/indian-express-tamil/media/media_files/2025/04/19/5DeAT5qqnSORLpu4KKhL.jpg)
இன்றைய காலகட்டத்தில் பல நோய்களுக்கு காரணமாக அமைவது தூக்கமின்மை தான் என்று மருத்துவர் அக்ஷயன் தெரிவித்துள்ளார். எனவே, மனநலனை சரி செய்து தூக்கத்தை சீராக அமைத்துக் கொண்டால், பல விதமான நோய்களில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ளலாம் என்று அவர் அறிவுறுத்துகிறார்.
தூக்கமின்மைக்கு சில காரணங்களும் இருக்கின்றன. உடலில் அதிகப்படியான உஷ்ணம் இருந்தால் தூக்கம் சரியாக இருக்காது என்று மருத்துவர் அக்ஷயன் கூறியுள்ளார். அந்த வகையில் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க வேண்டியது அவசியம். ஏனெனில், தூக்கமின்மையால் இருதய நோய், ஃபேட்டி லிவர் போன்ற பாதிப்புகளும் ஏற்படுகின்றன.
அதன்படி, நன்றாக தூங்குவதற்கு சில வழிமுறைகளை பின்பற்றலாம் என்று மருத்துவர் அக்ஷயன் வலியுறுத்துகிறார். முதலில் உறங்கும் அறையை தினசரி சுத்தம் செய்திருக்க வேண்டும். மேலும், பிரகாசமான விளக்குகளை படுக்கையறையில் பயன்படுத்தக் கூடாது. இவை சீரான தூக்கத்திற்கு இடையூறாக இருக்கும்.
இரவு உறங்கச் செல்வதற்கு முன்பாக கவலை தரும் விஷயங்களை பேசக் கூடாது. அதற்கு பதிலாக மகிழ்ச்சியான தருணங்களை பேசலாம் என்று மருத்துவர் அக்ஷயன் தெரிவித்துள்ளார். இது தவிர இரவு தூங்குவதற்கு முன்பாக பாதங்களை சுடுதண்ணீரில் கழுவலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இரவு நேரத்தில் எளிதாக செரிமானம் ஆகக் கூடிய உணவுகளை சாப்பிடலாம். இவை அனைத்தையும் தினசரி பழக்கமாக மாற்றிக் கொள்ள வேண்டும். இவற்றை தவிர இன்னொரு விஷயத்தை உறக்கத்திற்காக கையாளலாம். இதனை நிறைய வல்லுநர்களும் பரிந்துரைக்கின்றனர்.
படுக்கையில் இடதுபுறமாக சாய்ந்து படுத்துக் கொண்டு ஒரு பயிற்சியை செய்ய வேண்டும். அதன்படி, ஒன்றில் இருந்து நான்கு எண்ணும் வரை மூச்சை இழுக்க வேண்டும். இவ்வாறு இழுத்த மூச்சை ஒன்று முதல் ஏழு எண்ணும் வரை அப்படியே பிடித்து வைத்திருக்க வேண்டும். இறுதியாக ஒன்றில் இருந்து எட்டு எண்ணும் வரை மூச்சை மெதுவாக வெளியே விட வேண்டும்.
இந்த பயிற்சியை தொடர்ச்சியாக செய்யும் போது 5 நிமிடத்தில் தூக்கம் வரும் என்று மருத்துவர் அக்ஷயன் தெரிவித்துள்ளார்.
நன்றி - Swasi Health Spot Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.