Instant Dosa Recipe in tamil: தென்னிந்திய காலை உணவு வகைகளில் மிகவும் பிரபலமான ஒன்றாக தோசை வலம் வருகிறது. பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை விரும்பி ருசிக்கும் இந்த அற்புதமான உணவு தற்போது ஏகப்பட்ட வெரைட்டிகளில் கிடைக்கின்றது. இந்த வித்தியாசமான தோசைகளை தயார் செய்ய நாம் முயன்று இருப்போம். ஆனால், நாம் நினைத்தது போன்ற ரிசல்ட் கிடைத்திருக்காது.
இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் ஒரு வித்தியாசமான தோசையை முயற்சி செய்ய நினைப்பவராக நீங்கள் இருந்தால், நிச்சயம் இந்த சிவப்பு நிற தக்காளி தோசையை முயற்சிக்கலாம். மிகவும் சுலபமாக தயார் செய்யக்கூடிய இந்த தோசைக்கான எளிய செய்முறை இங்கு வழங்கியுள்ளோம்.
சிவப்பு நிற தக்காளி தோசை சிம்பிள் செய்முறை:

இந்த சுவைமிகுந்த சிவப்பு நிற தக்காளி தோசையை தயார் செய்ய முதலில் ஒரு மிக்சியை எடுத்துக்கொள்ளவும். அதில்,
பெரிய அளவு பழுத்த தக்காளி – 1
சிறிய துண்டு – இஞ்சி
சீரகம் – 1/4 ஸ்பூன்
சோம்பு – 1/4 ஸ்பூன்
பெருங்காயப் பொடி – 2 சிட்டிகை
மிளகாய் பொடி – 1 ஸ்பூன், இவையனைத்தையும் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு தண்ணீர் விடாமல் அரைத்துக் கொள்ளவும்.
தொடர்ந்து ஒரு சிறிய பாத்திரத்தை எடுத்து அதில் தேவையான அளவு தோசை மாவை சேர்த்துக்கொள்ளவும். பின்னர் முன்பு அரைத்துள்ள பேஸ்ட்டை அதில் சேர்த்துக் கொள்ளவும்.
பிறகு இந்த மாவுக்கலவையுடன் 2 சிட்டிகை உப்பு, 1 டேபிள்ஸ்பூன் கடலை மாவு சேர்த்து மீண்டும் நன்கு மிக்ஸ் செய்து கொள்ளவும்.
இப்போது இந்த மாவுக் கலவையை 5 நிமிடங்களுக்கு ஒரு மூடியால் மூடி வைத்துக்கொள்ளவும். இதற்கிடையில், தோசைக்கல்லுக்கு மிதமான சூடு சேர்த்து தோசை ஊற்ற தயார் செய்துகொள்ளவும்.
பிறகு அதில் மாவை ஊற்றி அவை ஓரளவு வெந்து வரும் போது நெய் அல்லது எண்ணெய் விட்டு மொறுமொறுவென இருக்கும் தோசையை எடுக்கவும்.

இந்த அற்புதமான மொறுமொறு சிவப்பு நிற தக்காளி தோசையுடன் உங்களுக்கு பிடித்த சைடிஷ்களை சேர்த்து ருசித்து மகிழவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil