வாயில் ஏற்படும் கொப்புளங்கள் மற்றும் வாய்ப்புண் உணவை உண்ணும் போது கடுமையான வலியை உண்டாக்கும். எனவே இதற்கு சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்காவிட்டால், வலிமிக்க வாய்ப்புண்ணிற்கு வழிவகுக்கும்.
பொதுவாக வாய்ப்புண் சரியாவதற்கு சில நாட்கள் எடுத்துக் கொள்ளும். ஆகையால் உணவை மெல்லும் போது, பானங்களைப் பருகும் போது, சிரமத்தை சந்திக்க வேண்டியிருக்கும்.
வாய்ப்புண் மற்றும் கொப்புளங்கள் எதனால் வருகிறது?
1. தொடர்ச்சியாக உடைந்த பற்களில் நாக்கைக் கொண்டு குடைவது
2. மோசமான வாய் ஆரோக்கியம்
3. சாப்பிடும் போது நாக்கை கடித்துவிடுவது
4. வைரல் தொற்றுக்களின் தாக்கம்
5.சூடான அல்லது காரமான உணவுகளால் நாக்கு வெந்து போவது.
சரிசெய்யும் சில இயற்கை வழிகளைக் காண்போம்.
1. கற்றாழை
கற்றாழை, வீக்கம் மற்றும் வலியின் அறிகுறிகளைக் குறைக்க உதவும். மேலும் இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள், வாய்ப்புண்ணை விரைவில் ஆற்றிவிடும். கற்றாழை இலையில் உள்ள ஜெல்லை எடுத்து, வாய்ப்புண் மற்றும் கொப்புளம் உள்ள இடங்களில் தடவி, 5-10 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.
2. பேக்கிங் சோடா
நாக்கில் புண்ணை உண்டாக்கிய பாக்டீரியாக்களை, பேக்கிங் சோடாவில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் அழித்து விடும். மேலும் பேக்கிங் சோடா நாக்கில் pH அளவை பராமரிப்பதோடு, தொற்றுக்களையும் தடுக்கும். எனவே 1 டீஸ்பூன் பேக்கிங் சோடாவை ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் சேர்த்து கலந்து, ஒரு நாளைக்கு மூன்று முறை தடவ வேண்டும். இவ்வாறு செய்து வர வாயில் ஏற்பட்டுள்ள வலி விரைவில் நீங்கும்.
3. கிளிசரின்
கிளிசரின் வாயில் உள்ள கொப்புளங்களை சரிசெய்ய உதவும். இந்த தகவல் ஆராய்ச்சிகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இது வலி மற்றும் வாய்ப்புண்ணால் ஏற்படும் எரிச்சலையும் குறைத்து விடும். கிளிசரின் மற்றும் தேனை சரிசம அளவில் கலந்து, வாய் புண் மற்றும் கொப்புளங்கள் உள்ள இடத்தில் தடவி, 4-5 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.
4. தேன்
வாய்ப்புண் மற்றும் கொப்புளங்களை சரிசெய்ய, தேனில் உள்ள வலி நிவாரண மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள், உதவுவது நிரூபிக்கப்பட்டுள்ளது. இது வலியைக்குறைப்பதோடு வீக்கத்தையும் குறைக்கும். ஒரு காட்டன் உருண்டையை நீரில் நனைத்து பிழிந்து கொள்ள வேண்டும். பின் அந்த ஈரமான காட்டனை தேனில் தொட்டு, வாய்ப்புண் உள்ள இடத்தில் வைக்க வேண்டும். இப்படி 3-5 நிமிடம் வைத்திருங்கள். அதன் பின் வெதுவெதுப்பான நீரால் கழுவுங்கள்.