பல வகை இட்லி பொடிகளை செய்தும் சாப்பிட்டும் பார்த்திருப்பீர்கள். ஆனால் வேர்க்கடலை மற்றும் பூண்டில் செய்யப்பட்ட பொடியை ருசித்திருக்க மாட்டீர்கள். இந்த பொடிக்கு சுவையை கூட்டுவது நீங்கள் வறுத்து சேர்க்கும் வேர்க்கடலை தான். இந்த பொடியோடு சிறிதளவு நெய் சேர்த்து சாதத்தோடு சாப்பிடலாம். இந்த இட்லி பொடியை மிகவும் எளிமையாக செய்துவிடலாம். இவை செய்ய மிகக் குறைவான பொருட்கள் தேவைப்படும். மற்றும் இதில் நாம் பயன்படுத்தும் வேர்க்கடலையில் ஊட்டச்சத்து அடர்த்தியாக காணப்படுகிறது.
தேவையான பொருட்கள்
வேர்க்கடலை (தோல் அகற்றப்பட்டது) - 1 கப்
உலர்ந்த சிவப்பு மிளகாய் - 3-4 (காரத்திற்கேற்ப)
பூண்டு - 3-4
புளி - ஒரு சிறிய குமிழ்
சீரகம் - 1 தேக்கரண்டி
கொத்தமல்லி விதைகள் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
நீங்கள் செய்ய வேண்டியவை
முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்து, அதில் வேர்க்கடலை நன்றாக வறுக்கவும். அவை ஏற்கனவே வறுத்திருந்தால், நல்லது. அவை குளிர்ந்ததும், சீரகம் மற்றும் கொத்தமல்லி விதைகளையும் ஒன்றாக வறுக்கவும். பின்னர் பூண்டு, புளி மற்றும் உலர்ந்த சிவப்பு மிளகாய் ஆகியவற்றை (தனித்தனியாக) வறுக்கவும். பூண்டு கருக்காத அளவிற்கு மிதமான தணலில் வைத்து வறுக்கவும். பூண்டின் சுவை மாறாமல் அதே சுவையில் உங்களுக்கு வேண்டுமானால், அவற்றை வறுப்பதை தவிர்க்கலாம்.
இப்போது நீங்கள் வறுத்த பொருட்கள் அனைத்தும் குளிர்ந்தவுடன், அவற்றை ஓரளவுக்கு தூளாக அரைக்கவும். நீங்கள் பொடி அரைக்கும்போது சிறிது இடைவெளி விட்டு அரைக்கவும், இல்லையென்றால் அவற்றில் உள்ள எண்ணெய் சத்துக்கள் வெளியேறக்கூடும். உங்களுக்கு பேஸ்டியாக வேண்டும் என்றால் அப்படி அரைத்துக்கொள்ளலாம். ஆனால் தூள் போன்று வேண்டும் என்று விரும்பினால், கொஞ்சம் இடைவெளி விட்டு அரைப்பது நல்லது. தூளாக அரைத்து முடிந்ததும், அவற்றுடன் தேவையான அளவு உப்பு சேர்க்கலாம்.
நீங்கள் இப்போது அரைத்து தூளாக வைத்துள்ள இந்த பொடியை சிறிது நெய் அல்லது நல்லெண்யுடன் சேர்த்து சேர்த்து இட்லிக்கோ அல்லது சாதத்திற்கோ சேர்த்து ருசிக்கலாம். மற்றும் காற்று புகாத பைகளில் அடைத்து வைக்கொள்ளவும். பொடியை தயாரித்த இரண்டு வாரங்களுக்குள் பயன்படுத்தலாம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " t.me/ietamil