உணவு முறை மாற்றம் மற்றும் வாழ்க்கை முறை மாற்றத்தால் இன்றைய சூழலில் பலரும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் வருந்தக் கூடிய விஷயம் என்னவென்றால், வயது வித்தியாசம் இல்லாமல் பலருக்கு சர்க்கரை நோய் இருக்கிறது. இதற்காக தினமும் மருந்து, மாத்திரைகள் எடுத்துக் கொள்ளும் நிலையும் உருவாகியுள்ளது.
எனினும், உணவு முறையில் மாற்றம் கொண்டு வருவதன் மூலம் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த முடியும். அதற்காக, மருந்துகள் உட்கொள்வதை முற்றிலும் நிறுத்தி விடக் கூடாது. மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளுடன் கூடிய உணவு முறை மாற்றமே சீரான ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும்.
அந்த வகையில் சர்க்கரை நோயாளிகளுக்கான காலை உணவை மருத்துவர் சிவராமன் பரிந்துரைத்துள்ளார். பல வீடுகளில் காலை உணவாக இட்லி, தோசை, பொங்கல், பூரி ஆகியவற்றை சாப்பிடுவதாக மருத்துவர் சிவராமன் கூறுகிறார். ஆனால், இவை இல்லாமல் காலை உணவில் புரதம் அதிகமாக இருப்பதை உறுதி செய்திட வேண்டும்.
அதன்படி, 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் நிச்சயமாக தங்கள் காலை உணவை சத்துகள் நிறைந்ததாக சீரமைத்துக் கொள்ள வேண்டும். இதற்காக கொஞ்சம் சுண்டல், முளைகட்டிய பயிறு வகைகள், நிறைய நார்ச்சத்து மிகுந்த பச்சை காய்கறிகள், பழங்கள் மற்றும் இரண்டு முட்டை ஆகியவற்றை சாப்பிடலாம் என மருத்துவர் சிவராமன் பரிந்துரைத்துள்ளார். இவற்றுடன் பாதாம் பருப்புகள், வேர்க்கடலைகளையும் சேர்த்துக் கொள்ளலாம்.
புதிதாக இதனை சாப்பிடுபவர்களுக்கு பசி முழுமையாக தீர்ந்ததை போன்று தோன்றாது. அதற்காக, சிறிதளவு சிறுதானிய பொங்கல், வரகு அரிசி உப்புமா போன்றவற்றை சாப்பிடலாம் என்றும் மருத்துவர் சிவராமன் கூறுகிறார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.