மனிதர்களுக்கு உழைப்பு எந்த அளவிற்கு முக்கியமானதாக விளங்குகிறதோ, சரியான தூக்கமும் அதே அளவிற்கு முக்கியம். இரவு நேரத்தில் சரியாக தூங்காமல் இருந்தால், நம்முடைய அன்றாட பணிகள் பாதிக்கப்படுவதுடன், பல விதமான பிரச்சனைகளுக்கும் வழிவகுக்கும்.
முன்னர், சுமார் இரவு 10 மணிக்கெல்லாம் தூங்கி பழகிய மனிதர்கள் தற்போது சராசரியாக இரவு 12, 1 மணி வரை விழித்திருக்கும் அவல நிலை உருவாகியுள்ளது. உணவுமுறை மாற்றம் மற்றும் வாழ்க்கை முறை மாற்றமும் தூக்கமின்மையில் பெரும் பங்கு வகிக்கிறது. இதேபோல், ஸ்மார்ட்போன் பயன்பாடும் தூங்கும் நேரத்தை கடுமையாக பாதிக்கிறது.
சரியாக தூங்காமல் இருப்பதால் மன அழுத்தம் தொடங்கி மாரடைப்பு வரை பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும். இதனை தடுக்க வேண்டுமானால் ஏறத்தாழ 7 முதல் 8 மணி நேர தூக்கம் கட்டாயம் என வல்லுநர்கள் கூறுகின்றனர். இதனால் இயற்கையான முறையில் சரியாக தூங்குவதற்கு மருத்துவர் சிவராமன் ஒரு வழிமுறையை தெரிவித்துள்ளார்.
கடைகளில் கிடைக்கும் ஜாதிக்காய் பொடியை வாங்கி, 2 சிட்டிகை அளவிற்கு எடுத்து பாலில் சேர்த்து குடிக்க வேண்டும் என சிவராமன் கூறுகிறார். குறிப்பாக, நீர்த்த பாலில் இதனை கலந்து குடித்தால் கூடுதல் பலன் அளிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜாதிக்காய்க்கு இயற்கையாகவே நல்ல உறக்கத்தை கொடுக்கும் தன்மை இருப்பதாக சிவராமன் கூறியுள்ளார். மேலும், இவற்றில் எந்த விதமான இரசாயனங்களும் சேர்க்காததால் உடலுக்கு பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாது என்பது குறிப்பிடத்தக்கது.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.