Idli recipe in tamil: தென்னிந்திய காலை உணவுகளில் மிகவும் புகழ் பெற்ற ஒன்றாக இட்லி உள்ளது. அது மட்டுமல்லாமல் சிறுவர்கள் முதல் வயது முதிந்தோர் வரை விரும்பி உண்ணும் உணவாகவும் இட்லி உள்ளது. சூடான இட்லிகளை சட்னிகளுடனும், வீட்டில் வைக்கும் குழம்புகளுடனும் சேர்த்து சுவைத்தால் திருப்தியான உணவு உண்பதற்கு ஈடாக இருக்கும்.
அப்படிப்பட்ட இட்லிகளை சில சமயங்களில் மிருதுவானதாக தயார் செய்ய முடிவதில்லை. இப்படி பூ போன்ற இட்லி தயார் செய்வது மாயா வித்தை அல்ல. நாம் இன்று பார்க்கவுள்ள இந்த சிம்பிளான டிப்ஸ்யை முயற்சித்தாலே போதும். மிருதுவான இட்லிக்கு பல வகை டிப்ஸ்கள் இருந்தாலும் இந்த டிப்ஸ் சற்றே வித்தியாசமானது மற்றும் எளிமையானது.
சரி, அந்த சிம்பிள் டிப்ஸ் பற்றி பார்ப்போமா!
மிருதுவான மற்றும் புசுபுசு இட்லிக்கான டிப்ஸ்:-

இட்லிக்கான மாவு அரைக்க சாப்பாடு அரிசி, புழுங்கல் அரிசி, ரேசன் அரிசி அல்லது இட்லி அரிசி ஆகிய எதாவது ஒன்றை 3 1/2 டம்ளர் அளவில் தலை தட்டி அளந்து எடுத்துக் கொள்ளவும்.
பிறகு, இவற்றுடன், 1 டீஸ்பூன் வெந்தயம் சேர்த்து 3 முதல் 4 முறை தண்ணீர் விட்டு அலசி ஊற வைத்துக்கொள்ளவும்.
இதே போல் ஒரு டம்ளர் அளவு முழு உளுந்து எடுத்து ஊற வைத்துக்கொள்ளவும்.
இப்படியான அளவுகளில் நீங்கள் எடுக்கும் போது அவை மிக்ஸியில் அரைக்க சற்று எளிமையாக இருக்கும்.
மிருதுவான இட்லிக்கு இங்கு முக்கிய பொருள் ஒன்று சேர்க்க வேண்டும். அது சேர்க்கும் போது இட்லி பஞ்சு போல மெத்தென்று வரும். அந்த பொருள் வேறொன்ரும் இல்லை. அது வெள்ளை அவல் தான்.
இந்த வெள்ளை அவலை அதே அளவில் ஒரு பங்கு அளவிற்கு தலை தட்டி அளந்து எடுத்துக் கொள்ளவும்.
ஒருவேளை நீங்கள் நைஸ் அவல் வைத்திருந்தால் அவற்றை அரைக்கும் போது ஊற வைத்துக் கொள்ளவும். கெட்டியான அவலாக இருந்தால் அரைப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னர் ஊற வைத்தால் போதும்.
சிகப்பு அவல் பயன்படுத்தினால் இட்லியின் நிறம் மாறிவிடும் ஆனால் உடலுக்கு நல்ல ஆரோக்கியம் கிடைக்கும்.
அரிசி மற்றும் உளுந்து இரண்டையும் சுமார் 3 நேரம் முதல் நான்கு மணி நேரம் வரை ஊற வைத்துக் கொள்ளவும்.
இப்போது ஒரு பெரிய மிக்ஸி ஜார் எடுத்து அதில் முதலில் உளுந்தை இட்டு வடைக்கு ஆட்டுவது போல் தண்ணீர் விடாமல் சிறிது சிறிதாக நீரை தெளித்து தெளித்து பொங்கி வர ஆட்டவும்.
இறுதியாக ஊற வைத்த அவலை சேர்த்து ஒரு முறை அரைத்து எடுத்து கொள்ளவும்.
தொடர்ந்து அரிசியை இட்டு மிகவும் நைசாக அரைக்காமல் சற்று நொறுநொறுப்பாக அரைத்துக்கொள்ளவும்.
மாவை அதிக நாட்கள் பயன்படுத்த அரைக்கும் போது குளிர்ந்த நீர் பயன்படுத்தவும்.
கடைசியாக கல் உப்பு சேர்த்து நன்கு சூடு பறக்க கலந்து வைத்துக் கொள்ளவும்.
மிக்ஸியின் மோட்டார் சூட்டில் மாவு 3 மணி நேரத்திலேயே இட்லி நன்கு புளித்து விடும்.
இப்படி இந்த எளிய செய்முறையை பயன்படுத்தி சாஃப்டான இட்லி தயார் செய்து ருசித்து மகிழவும்.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil