நாம் பாரம்பரியமாக சாப்பிடும் ஒவ்வொரு உணவுக்கும் பல்வேறு மருத்துவ குணங்கள் இருக்கின்றன. உணவின் சத்துகள் மற்றும் நம் உடலின் தேவையை உணர்ந்து சாப்பிடுவதன் மூலம் நமக்கான பயன்களை நம்மால் பெற முடியும்.
அந்த வகையில் வெந்தயம் சிறப்பான மருந்தாக செயல்படுகிறது. குறிப்பாக, வெந்தயத்தில் வைட்டமின் சி, புரதம், நார்ச்சத்து, நியாசின், பொட்டாசியம், மெக்னீசியம், மற்றும் இரும்பு ஆகிய சத்துக்கள் அடங்கியுள்ளன.
இரத்தத்தில் அதிகரித்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி, சர்க்கரை நோய் ஏற்படுவதை வெந்தயம் தடுப்பதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். இதில் உள்ள நார்ச்சத்து, கார்போஹைட்ரேட் அளவை குறைத்து, ரத்தத்தில் சர்க்கரை அதிகரிப்பதை தடுக்கிறது என்றும் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், வெந்தயத்தை எவ்வாறு சாப்பிட வேண்டும் என மருத்துவர் சிவராமன் பரிந்துரைத்துள்ளார். குறிப்பாக, தேவை அறிந்து சாப்பிட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
உடலில் சூடு அதிகமாக இருப்பவர்கள், வெந்தயத்தை இரவு முழுவதும் ஊறவைத்து மறுநாள் காலை சாப்பிடலாம். இரத்தக் கொழுப்பை குறைக்க வேண்டும் என நினைப்பவர்கள் வெந்தயத்தை பொடியாக்கி சாப்பிட வேண்டும் என மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார்.
நேரடியாக வெந்தயத்தை சாப்பிடும் போது சிலருக்கு கசப்பு சுவையாக இருக்கும். மேலும், சிலருக்கு குமட்டல் ஏற்படவும் வாய்ப்புள்ளது. இதனால் தான் சிலர் வெந்தயத்தை ஊறவைத்து சாப்பிடுகின்றனர்.
உடலில் குளிர்ச்சி வேண்டும் என நினைப்பவர்கள் வெந்தயத்தை ஊற வைத்து சாப்பிடலாம். மற்றவர்கள் வெந்தயத்தை பொடியாக்கி சாப்பிடும் போது தான் அதன் நன்மைகள் முழுமையாக கிடைக்கும் என மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“