scorecardresearch

ஆரோக்கியம் : பாரம்பரிய அரிசியில் ‘ட்ரெண்டி’ உணவுகளை பரிமாறும் ‘மண்வாசனை மேனகா’

நம்மிடம் என்னவெல்லாம் அரிசி வகைகள் இருந்தன என்பது, இந்தத் தலைமுறைக்கே தெரியவில்லை.

ஆரோக்கியம் : பாரம்பரிய அரிசியில் ‘ட்ரெண்டி’ உணவுகளை பரிமாறும் ‘மண்வாசனை மேனகா’
Mannvaasanai Menaka

பாரம்பரிய உணவு முறை: ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும் என நினைப்பவர்களில், அதனை செயல்படுத்துபவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். ”உணவே மருந்து” எனும் வார்த்தையில் இருக்கும் அழுத்தம் உண்மையில் நமது நடைமுறை வாழ்க்கையில் இல்லை என்பதே கசப்பான உண்மை. பசியை போக்க, ஏதோ ஒன்றை சாப்பிட்டு வயிற்றை நிரப்பும் அவலம் தான் பரவலாக விரவிக் கிடக்கிறது. ஒருவேளை உடல்நிலையில் நாமாகவே அக்கறை கொண்டு சத்தானதை சாப்பிட விரும்பினால், அந்த உணவுகள் எங்கே கிடைக்கும், நம்மால் வீட்டிலேயே சமைக்க எளிய வழிகள் உண்டா என பல்வேறு கேள்விகள் எழும். இந்த மாதிரியான பல கேள்விகளுக்கு ‘மண்வாசனை மேனகாவிடம்’ பதில் இருக்கிறது.

இன்றைய செய்திகள் Live : குடியாத்தம் தி.மு.க. எம்.எல்.ஏ காத்தவராயன் காலமானார்!

தமிழர்களின் பாரம்பரிய உணவில் அரிசியை பிரிக்கவே முடியாது. ஆனால் இன்றோ பல வகை பாரம்பரிய அரிசிகள் அழிந்து வருகின்றன. நம்மிடம் என்னவெல்லாம் அரிசி வகைகள் இருந்தன என்பது, இந்தத் தலைமுறைக்கே தெரியவில்லை. இப்படியான சூழலில், இந்த நவீன யுக இளைஞர்கள், விரும்பி சாப்பிடும் உணவுகளை பாரம்பரிய அரிசியில் செய்து அசத்துகிறார் மேனகா.

முன்பு தமிழகத்தில் மட்டும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரிசி ரகங்கள் புழக்கத்தில் இருந்துள்ளது. ஆனால், காலப்போக்கில் இந்த எண்ணிக்கை மிகவும் குறைந்து, சொற்ப எண்ணிக்கையிலான அரிசி வகைகள் மட்டுமே தற்போது பயன்பாட்டில் உள்ளது. இது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துவதோடு, பாரம்பரிய அரிசி வகைகளில் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்து வெற்றிகரமாக விற்பனையும் செய்து வரும் மேனகா, ‘மண்வாசனை’ என்ற இயற்கை விளைபொருள் அங்காடியையும் நடத்தி வருகிறார். இவரிடம் 100-க்கும் மேற்பட்ட அரிசி வகைகள் இருப்பது கூடுதல் தகவல். சென்னையைச் சேர்ந்த மேனகாவை ஓர் மாலை வேளையில் சந்தித்தோம்.

“இந்த இயற்கை விவசாயத்துக்குள்ள வந்து 11 வருஷம் ஆகிடுச்சு. இதனை என் கணவர் தான் ஆரம்பிச்சார். நாங்க ரெண்டு பேரும் ஒவ்வொரு கார்ப்பரேட் நிறுவனங்கள்ல வேலை செஞ்சோம். 2009-ல அவர் நம்மாழ்வார் ஐயா, நெல் ஜெயராமன் ஐயா இவங்கள பாத்து இன்ஸ்பையராகி நிறைய அரிசி வகைகள அவர் தேட ஆரம்பிச்சாரு. அந்த நேரத்துல எனக்கு முதல் குழந்தை பிறந்துச்சு. அப்போ குழந்தைக்கு ஆரோக்கியமா எதாச்சும் கொடுக்கணும்ன்னு முடிவு பண்ணுனோம். பாரம்பரிய அரிசியில எப்படி ‘ஹெல்த் மிக்ஸ்’ பண்ணலாம், வேற என்ன பண்ணலாம்ன்னு யோசிச்சோம். இது சம்பந்தமா நிறைய வகுப்புகளுக்கு என் கணவர் என்னை அனுப்பினார். அப்படியே ‘மண்வாசனை’ விளை பொருள் அங்காடியையும் ஆரம்பிச்சோம்.

