும்.
பின்னர், நன்றாக பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக போட்டு சப்பாத்தி கட்டையில் உருட்டி, தோசைக்கல்லில் இட்டு சுட்டு எடுக்கவும்.
இப்போது நீங்கள் எதிர்பார்த்த வித்தியாசமான மற்றும் சுவையான வெள்ளரிக்காய் சப்பாத்தி ரெடியாக இருக்கும். அவற்றை குருமா இல்லாமலே நீங்கள் சுவைத்து மகிழலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“