ஆண்கள் இறைச்சி சாப்பிட்டால் உடலுறவு கொள்ள மாட்டேன் என பெண்கள் ஸ்டிரைக் செய்ய வேண்டும் என பீட்டா அமைப்பு கூறியுள்ளது சர்ச்சையாகியுள்ளது.
விலங்குகள் நல அமைப்பான பீட்டா, உலகம் முழுவதும் விலங்குகள் துன்புறுத்தப்படுதலுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறது. மேலும், விலங்கு உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டாம் என்றும், சைவ உணவுமுறைக்கு மாறவும் வலியுறுத்தி வருகிறது. குறிப்பாக மாடுகளில் இருந்து கிடைக்கும் பால் தவிர, சைவ உணவை மட்டும் எடுத்துக்கொள்ளும் வீகன் முறைக்கு மாறவும், அசைவ உணவுகளை முழுமையாக நிராகரிக்கவும் கோரிக்கை வைத்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.
இதையும் படியுங்கள்: World Heart Day: சுகர் பாதிப்பு உள்ளவங்களுக்கு இதய நோய் அபாயம்? நிபுணர் விளக்கம்
இருப்பினும் காலம்காலமாக கடைபிடித்து வரும் பல்வேறு பழக்கவழக்கங்களை மாற்றச் சொல்லியும் அதற்கு தடை விதிக்கவும் பீட்டா அமைப்பு போராடி வருவதால் விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது. இந்த அமைப்பின் இந்திய பிரிவு தமிழகத்தின் புகழ்பெற்ற வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டை தடை செய்ய வேண்டும் என நீதிமன்றத்தில் போராடி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில், பீட்டா அமைப்பு தற்போது பொதுமக்களிடம் குறிப்பாக பெண்களிடம் வைத்திருக்கும் கோரிக்கை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதோடு, கடும் எதிர்ப்புகளையும் சந்தித்து வருகிறது.
அதாவது ஆண்கள் இறைச்சி சாப்பிட்டால் உடலுறவு கொள்ள மாட்டேன் என பெண்கள் ஸ்டிரைக் செய்ய வேண்டும் என பீட்டா அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
ஏனென்றால் பெண்களை விட ஆண்களே அதிக இறைச்சி உணவுகளை எடுத்துக் கொள்கிறார்கள் என பீட்டா கூறியுள்ளது. எனவே அதிகமாக மாமிசம் சாப்பிடும் ஆண்களுடன் பெண்கள் உடலுறவு கொள்வதை நிறுத்த வேண்டும் என பீட்டா வலியுறுத்தியுள்ளது.
அதிக மாமிசம் சாப்பிடுவதன் மூலம் தங்கள் ஆண்மையை நிரூபிக்க முடியும் என ஆண்கள் நினைக்கிறார்கள். ஆனால் அவர்கள் விலங்குகளுக்கு தீங்கு விளைவிப்பதோடு மட்டுமல்லாமல், இந்த பூமிக்கும் தீங்கு விளைவிக்கிறார்கள் என பீட்டா கூறியுள்ளது.
மேலும், பெண்களைக் காட்டிலும் ஆண்கள் அதிக அளவு மாமிசம் சாப்பிடுவதால் தான் காலநிலை மாற்றம் நிகழ்ந்திருக்கிறது என பீட்டா கூறியுள்ளது.
அதாவது 41% பசுமை இல்ல வாயுக்கள் வெளியாவதற்கு காரணமே அசைவ உணவு முறை தான். எனவே, ஆண்கள் தங்கள் செயல்களுக்கு பொறுப்பேற்க வேண்டும். இப்போது காலநிலையில் பசுமை இல்ல வாயுக்களின் தாக்கம் மிகவும் விகிதாசாரமாக பெரியதாக இருப்பதாக ஆராய்ச்சி காட்டுகிறது, அதை சரிசெய்ய ஆண்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இதைச் செய்வதற்கான எளிதான, ஆரோக்கியமான, எளிய வழி சைவ உணவு உண்பதாகும் என பீட்டா கூறியுள்ளது.
மேலும், அனைவரும் வீகன் உணவு முறைக்கு மாற வேண்டும். ஆண்களிடம் இது பற்றி பெண்கள் எடுத்துக் கூற வேண்டும். இல்லை என்றால் உடலுறவு கொள்ள மாட்டேன் என ஸ்டிரைக் செய்ய வேண்டும். உடலுறவு கொள்ளும் முன் ஆண்கள் அசைவம் சாப்பிட்டு இருக்கிறார்களா என பரிசோதியுங்கள். அசைவம் சாப்பிடுவதை நிறுத்தினால் தான் உடலுறவு கொள்ளலாம் என சொல்லுங்கள். ஆண்கள் வீகனாக மாறும் வரை பெண்கள் செக்ஸ் ஸ்டிரைக் செய்யுங்கள் என்றும் பீட்டா கூறியுள்ளது. பீட்டா இந்த பிரச்சாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதோடு, பல்வேறு தரப்பினரிடம் இருந்து கடும் எதிர்ப்புகளையும் சந்தித்து வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.