Mannvasanai menaka
கையில் விருதுடன் மேனகா

அதுக்கப்புறம் 2017-ல் என் கணவர் ஒரு விபத்துல தவறிட்டாரு. சரி அவர் ஆரம்பிச்சத அப்படியே விட்டுடக் கூடாதுன்னு, நான் அதை தொடர்ந்து நடத்திட்டு வர்றேன். எங்களோட நோக்கமே எல்லாருக்கும் ஆரோக்கியம் கிடைக்கணும்ங்கறது தான். இந்தியாவுலயே முதன் முறையா பாரம்பரிய அரிசியில ஐஸ் கிரீம் அறிமுகப்படுத்தியிருக்கோம். பொதுவா எல்லாரும் பாரம்பரிய அரிசி வகைகள்னாலே இட்லி, தோசை, புட்டு, இடியாப்பம்ன்னு தான் யோசிப்பாங்க. ஆனா இந்தத் தலைமுறைக்கு ஏத்தபடி நாமளும் கொஞ்சம் அப்டேட்டடா இருந்தா தான் அவங்கள நம்ம வழிக்கு கொண்டு வர முடியும். குறிப்பா, ஸ்கூல், காலேஜ் பசங்கள ஆரோக்கிய உணவுக்குள்ள கொண்டு வர்றது தான் மிகப்பெரிய சவால். அதனால அவங்களுக்குப் பிடிச்ச ஐஸ்கிரீம், கட்லெட், நூடுல்ஸ், ஸ்வீட் பால், பான் கேக்ன்னு எல்லாத்தையும் பாரம்பரிய அரிசியில செஞ்சு கொடுத்துட்டோம்ன்னா, அவங்களுக்கு டேஸ்ட், ஆரோக்கியம் ரெண்டுமே கிடைக்கும்.

சீரக சம்பா, கறுங்குருணை, கிச்சடி சம்பா, மாப்பிள்ளை சம்பா, சின்னக்கார், கறுப்பு கவுனி, தூய மல்லின்னு 25 – 30 அரிசி வகைகள் தான் இப்போ விளைச்சல்ல இருக்கு. நான் நிறைய பேருக்கு ரெசிப்பீக்களும் சொல்லித் தர்றேன். புதுசு புதுசா நம்ம பாரம்பரிய அரிசில என்னெல்லாம் செய்ய முடியுமோ அதெல்லாம் நான் தொடர்ந்து முயற்சி பண்ணிட்டு வர்றேன். உதாரணமா, ஜிகர்தண்டால கறுப்பு கவுனி அரிசியை போட்டு குழந்தைங்களுக்கு கொடுத்துருவேன்.

சூப்பர் சிங்கர் ஜூனியர்: நிகழ்ச்சி ஆரம்பிக்கும் முன்பே சந்திரபாபு பாடலால் வைரலான போட்டியாளர்

பாரம்பரிய அரிசிகளுக்கான ஒர்க்‌ஷாப் வகுப்புகளும் நடத்துறேன். தவிர, ஸ்கூல், காலேஜ்ல இது சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்ச்சியையும் நடத்திட்டு வர்றேன். அரிசியை வச்சு என்ன மாதிரியெல்லாம் உணவு தயாரிக்கலாம்ங்கற சூட்சுமத்தை அவங்களுக்கும் சொல்லித் தர்றேன். எங்களுக்கு தேவையான அரிசியை, உண்மையான இயற்கை விவசாயிகளை கண்டு பிடிச்சு, அவங்கக் கிட்ட இருந்து நேரடியா வாங்குறோம். பெண்களைப் பொறுத்த வரைக்கும், யாரையும் சார்ந்திருக்காம சொந்தக் கால்ல நிக்கிறது ரொம்ப முக்கியம்” எனும் மேனகாவிடம் ஸ்பெஷல் ரெசிப்பீ ஒன்றையும் கேட்டோம்.

கட்லெட்

”உருளைக் கிழங்கு, கேரட், பட்டானி, இஞ்சி பூண்டு விழுது, கர மசாலா, மிளகாய் தூள், இது கூட ஒருவேளை அவங்க பாரம்பரிய அரிசி சமைக்கிறவங்களா இருந்தா மீதம் இருக்குற சாதத்தையும் இது கூட சேர்த்து பிசைஞ்சு, கட்லெட் மாதிரி தட்டி பிரெட் தூள்ல புரட்டி எடுத்து, கொஞ்சமா எண்ணெய் விட்டு கட்லெட் செஞ்சு கொடுத்தா, குழந்தைங்களுக்கு ஹெல்த்தியான ஈவ்னிங் ஸ்நாக்கா இருக்கும்” என்ற மேனகாவுக்கு பாரம்பரிய உணவு வகைகளுக்கென உணவகம் ஆரம்பிப்பது தான் லட்சியமாம். இலக்கை அடையவும், மண்வாசனையை சிறப்புடன் நடத்தவும் வாழ்த்து சொல்லி விடைபெற்றோம்.

 

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Mannvasanai menaka traditional rice recipe organic farming