ஆரோக்கியமாக இருக்க பலரும் சர்க்கரையை தவிர்த்து வெல்லம் மற்றும் தேன் ஆகியவற்றை இனிப்பு சுவைக்காக பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.
உண்மையில் வெல்லம் கலோரிகளைத் தவிர்ப்பதற்கும் இன்சுலின் அதிகரிப்பை குறைப்பதற்கும் உத்தரவாதமான வழி என்று அர்த்தமா? வெல்லம் மற்றும் சர்க்கரை ஆகிய இரண்டும் ஒரே மாதிரியான கலோரியை கொண்டுள்ளன என்று இன்ஸ்டாகிராமில், உணவியல் நிபுணர் டாக்டர் ரியா பானர்ஜி அன்கோலா பகிர்ந்துள்ளார். மேலும் அவர் வெளியிட்டுள்ள தகவலில்,
"சர்க்கரை மற்றும் வெல்லம் இரண்டுமே கரும்பில் இருந்து தயாரிக்கக்கூடியவைதான். வெல்லமானது கரும்பில் இருந்து நேரடியாக எடுக்கக்கூடியது. அதனால் தான் அது சற்று அடர் நிறத்தை பெற்றுள்ளது. அதுவே சர்க்கரை எடுத்துக்கொண்டால் பதப்படுத்தப்பட்டு வெண்மை நிறம் கொண்டு வர ரசாயனங்கள் சேர்க்கப்பட்டு தயாரிக்கப்படுகிறது. இரண்டிலுமே கலோரிகள் இருந்தாலும் வெல்லம் பதப்படுத்தப்படாதது என்பதால் ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது.
வெல்லம் ஏன் சிறந்ததாக கருதப்படுகிறது?
வெல்லத்தில் கலோரிகள் இருந்தாலும் இரும்புச்சத்து, நார்ச்சத்து மற்றும் தாதுக்கள் உள்ளன. சர்க்கரை கலோரிகளை மட்டுமே கொண்டுள்ளது. அதில் ஊட்டச்சத்துக்கள் இல்லை.
வெல்லத்தை சாப்பிட அறிவுறுத்தப்படுகிறதா?
வெல்லம் சர்க்கரையை விட ஊட்டச்சத்து நிறைந்தது என்றாலும் அதிக கலோரிகளை உள்ளடக்கியது. அதனால் குறைந்த அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். நீரிழிவு நோயாளிகள் வெல்லம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
ஹெல்த்லைன்.காம் படி, வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் சாப்பிடுவதன் மூலம் ஒருவர் கூடுதல் ஊட்டச்சத்துக்களைப் பெறுகிறார். ஆனால் ஊட்டச்சத்துக்களின் ஆதாரமாக இனிப்பானை நம்புவதற்கு பதிலாக, உண்ணும் உணவுகளிலிருந்து ஊட்டச்சத்துக்களைப் பெற வேண்டும் என குறிப்பிடப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil