Garlic recipes in tamil: மிகவும் சக்தி வாய்ந்த உணவு பொருட்களில் பூண்டு – வும் ஒன்றாகும். இதன் கூடுதல் சுவையால் பெரும்பாலும் அனைத்து உணவுப் பொருட்களிலும் சேர்க்கப்படுகிறது. அதோடு நமது உடல் ஆரோக்கியத்திற்கும் இவை உதவுகிறது.
தொடக்க கால நாகரத்தில் தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடுவதற்கு பூண்டை பயன்படுத்தியதாக குறிப்புகள் உள்ளன. பூண்டில் உள்ள அல்லிசின் போன்ற கந்தகங்களைக் கொண்ட சேர்மங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன. மேலும் உடலுக்கு தேவையான துத்தநாகச் சத்தை உறிஞ்சுவதற்கு உதவுகின்றன. அதோடு இவை இரத்த அழுத்தத்தைக் குறைத்து தமனிகளின் கடினப்படுத்துதலை குறைக்கிறது.
பூண்டில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகமாக காணப்படுவதால் அவை நோயெதிர்ப்பு மண்டலத்தின் முக்கிய அங்கமான ‘நேச்சுரல் கில்லர் செல்கள்’ செயல்பாட்டைத் தூண்டுகின்றன. மேலும் இவை ஃப்ரீ ரேடிகல்கள் மற்றும் வைரஸ் பாதிக்கப்பட்ட செல்களை அழிக்கிறது.
இப்படி ஏகப்பட்ட ஆரோக்கிய நன்மைகளை உள்ளடிக்கியுள்ள பூண்டில் எப்படி சுவையான பூண்டு பொடி செய்யலாம் என்று இங்கு பார்ப்போம்.
பூண்டு பொடி செய்யத் தேவையான பொருட்கள்:-
பூண்டு – 30 – 40 பற்கள் (தோல் உரிக்காதது)
காய்ந்த தேங்காய் அல்லது கொப்பரை தேங்காய் – 200 கிராம்
நிலக்கடலை – 200 கிராம்
காய்ந்த மிளகாய் – 10
மல்லி – 1 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
பூண்டு பொடி செய்முறை:-
முதலில் பூண்டு, காய்ந்த தேங்காய், நிலக்கடலை, காய்ந்த மிளகாய் மற்றும் மல்லியை தனித்தனியாக ஒரு பாத்திரத்தில் போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
அவை நன்கு ஆறிய பின்னர், அவற்றை ஒன்றாக சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து, ஒரு மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
மிக்ஸியில் அரைக்கும் போது, அதிகமாக அரைத்து விடக்கூடாது. நொறுநொறுப்பாக இருக்குமாறு அரைத்துக் கொள்ளவும்.
இப்போது நீங்கள் எதிர்பார்த்த சுவையான மற்றும் ஆரோக்கியமான பூண்டுப் பொடி தயாராக இருக்கும். அவற்றை ஒரு பாட்டிலில் சேமித்து வைத்து உங்களுக்கு பிடித்த இட்லி, தோசை போன்ற உணவுகளுடன் சேர்த்து ருசித்து மகிழவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil