ginger recipes in tamil: நம்முடைய சமையல்களில் பயன்படுத்தப்படும் இஞ்சி பல்வேறு மருத்துவ குணங்களை தன்னகத்தே கொண்டுள்ளதாக உள்ளது. இவற்றில் கால்சியம், இரும்பு சத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம் உள்ளிட்ட தாதுக்களும், எ, பி, சி போன்ற வைட்டமின்களும் நிரம்பி காணப்படுகின்றன.
இஞ்சி சாறுடன், வெங்காய சாறு கலந்து ஒரு வாரம் காலையில் ஒரு கரண்டி வீதம் குடித்துவர நீரிழிவு குறையும்.
இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு, வெங்காய சாறு மூன்றையும் கலந்து ஒருவேளை அரை அவுன்ஸ் வீதம் சாப்பிட்டுவர ஆரம்ப கால ஆஸ்துமா, இரைப்பு, இருமல் குணமாகும்.
இஞ்சியை, தட்டி தேனீர் கொதிக்க வைக்கும் போது அதில் சேர்த்து கொதிக்க வைத்து தேனீர் பருகலாம். சுவையும் நன்றாக இருக்கும், உடலுக்கும் நல்லது. சில சமையல் வகைகளில் இஞ்சியை மசித்துப் போட்டு செய்வார்கள். அதுபோன்ற உணவு வகைகள் வயிற்றைக் கெடுப்பதில்லை.
இப்படி எண்ணற்ற ஆரோக்கிய நலன்களை கொண்டுள்ள இஞ்சியில் எப்படி சுவைமிகுந்த துவையல் செய்யலாம் என்று இங்கு பார்க்கலாம்.

இஞ்சி துவையல் செய்யத் தேவையான பொருட்கள்:
அரைக்க:-
நல்லெண்ணெய் -3 தேக்கரண்டி
கடலை பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
உளுந்தம் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
இஞ்சி -50 கிராம்
உலர் சிவப்பு மிளகாய் -4
புளி-சிறியது
வெல்லம் – சிறியது
உப்பு – தேவைக்கேற்ப
தாளிக்க
நல்லெண்ணெய் – 1 ஸ்பூன்
கடுகு -1/2 டீஸ்பூன்
சீரகம் – 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை
இஞ்சி துவையல் சிம்பிள் செய்முறை:
முதலில் ஒரு பாத்திரம் எடுத்து அதில் 2 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடேற்றவும். பிறகு அவற்றில் அரைக்க வழங்கப்பட்டுள்ள பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்கு வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
இதில் உப்பு மற்றும் வெல்லத்தை வறுத்த பொருட்கள் நன்கு ஆறிய பிறகு சேர்த்துகொள்ளவும். இப்போது அனைத்தயும் ஒரு மிக்சியில் இட்டு நன்கு அரைத்துக்கொள்ளவும்.
இதன் பின்னர் தாளிக்க வழங்கப்பட்டுள்ள பொருட்களை கொண்டு தாளித்து அரைத்து வைத்துள்ள துவையலுடன் சேர்த்துக்கொள்ளவும்.
இப்போது நீங்கள் எதிர்பார்த்த சுவையான இஞ்சி துவையல் தயாராக இருக்கும். இவற்றை உங்களுக்கு பிடித்தமான உணவுகளுடன் ருசித்து மகிழவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil