வேர்க்கடலை நம் அனைவருக்கும் பிடித்த நட்ஸ் வகைகளில் ஒன்றாகும். இதனை வறுத்தோ, வேக வைத்தோ அல்லது பச்சையாகவோ எல்லோரும் சாப்பிடுவோம். வேர்க்கடலை சுவையானது மட்டுமின்றி நமக்கு தேவையான ஊட்டச்சத்துக்களையும் வழங்குகிறது. வேர்க்கடலையின் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இப்போது பார்ப்போம்.
வேர்க்கடலையின் நன்மைகள் குறித்து உணவியல் நிபுணர் கரிமா கோயல் தனது சமீபத்திய இன்ஸ்டாகிராம் போஸ்டில் விளக்கியுள்ளார். அந்தப் பதிவில், பாதாம், அக்ரூட் மற்றும் முந்திரி போன்ற விலையுயர்ந்த நட்ஸ் வகைகள் போலல்லாமல், வேர்க்கடலை மிகவும் மலிவாகவே கிடைக்கிறது. ஆனால் அதற்காக வேர்க்கடலையின் நன்மைகளை குறைத்து மதிப்பிடக்கூடாது. வேர்க்கடலையில் புரதங்கள், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், குளிர்காலம் வந்துவிட்டது, சில சுவையான குளிர்கால தின்பண்டங்களை சாப்பிடுவதற்கான நேரம் இது. அத்தகைய குளிர்கால திண்பண்டங்களில் ஒன்று வேர்க்கடலை. இது உடலுக்கு சூடு தருவது மட்டுமின்றி பல ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது. வெல்லத்துடன் சேர்த்து சாப்பிடலாம் அல்லது கஜாக் போல் சாப்பிடலாம், இந்த பருப்பு எப்போதும் போல் சுவையாக இருக்கும். என்றும் பதிவிட்டுள்ளார்.
வேர்க்கடலையின் நன்மைகளைப் பொறுத்தவரையில், நமது உடலுக்கு தேவையான பல்வேறு மைக்ரோ மற்றும் மேக்ரோ நியூட்ரியண்ட்கள் நிறைந்துள்ளன. மேலும், வேர்க்கடலை மிகவும் மலிவு விலையில் கிடைக்கிறது.
வேர்க்கடலை கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவுகிறது. எனவே இதய நோயாளிகள் தாராளமாக வேர்க்கடலையை அடிக்கடி சாப்பிடலாம்.
வேர்க்கடலையில் உள்ள எண்ணெய் சத்து, எளிதில் ஜீரணமாகக்கூடியது. இது சிறந்த மலமிளக்கியாகவும், சருமத்துக்கு பளபளப்பு அளிக்க கூடியதாகவும் விளங்குகிறது.
வேர்க்கடலை இரத்தக் கட்டிகள் உருவாக்குவதை தடுக்கின்றன, இதனால் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்புகளை குறைக்க முடியும். பெண்களுக்கு மாதவிடாய்க் காலத்தில் ஏற்படும் அதிக ரத்தப்போக்கில் இருந்து குணமடையவும், நீரிழிவு நோயாளிகளுக்கும் வேர்க்கடலை சிறந்த உணவாகும்.
வேர்க்கடலையில் கொழுப்பு மற்றும் கலோரிகள் அதிகமாக இருப்பதால் உடல் எடை அதிகமாக இருப்பவர்கள் இதனை சாப்பிடக்கூடாது என கூறுவார்கள். ஆனால் வேர்க்கடலை நமது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது மற்றும் நீண்ட நேரம் நம்மை முழுமையாக வைத்திருக்கும். எனவே ஆரோக்கியமான எடையை பராமரிக்கவும், உடல் பருமனை குறைக்கவும் உதவுகிறது.
வேர்க்கடலையில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், தினமும் 6-7 வேர்க்கடலையை சாப்பிட்டு வந்தால் செரிமானப் பிரச்னை, குடல் அழற்சி பிரச்னை, மலச்சிக்கல் உள்ளிட்ட பிரச்சனைகளை சரி செய்கிறது.
வேர்க்கடலையில் பீட்டா-சிட்டோஸ்டெரால் நிரம்பியுள்ளது. இது புற்றுநோய் அபாயத்தை குறைக்கிறது. உடலில் புற்றுநோய் கட்டிகளின் வளர்ச்சியைத் தடுக்கிறது. குறிப்பாக மார்பக புற்றுநோய் ஆபத்தை தவிர்க்க உதவுகிறது
வேர்க்கடலையில் ஐசோஃப்ளேவோன்ஸ், ரெஸ்வெராட்ரோல் மற்றும் பைடிக் அமிலங்கள் போன்ற ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன. அவை பயோட்டின் உள்ளிட்ட வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் முக்கிய ஆதாரமாகவும் உள்ளன.
மேலும் வேர்க்கடலையில் தாமிரம், நியாசின், ஃபோலேட், மாங்கனீசு, பாஸ்பரஸ், வெளிமம், வைட்டமின் ஈ மற்றும் தயாமின் உள்ளிட்ட சத்துக்கள் உள்ளது.
வேகவைப்பதாலும், வறுப்பதாலும் வேர்க்கடலை அதன் சத்துக்களை இழந்து விடுகிறது. பச்சையாக ஆறு முதல் எட்டு மணி நேரம் ஊறவைத்து சாப்பிடுவதே நல்லது என கரிமா பரிந்துரைக்கிறார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.