சர்க்கரை நோயாளிகளும் கவலையின்றி சாப்பிடக் கூடிய பழங்கள் மற்றும் அதன் நன்மைகள் குறித்து மருத்துவர் அருண் கார்த்திக் பரிந்துரைத்துள்ளார். அவை என்னவென்று பார்க்கலாம்.
ஆப்பிள் மற்றும் பேரிக்காய்:
ஆப்பிள் மற்றும் பேரிக்காய் ஆகிய இரண்டிலும் க்ளைசெமிக் இண்டெக்ஸ் 35-36 என்ற அளவில் உள்ளது. மேலும், க்ளைசெமிக் லோடு 5-ஆக உள்ளது. இந்த பழங்களில் சர்க்கரை அதிகரிக்கும் தன்மை மிக குறைவு. ஆப்பிளில் அதிகப்படியான அன்டி ஆக்சிடென்ட்ஸ் உள்ளது. மேலும், இந்த இரண்டிலும் நார்ச்சத்து அதிகமாக காணப்படுகிறது.
ஆரஞ்சு:
ஆரஞ்சு பழத்தின் க்ளைசெமிக் இண்டெக்ஸ் 30 மற்றும் க்ளைசெமிக் லோடு 4. மேலும், இதில் பெக்டின் எனப்படும் நார்ச்சத்து உள்ளது. இதன் மூலம் கொலஸ்ட்ரால் கட்டுப்படுத்தப்படுகிறது. சர்க்கரை நோயாளிகளும் இதனை சாப்பிடலாம்.
ஸ்ட்ராபெர்ரி:
ஸ்ட்ராபெர்ரி பழத்தில் க்ளைசெமிக் இண்டெக்ஸ் 25. மேலும், இதன் க்ளைசெமிக் லோடு 2 என்ற அளவிலேயே உள்ளது. இதை சாப்பிடுவதால் தோல் சுருக்கங்கள் கட்டுப்படுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதில், வைட்டமின் இ நிறைந்துள்ளது. இந்த வகையான பழங்களை அதிகமாக மருந்து தெளித்து வளர்ப்பதால் நன்றாக கல் உப்பு மற்றும் தண்ணீர் கொண்டு கழுவி சாப்பிட வேண்டும்.
நாவல் பழம் மற்றும் மலை நெல்லிக்காய்:
இந்த இரண்டின் தன்மைகளும் ஒன்றாகவே இருக்கும். இதன் க்ளைசெமிக் இண்டெக்ஸ் 20. க்ளைசெமிக் லோடு 2 ஆகும். நெல்லிக்காயும் பழங்கள் வரிசையில் தான் வரும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். கொலஸ்ட்ரால் மற்றும் ரத்த அழுத்தத்தை இவை குறைக்கின்றன.
கொய்யாப்பழம்:
கொய்யாப் பழத்தின் க்ளைசெமிக் இண்டெக்ஸ் 15. அதிகப்படியான நார்ச்சத்து இதில் உள்ளது. பெரும்பாலான வைட்டமின்கள் இதில் நிறைந்துள்ளன. லைகோபின் என்ற சத்து கொய்யாப்பழத்தில் உள்ளது. மேலும், கொய்யா பழம் இருதயத்திற்கு நல்லது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“