பிரிட்ஜில் மாவு... இப்படி இட்லி அவித்தால் கேன்சர் அபாயம்: உணவியல் நிபுணர் ஷாக்
இட்லி சாப்பிட்டால் கேன்சர் வரும் என்று தற்போது ஒரு தகவல் பரவி வருகிறது. இதில் இருக்கும் உண்மைத் தன்மை குறித்து உணவியல் நிபுணர் தாரிணி கிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.
தற்போது வீட்டில் இட்லி மாவு தயாரித்து பயன்படுத்துவது அரிதாகி வருகிறது என்று உணவியல் நிபுணர் தாரினி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அவ்வாறு இட்லி மாவு தயாரித்தாலும், அதனை மாதக்கணக்கில் வைத்து பயன்படுத்துகின்றனர். அப்படி செய்வது உடல் ஆரோக்கியத்திற்கு தீமையை உண்டாக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான தகவல்களை அவர், குமுதம் சினேகிதி யூடியூப் சேனலில் கூறியுள்ளார்.
Advertisment
உதாரணத்திற்கு திங்கள் கிழமை இட்லி மாவு தயாரித்தால் அதனை வெள்ளிக் கிழமைக்குள் பயன்படுத்தி விடுவது நல்லது. இதேபோல், கடைகளில் இருந்து பயன்படுத்தும் மாவை எத்தனை நாட்கள் பயன்படுத்தலாம் என்றும் சிலர் கேட்பார்கள். அவ்வாறு வாங்கும் மாவு பாக்கெட்டுகளில் எக்ஸ்பைரி தேதி கொடுக்கப்பட்டிருக்கும். ஆனால், அதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது. வெளியே இருந்து வாங்கும் மாவு, பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படுகிறது.
எனவே, இட்லி மாவை வீட்டில் தயாரித்து பயன்படுத்துவதே ஆரோக்கியம் என்று அறிவுறுத்தப்படுகிறது. இட்லியை ஆவியில் வேகவைத்து சாப்பிடுவதால் ஆரோக்கியமானது என்பதில் சந்தேகம் இல்லை. எனினும், கடைகளில் இருந்து வாங்கும் இட்லியில் சோடா சேர்க்கப்படும் அபாயம் இருக்கிறது. இவை இட்லியில் இயற்கையாக அமைந்திருக்கும் சத்துகளை எடுத்து விடும். அது தவிர நீண்ட நாட்களுக்கு சோடா கலந்த இட்லியை சாப்பிட்டால் அசிடிட்டி போன்ற பிரச்சனைகள் உருவாகும்.
பாரம்பரிய முறைப்படி துணி அல்லது இலை போட்டு இட்லி அவிப்போம். ஆனால், சமீப நாட்களாக பிளாஸ்டிக் பயன்படுத்தி உணவகங்களில் இட்லி அவிக்கின்றனர். இவ்வாறு பிளாஸ்டிக் பேப்பர் போட்டு இட்லி அவிப்பதால் தான் புற்றுநோய் ஏற்படுகிறது என்ற ஆய்வு முடிவுகள் கூறுவதாக உணவியல் நிபுணர் தாரிணி கிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார். இவை மட்டுமல்லாமல் சூடான சாம்பார் போன்றவற்றையும் பிளாஸ்டிக் பைகளில் பார்சல் செய்து கொடுப்பது புற்றுநோய் வரும் அபாயத்தை உருவாக்குகிறது.
Advertisment
Advertisements
இது போன்ற விஷயங்களை தவிர்த்து சரியான முறையில் உணவுகளை எடுத்துக் கொண்டால் தான் அவை ஆரோக்கியத்திற்கு பலனளிக்கும் என்று உணவியல் நிபுணர் தாரிணி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நன்றி - Kumudam Snegithi Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.