ஐந்தறிவு ஜீவன்கள் தான் முக்கியம்… பறவைகள், வௌவால்களுக்காக பட்டாசு வெடிக்காத கிராமங்கள்!

பட்டாசு சத்தம் தொந்தரவாக இருக்கக் கூடாது என்பதற்காக சரணாலயத்தை சுற்றி உள்ள கிராமங்களில் தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதில்லை.

By: Updated: October 24, 2019, 03:20:48 PM

Diwali 2019 Tamil Nadu villages imposed self-ban on fireworks : தீபாவளியை சிறப்பிப்பது பட்டாசு தான். பல கோடிக்கணக்கில் விற்கப்படுகின்றது தீபாவளி பட்டாசுகள். சிலர் இதை வீண் செலவு என்று நினைத்து பட்டாசை வாங்குவதில்லை. பெரும்பாலானோர் எதைப்பற்றியும் கவலைகொள்ளாமல் பட்டாசுகளை வெடிப்பதும் உண்டு. தீபாவளி போன்ற பண்டிகைக்காலங்களில் தன்னலமற்று மற்றவர்களுக்குக்காக தனது மகிழ்சியை தியாகம் செய்து வாழும் மக்களை காண்பது அரிதுதான். இவ்வாறான நிலையில், எந்த உயிரினங்களுக்கும் தொல்லை செய்யக்கூடாது என்று பட்டாசு வெடிக்காமல் தீபாவளியை கொண்டாடும் மக்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.

கூந்தன்குளம் கிராமம்

தமிழகத்தில் உள்ள நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே கூந்தன்குளம் என்ற கிராமம் உள்ளது. இங்கு பல காலமாகவே பட்டாசு வெடிப்பதில்லை. தீபாவளிக்குத்தான் என்றில்லாமல் எப்போதுமே இங்கு பட்டாசு க்கு இடமில்லை.  இந்தக்கிராமத்தில் தீபாவளியை விளக்கேற்றி, இனிப்புகள் செய்து, புத்தாடை அணிந்து அமைதியுடன் கொண்டாடுகிறார்கள்.

காரணம் என்ன?

கூந்தன்குளத்தில் உள்ள பறவைகள் சரணாலயத்தில் பல்வேறு நாட்டுப் பறவைகள் வந்து செல்கின்றன. தீபாவளி சமயத்தில் தான் இங்கு பறவைகள் வந்து செல்கின்றன. இதனால் அவைகளுக்கு இடையூறாக இருக்கக் கூடாது என்பதற்காக மக்கள் பட்டாசுகளை வெடிப்பதில்லை.

கழுப்பெரும்பாக்கம்

அதேபோல புதுவை அருகே உள்ள கழுப்பெரும்பாக்கம் கிராம மக்களும் பல தலைமுறையாக பட்டாசு வெடிப்பதில்லை.  பட்டாசு வெடிக்காமலேயே தீபாவளியை கொண்டாடி வருகின்றனர். வானூர் வட்டத்தில் அமைந்துள்ள இந்த கிராமத்தில் தற்போது 1500 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.  இங்கு பட்டாசு வெடிக்கவைக்காமைக்கு காரணம், இங்குள்ள ஆலமரத்தின் மத்தியில் மக்களின் எண்ணிக்கைக்கும் அதிகமாக வவ்வால்களே உள்ளன. இரவில் உணவு வேட்டை நடத்தி விட்டு, பகலில் மரக்கிளைகளில் தொங்கி ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் வேளையில் பட்டாசு வெடித்தால் அது அவைகளுக்கு ஆபத்தாக முடியும் என்பதாலும் அமைதியான முறையில் தீபாவளியைக்கொண்டாடுகின்றனர்.

தச்சன்கரைவழி

இதேபோல சென்னிமலை அருகே மேட்டுப்பாளையம், தச்சன்கரைவழி, செம்மாண்டாம்பாளையம், செல்லப்பம்பாளையம், புங்கம்பாடி, மீனாட்சிபுரம், ஆகிய கிராமங்களில் பட்டாசுகளை மக்கள் வெடிப்பதில்லையாம். ஏனெனில் இங்குள்ள பறவைகள் சரணாலயம்தான் அதற்கு காரணமாம்.  வெள்ளோடு மேட்டுப்பாளையம் பறவைகள் சரணாலயத்தில் அவ்வப்போது வெளி நாட்டு பறவைகளும் வந்து செல்கின்றன. அமைதியை தேடி வரும் பறவைகளுக்கு பட்டாசு சத்தம் தொந்தரவாக இருக்கக் கூடாது என்பதற்காக பறவைகள் சரணாலயத்தை சுற்றி உள்ள கிராமங்களில் தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதில்லை.

மேலும் படிக்க : பசுமை பட்டாசுகள் உத்தரவு : குழப்பத்தில் சிவகாசி தொழிற்சாலைகள்…

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

Web Title:Diwali 2019 tamil nadu villages imposed self ban on fireworks

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X