Heath benefits of Coriander water in Tamil: நாம் அன்றாடம் உணவுகளில் பயன்படுத்தும் சில எளிய பொருட்கள் அற்புத ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளன. அத்தகைய எளிய உணவுப் பொருளின் நன்மைகள் குறித்து இப்போது பார்ப்போம்.
கொத்தமல்லி அல்லது தனியாவை கிட்டதட்ட அனைத்து உணவுகளிலும் சேர்த்து நாம் அன்றாடம் பயன்படுத்தி வருகிறோம். அதன் இலைகள், விதைகள் மற்றும் தூள் பொதுவாக உணவுகளில் சுவையூட்டுவதற்காக பயன்படுத்தப்படுகிறது. அதேநேரம் இந்த கொத்தமல்லி இதய ஆரோக்கியம், மூளை ஆரோக்கியம், செரிமானத்திற்கு உதவுதல் மற்றும் இரத்த சர்க்கரை அளவைக் குறைப்பது போன்ற ஆரோக்கிய நன்மைகளையும் நமக்கு வழங்குகின்றன.
மேலும், வயிறு, குமட்டல், வயிற்றுப்போக்கு, குடல் வாயு, மலச்சிக்கல் மற்றும் எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி (IBS) உள்ளிட்ட வயிறு மற்றும் குடல் பிரச்சனைகளுக்கும் கொத்தமல்லி உதவுகிறது. இது மனநல ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. தூக்கமின்மை மற்றும் பதட்டத்தின் அறிகுறிகளைக் குறைக்கும் என்று கூறப்படுகிறது. கொத்தமல்லி பாக்டீரியா மற்றும் பூஞ்சையால் ஏற்படும் நோய்த்தொற்றுகளுக்கு சிகிச்சையளிப்பதுடன் மூட்டு வலி மற்றும் வீக்கத்திற்கும் உதவுகிறது.
கொத்தமல்லி விதையின் குளிர்ந்த கஷாயம் அமிலத்தன்மை, அதிக தாகம், காய்ச்சல், உடலின் எந்தப் பகுதியிலும் எரியும் உணர்வு போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வாக உள்ளது.
ஆயுர்வேத நிபுணர் டாக்டர் டிக்ஸா பவ்சர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கொத்தமல்லி குளிர்பானத்தின் செய்முறையைப் பகிர்ந்துள்ளார்.
கொத்தமல்லி விதைகளை சிறிது சர்க்கரையுடன் சேர்த்து அல்லது சர்க்கரை சேர்க்காமல் குளிர்ந்த கஷாயமாக காலையில் குடிப்பதால், உங்கள் உடலின் எந்தப் பகுதியிலும் எரியும் உணர்வுகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும் என்று டாக்டர் டிக்ஸா பவ்சர் கூறுகிறார். மேலும், அமிலத்தன்மை மற்றும் அதிகப்படியான தாகத்தைப் போக்கவும் உடலை நச்சு நீக்கவும் செய்யவும் உதவுகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
இதையும் படியுங்கள்: மல்லி இலை… கண் பார்வைக்கு இது ரொம்ப முக்கியம்!
இது நீரிழிவு நோய், கொலஸ்ட்ரால், உடல் பருமன், அஜீரணம், ஹார்மோன் சமநிலையின்மை போன்ற பல்வேறு வாழ்க்கை முறை நோய்களிலும் அற்புதங்களைச் செய்கிறது மற்றும் அமிலத்தன்மை, அதிக இரத்தப்போக்கு, அதிக தாகம் போன்றவற்றிலும் கூட அற்புதமான ஆயுர்வேத பொருளாக செயல்படுகிறது என்று டாக்டர் டிக்சா கூறியுள்ளார்.
கொத்தமல்லி குளிர்பானம் தயாரிப்பு செயல்முறை
1. கொத்தமல்லி விதையை இடித்து எடுத்துக் கொள்ளவும்.(எ.கா: 25 கிராம்)
2. ஆறு பங்கு தண்ணீர் சேர்க்கவும் (எ.கா: 150 மிலி)
3. இரவு முழுவதும் அல்லது 8 மணி நேரம் மூடி வைக்கவும்.
4. மறுநாள் காலை, வடிகட்டி, சிறிது சர்க்கரையுடன் கலந்து வெறும் வயிற்றில் சாப்பிடவும்.
காலையில் வெறும் வயிற்றில் அரை ஸ்பூன் சர்க்கரையுடன் 40-50 மில்லி இந்த பானத்தை நீங்கள் சாப்பிடலாம். இதை 10 முதல் 30 மி.லி அளவுகளில், தினமும் 2-3 முறை சர்க்கரையுடன் சேர்த்து உட்கொள்ளலாம். அதிகபட்ச நன்மைகளுக்கு, அதை 6-8 வாரங்களுக்கு எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது.
இந்த பானம் தாகத்திற்கு பயனுள்ளதாக இருக்கும், எரியும் உணர்வு, பித்த கோளாறு, அஜீரணம், வயிற்று வலி, காய்ச்சல், புழு தொல்லை ஆகியவற்றிற்கு உதவுகிறது என டாக்டர் டிக்ஸா பவ்சர் கூறுகிறார்.
மேலே உள்ள கட்டுரை தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே மற்றும் தொழில்முறை மருத்துவ ஆலோசனைக்கு மாற்றாக இல்லை. உங்கள் உடல்நலம் அல்லது மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் எப்போதும் உங்கள் மருத்துவர் அல்லது பிற தகுதிவாய்ந்த சுகாதார நிபுணரின் வழிகாட்டுதலைப் பெறவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.