கடலை மிட்டாயை அதிகமாக சாப்பிட்டாலும், உடலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாது என்றும், அது உடலுக்கு நல்லது தான் என்றும் பலர் கூறுகின்றனர். ஆனால், உண்மையிலேயே கடலை மிட்டாய் ஆரோக்கியமானதா? என்ற சந்தேகம் சிலருக்கு இருக்கும். அதற்கான விளக்கத்தை மருத்துவர் அருண் குமார் தெரிவித்துள்ளார்.
இதற்காக கடலை மிட்டாய், சாதாரண வேர்க்கடலை மற்றும் கிரீம் பிஸ்கட் ஆகியவற்றை ஒப்பிட்டு அவர் தனது விளக்கத்தை கூறுகிறார். அதன்படி, கடலை மிட்டாயில் 520 கலோரிகள், கிரீம் பிஸ்கட்டில் 480 கலோரிகள், வேர்க்கடலையில் 550 கலோரிகள் இருக்கிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல், கடலை மிட்டாயில் 45 முதல் 50 கிராம் மாவுச்சத்தும், 40 முதல் 42 கிராம் வரை சர்க்கரையும் இருக்கிறது என மருத்துவர் அருண் குமார் கூறுகிறார். கிரீம் பிஸ்கட்டில் 70 கிராம் மாவுச்சத்தும், 38 முதல் 40 கிராம் சர்க்கரையும் இருக்கிறது. வேர்க்கடலையில் 15 கிராம் தான் மாவுச்சத்து இருக்கிறது. இதில் இருந்து கடலை மிட்டாய் மற்றும் கிரீம் பிஸ்கட்டில் ஏறத்தாழ ஒரே அளவிலான சர்க்கரை இருப்பதை உணர முடிகிறது.
இது தவிர வேர்க்கடலையில் 50 கிராம் அளவிற்கு கொழுப்பு இருக்கிறது. கடலை மிட்டாயில் 20 கிராமும், கிரீம் பிஸ்கட்டில் 15 கிராமும் கொழுப்பும் காணப்படுகிறது. மேலும், வேர்க்கடலையில் 25 கிராம் புரதமும், கடலை மிட்டாயில் 15 கிராம் புரதமும், கிரீம் பிஸ்கட்டில் 5 கிராம் புரதமும் இருக்கிறது.
எனவே, கடலை மிட்டாயை மிக ஆரோக்கியமான உணவு என்று கருத வேண்டாம் என மருத்துவர் அருண் குமார் தெரிவித்துள்ளார். எனினும், வேர்க்கடலையை சாப்பிடலாம் என்று பரிந்துரைக்கும் அவர், கடலை மிட்டாயை அடிக்கடி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.