மிஸஸ் சவுத் இந்தியா போட்டி; கோவை இளம் தொழில் அதிபர் 2-வது இடம்
பழங்கள் மற்றும் தானியங்களை அதிகம் உட்கொண்டு, சரியான உடற்பயிற்சி மற்றும் யோகா செய்யும் பட்சத்தில் சிறந்த அழகு மற்றும் உடற்கட்டினை பெற முடியும் – மிஸஸ் சவுத் இந்தியா ரன்னர்அப் பேட்டி
கேரளாவில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான திருமதி அழகி போட்டியில் கோவையை சேர்ந்த தொழிலதிபரான இளம்பெண் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.
Advertisment
கேரள மாநிலம் கொச்சியில் அண்மையில் தென்னிந்திய திருமதி அழகி போட்டி நடைபெற்றது. திருமணமான பெண்களுக்கான இந்த அழகி போட்டியில் தென்மாநிலங்களை சேர்ந்த 14 பெண்கள் போட்டியாளர்களாக இடம்பெற்றிருந்தனர். இதில் கோவையை சேர்ந்த நடன கலைஞரும், தொழிலதிபருமான ஷாலுராஜ் இரண்டாமிடம் பிடித்துள்ளார்.
இது தொடர்பாக கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, கடந்த இரண்டு ஆண்டுகளாக அழகி போட்டிகளில் பங்கேற்று வருகிறேன். கடந்த 2022 ஆம் ஆண்டு 'மிஸஸ் தமிழ்நாடு' பட்டம் வென்றுள்ளேன். தற்போது மிஸஸ் சவுத் இந்தியா என்ற போட்டியில் இரண்டாம் இடம் பெற்றுள்ளேன். அடுத்த கட்டமாக 'மிஸ்ஸ் இந்தியா குளோபல்' போட்டியில் பங்கேற்க உள்ளேன், என்று தெரிவித்தார்.
இன்றைய இளம் பெண்கள் துரித உணவுகள் மற்றும் மேலைநாட்டு உணவு பழக்கங்களை அதிகம் கையாளுவதாகவும் பழங்கள் மற்றும் தானியங்களை அதிகம் உட்கொண்டு சரியான உடற்பயிற்சி, யோகா ஆகியவை செய்யும் பட்சத்தில் சிறந்த அழகு மற்றும் உடற்கட்டினை பெற முடியும் எனவும் ஷாலுராஜ் குறிப்பிட்டார்.
தற்போது மிஸஸ் சவுத் இந்தியா அழகி போட்டியில் பெற்றுள்ள வெற்றியைத் தொடர்ந்து மகளிர் மேம்பாடு கிராமப்புற பெண்களுக்கான சானிட்டரி நாப்கின் வழங்குவது உள்ளிட்ட சேவைகளில் ஈடுபட இருப்பதாகவும் சிறுமிகள் பாலியல் பலாத்காரத்தில் இருந்து விடுபடுவதற்காக, போக்சோ சட்டப்பிரிவை பயன்படுத்துவதற்கான வயது வரம்பை 18 இலிருந்து 15 ஆக குறைக்க வேண்டும் என தான் கூறியதன் அடிப்படையிலேயே அழகி போட்டியில் தனக்கான வெற்றி உறுதி செய்யப்பட்டதாகவும், எனவே அது தொடர்பான பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள இருப்பதாகவும் ஷாலுராஜ் கூறினார்.
பி.ரஹ்மான், கோவை
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil