இன்றைய கால இளைஞர்களின் பெரும் பிரச்சனையாக விளங்குவது உடல் எடை அதிகரிப்பு. உணவு முறைகளில் மாற்றம் மற்றும் அதிக உடல் உழைப்பு இல்லாதது போன்ற காரணங்களால் இளைஞர்கள் உடல் எடை அதிகரித்து காணப்படுகின்றனர்.
இவ்வாறு உடல் எடையால் அவதிப்படுபவர்களுக்கு அவர்களின், உணவு முறையில் இருந்தே உடல் எடை குறைப்பதற்காக வழிமுறையை மருத்துவர் சிவராமன் பரிந்திரைத்துள்ளார்.
காலையில் எழுந்ததும் வெந்நீரில் தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து குடிக்க வேண்டுமென சிவராமன் தெரிவித்துள்ளார். இதையடுத்து காலை உணவாக இட்லி, தினையரிசி பொங்கல், அதிகளவில் பழத்துண்டுகள் ஆகியவற்றை சாப்பிட வேண்டும். குறிப்பாக, காலை நேரத்தில் ஆவியில் வெந்த உணவு மற்றும் பழத்துண்டுகள் எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதன்பின்னர், சுமார் 11 மணியளவில் கிரீன் டீ பருகலாம். மதியம் சாப்பிடுவதற்கு முன்பாக பொடியாக செய்து வைத்த வெந்தயத்தை அரை ஸ்பூன் சாப்பிட வேண்டும். வெந்தயத்தில் உள்ள நார்ச்சத்து பசியைக் குறைக்கும். மதிய உணவாக நிறைய காய்கறிகள், சிறிய அளவு சாதம், அதிக எண்ணெய் இல்லாத குழம்பு ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும், ரசம் மற்றும் மோர் இரண்டையும் குடிக்கலாம்.
மாலை நேரத்தில் இளநீர், பழச்சாறு அல்லது கிரீன் டீ பருகலாம், அதன்பின்னர், இரவு நேரத்தில் கேழ்வரகு உப்புமா, எண்ணெய் இல்லாத சப்பாத்தி போன்றவற்றை சாப்பிடலாம். இவ்வாறு செய்வதன் மூலம் மாதத்திற்கு சுமார் இரண்டரை கிலோ முதல் மூன்று கிலோவ ரை உடல் எடை குறையும் என சிவராமன் கூறியுள்ளார். இந்த உணவு பழக்கம் ஒரு வாரம் பழகிய பின்னர், வாரத்தில் ஒரு நாள் மட்டும் முழுமையாக பழங்கள் சாப்பிட வேண்டுமென தெரிவித்துள்ளார்.
இவற்றுடன் சரியான அளவு உடற்பயிற்சியும் செய்ய வேண்டுமென மருத்துவர் சிவராமன் அறிவுறுத்தியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“