உணவே மருந்து என்னும் கூற்றின் படி வாழ்ந்தது தமிழ் சமூகம். ஆனால், தற்போதைய காலகட்டத்தில் மாறி வரும் உணவு பழக்க வழக்கங்களால், உடல் ரீதியாக பல பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர்.
நோய் வந்த பின்னர் அதனை குணப்படுத்த உடனடியாக மருத்துவரை நாடுவது எவ்வளவும் முக்கியமோ, அதை விட முக்கியம் நோய் வராமல் முடிந்த வரை தற்காத்துக் கொள்வது. அதன்படி, ஆரோக்கியமான வாழ்க்கையை கடைபிடிப்பதற்கு மருத்துவர் சிவராமன் பல்வேறு தகவல்களை பகிர்ந்துள்ளார்.
அரிசியைக் காட்டிலும் கேழ்வரகில் 200 சதவீதம் கால்சியம் அதிகமாக இருப்பதாக மருத்துவர் சிவராமன் கூறுகிறார். கால்சியத்தை தேவையான அளவு எடுத்துக் கொள்வதன் மூலம் எலும்பு தொடர்பான பிரச்சனைகளில் இருந்து நம்மை பாதுகாக்கலாம் எனக் கூறப்படுகிறது. எனவே, கட்டாயம் கேழ்வரகு எடுத்துக் கொள்ள வேண்டுமென மருத்துவர் சிவராமன் கூறுகிறார். ஆனால், உடல் எடையை குறைக்க வேண்டுமென நினைப்பவர்கள் கேழ்வரகை தவிர்த்து விடலாம் என அவர் கூறியுள்ளார்.
கீரை, காய்கறிகள் மற்றும் பழங்களை நம் தினசரி உணவில் கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும். கீரையை நாம் பல நேரங்களில் சாதாரணமாக நினைக்கிறோம் எனக் கூறிய சிவராமன், அதில் இருக்கும் கனிமங்களை விலை கொடுத்து கூட வாங்க முடியாது எனத் தெரிவித்துள்ளார். பொன்னாங்கன்னி கீரையில் செலினியம் அதிகமாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இறைச்சியில் மீன் மற்றும் காடை வகைகளை அதிகமாக சாப்பிடலாம் எனவும் மருத்துவர் சிவராமன் கூறியுள்ளார். கோழியைக் காட்டிலும் காடையில் சத்துகள் அதிகரித்து இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும், இரவு உணவை 7 மணிக்குள் சாப்பிட்டு முடித்து விட வேண்டுமெனவும், எளிமையான கோதுமை ரவை கிச்சடி, சிறுதானிய அடை போன்றவற்றை சாப்பிடலாம் எனவும் சிவராமன் அறிவுறுத்தியுள்ளார்.
இவ்வாறு உணவு முறையின் மூலம் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம் என்பதே நிதர்சனம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“