Navratri 2019 And Durga Puja History, Importance: நவராத்திரி என்பது ஒவ்வொரு ஆண்டும் 9 இரவு, 10 நாட்கள் கொண்டாடப்படும் இந்துக்கள் பண்டிகை. தென் மாநிலங்களில், இத்திருவிழா மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. முதல் மூன்று நாட்கள் துர்கா தேவியை மையப்படுத்தி நவராத்திரி பூஜைகள் மேற்கொள்ளப்படும். அடுத்த மூன்று நாட்கள் லட்சுமி தேவி மற்றும் கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி ஆகியோருக்கு நவராத்திரி விழா கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இதில் சரஸ்வதி தேவியின் ஆசீர்வாதம் இருப்பதாக நம்பப்படும் கடைசி நாள் விஜயதசாமி தினமாக கொண்டாடப்படுகிறது. ஆகவே, இந்த நாளில் முதன் முதலில் பள்ளி செல்லும் குழந்தைகள் பள்ளியில் சேர்க்கப்படுகிறார்கள். அதோடு புதிய முயற்சிகளை தொடங்குவதற்கும் ஏற்ற நாளாகவும் விஜயதசமி கருதப்படுகிறது. நவராத்திரி கொண்டாட்டத்தில், புகழ்பெற்ற காவியம், புராணங்களான ராமாயணம் அல்லது தேவி மகாத்மியாவை அடிப்படையாகக் கொண்ட தீமைக்கு எதிரான போரும் வெற்றியும் கருப்பொருளாகும்.
வீடுகள் சுத்தம் செய்யப்பட்டு, வெள்ளையடிக்கப்பட்டு, அலங்கரிக்கப்படும். இப்படி ஒன்றிரண்டு மாதங்களுக்கு முன்பே மக்கள் இந்த நவராத்திரி திருவிழாவிற்கு தயாராகி விடுவார்கள். இது சென்னையில் ‘பொம்மைகளின் திருவிழா’ என்று அழைக்கப்படுவதால், குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இத்திருவிழாவில் தங்களை முதன்மையாக ஈடுபடுத்திக் கொள்கின்றனர். ஒன்பது நாட்களுக்குமான பொம்மைகள், பரிசுப் பொருட்கள் மற்றும் பூஜைக்குத் தேவையான பொருட்களை பெண்கள் வாங்கி வருவார்கள். அதே நேரத்தில் ஆண்கள் கொலு வைப்பதற்கான படிக்கட்டையும் வாங்கியும், அதற்கு பெயிண்ட் அடித்தும் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள். பண்டிகையின்போது தங்களை சந்திக்க வரும் உறவினர்கள் மற்றும் நண்பர்களை எதிர்பார்த்து உற்சாகமான மனநிலைக்கு மக்கள் போய்விடுவார்கள்.
மேலும் படிக்க : நவராத்திரி கொலுவில் கட்டாயம் இடம் பெரிய வேண்டிய பொம்மைகள் என்னென்ன?
ஒவ்வொரு நாள் மாலையும், நவராத்திரி கொண்டாட்டத்திற்காக மக்கள் தங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளுக்கு சென்று அன்பையும், சுண்டலையும் பரிமாறிக் கொள்கிறார்கள். தமிழ்நாட்டில், ராமாயணம், மகாபாரதம் போன்ற பல்வேறு தீம்களைக் கொண்ட பொம்மைகளால் நவராத்திரி வகைப்படுத்தப்படுகிறது. மக்களின் கிரியேட்டிவைப் பொறுத்து, காட்டு விலங்குகள், காடு, மலை, சுற்றுச் சூழல் மாசுபாடு என பல்வேறு தீம்களை மையமாகக் கொண்டு நவராத்திரி கொலுவில் பொம்மைகள் வைக்கப்படும்.
இந்த ஒன்பது நாட்களும் அண்டை வீட்டார் மற்றும் நண்பர்களை சந்தித்து, சோஷியல் ரிலேஷன்ஷிப்பை ஏற்படுத்துவது தான் இதில் முக்கியத்துவமானது. அந்த நாட்களில் தொலைக்காட்சிகள், தொலைபேசிகள் மற்றும் செல்போன்கள் பயன்படுத்தப்படாது. இந்த பாரம்பரியமான பண்டிகை அருகிலுள்ள அன்பானவர்களைச் சந்திக்க ஒரு சிறந்த வழியாகும்.
சென்னையைப் பொறுத்தவரை நவராத்திரியின் ஒரு அற்புதமான அம்சம் மைலாப்பூர், மாம்பலம் மற்றும் மந்தைவெளி தெருக்களில் பரவியிருக்கும் புதிய நவராத்திரி பொம்மைகளை பேரம் பேசி வாங்குவது தான்.
மேலும் படிக்க : துவங்கியது நவராத்திரி… இந்த வழிபாட்டால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?