பெண்கள், பிரசவ காலங்களில் அதிக மனஅழுத்தத்துடன் இருந்தால், அவர்களுக்கு பெண் குழந்தை பிறக்க அதிக வாய்ப்பு இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் விஞ்ஞானிகள் மற்றும் கொலம்பிய பல்கலைக்கழகத்தை சேர்ந்த இர்வின் மெடிக்கல் சென்டர் விஞ்ஞானிகள் இணைந்து, பிரசவ காலத்தில் அதிக மனஅழுத்தத்துடன் இருக்கும் பெண்கள் பெற்றெடுக்கும் குழந்தைகள் குறித்த ஆய்வை மேற்கொண்டனர். அதன் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
இந்த ஆய்வை தலைமையேற்று நடத்திய விஞ்ஞானி கேதரின் மாங்க் கூறியதாவது, பிரசவ காலத்தில் அதிக மனஅழுத்தம் ஏற்படுவது என்பது உடல் மற்றும் மனம் சார்ந்த நடவடிக்கையே ஆகும். இதில் உடல் சார்ந்த மனஅழுத்தம் யாதெனில், அதிக ரத்த அழுத்தம் ஆகும். பெண்ணின் கருப்பையே, குழந்தையின் முதல் வீடு ஆகும். இந்த கருப்பையில் ஏற்படும் அழுத்தம் உள்ளிட்ட மாறுபாடே கருவின் பாலினம் மற்றும் அதன் உடல்நலன் குறித்து தீர்மானிக்கிறது.
தாங்கள் நடத்திய ஆய்வில் சராசரியாக 4 : 9 என்ற விகித கணக்கில் ஆண் : பெண் குழந்தைகள் பிறந்துள்ளன. அதேநேரத்தில், அதிக மனஅழுத்தத்தால், பெண்கள் குறைந்த மாதத்திலேயே பிரசவித்து விடுவதாக மாங்க் கூறினார்.