Healthy food Tamil News: தென்னிந்தியாவில் பிரபலமான காலை உணவாக இட்லி, தோசை, ஆப்பம் போன்ற உணவுகள் உள்ளன. இந்த உணவுகளுக்கு சுவையை கூட்டுவதே அவற்றுடன் பரிமாறப்படும் சட்னி வகைகள் தான். அந்த வகையில் இந்த உணவுகளுக்கு தமிழகத்தின் பெரும்பாலான ஹோட்டல் மற்றும் வீடுகளில் தேங்காய் சட்னி முக்கிய இடம் உண்டு. அதோடு பெரும்பாலான வீடுகளில் தேங்காய் சட்னி பரிமாறப்படுகிறதோ இல்லையோ ஹோட்டல்களில் கண்டிப்பாக கிடைக்கும்.
இது தவிர, தேங்காய் சட்னி இல்லையென்றால் சிலர் இந்த வகை உணவுகளை உண்ணுவதில்லை என்று அடித்து கூறலாம். அந்த அளவிற்கு தேங்காய் சட்னி பங்கு உள்ளது. ஆனால் இந்த வகை காலை உணவுகளுக்கு விருப்பத்துடன் தயார் செய்யப்படும் தேங்காய் சட்னி சீக்கிரமாகவே கெட்டு போய் விடுகிறது. இது சட்டினியை தயார் செய்யும் நமக்கு சிறிது எரிச்சலை ஏற்படுத்துகிறது. ஆனால் இந்த முறையில் நீங்கள் தேங்காய் சட்னி செய்தால் சுவையாகவும், கூடுதல் நேரம் கெட்டுப்போகாமல் இருக்கும்.
சீக்கிரம் கெட்டு போகாத தேங்காய் சட்னி தயார் செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்
தேங்காய் துருவல் – ஒரு கப்,
காய்ந்த மிளகாய் – 4,
உளுந்தம்பருப்பு – 2 டீ ஸ்பூன்,
கடலைப் பருப்பு – 3 டீ ஸ்பூன்,
புளி,
கறிவேப்பிலை,
எண்ணெய் – சிறிதளவு,
உப்பு – தேவையான அளவு.
நீங்கள் செய்ய வேண்டியவை
ஒரு பாத்திரத்தை எடுத்து சிறிது எண்ணெய் விட்டு, உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போன்றவற்றை வறுக்க வேண்டும். பின்னர், இவற்றோடு தேங்காய் துருவல் சேர்த்து பொன்னிறமாக வறுத்து ஆற வைக்க வேண்டும்.
இந்தக் கலவை நன்றாக ஆறிய பிறகு உப்பு, சிறிதளவு புளி சேர்த்து, தண்ணீர் தெளித்து கெட்டியாக, நைசாக அரைத்து கொள்ள வேண்டும்.
இப்போது நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்த சுவையான வறுத்து அரைத்த தேங்காய் சட்னி ரெடியாக இருக்கும்.
இந்த ஸ்டைலில் அரைத்த தேங்காய் சட்னி டேஸ்டியாகவும், கூடுதல் நேரம் கெட்டுப் போகாமலும் இருக்கும். நீங்களும் இது போன்று முயற்சி செய்து பாருங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற ” (https://t.me/ietamil)