Finger Milet Dosa in tamil: ஆரியம், ராகி மற்றும் கேப்பை என்று அழைக்கப்படும் கேழ்வரகு ஏறத்தாழ 4000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது ஆகும். இவை தமிழகத்திலும், நமது அண்டை மாநிலமான கர்நாடகாவிலும் அதிகப்படியாக சாகுபடி செய்யப்படுகின்றன.
கேழ்வரகின் மருத்துவப் பயன்கள்
கேழ்வரகு ஆரோக்கியமான எலும்புகளைப் பெறுவதற்கும், உடல் எடையைக் குறைப்பதற்கும் நீரிழிவு நோயைக் குணப்படுத்தற்கும் உதவுகின்றன.
இவை ரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொழுப்பைக் குறைப்பதோடு ரத்த சோகையைக் குணப்படுத்தவும் உதவுகின்றன.
மேலும், சோர்வைப் போக்கவும், உயர் ரத்த அழுத்தத்தைக் குணப்படுத்தவும் இவை உதவுகின்றன.
இவ்வளவு மருத்துவ குணங்களை கொண்டுள்ள கேழ்வரகில் மொறுமொறு தோசை எப்படி தயார் செய்யலாம் என்று இங்கு பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
ராகி (அ) கேழ்வரகு மாவு – 2 கப்
பச்சரிசி – 1/2 கப்
மோர் – 1 கப்
வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 3
கறிவேப்பிலை – 2
கொத்தமல்லி –
உப்பு – தேவையான அளவு
எண்ணெய்
கடுகு, உளுந்தம் பருப்பு – 1/2 டீ ஸ்பூன்
செய்முறை
கேழ்வரகு தோசை தயார் செய்ய வேண்டும் என்று முடிவு செய்தால் நீங்கள் முதலில் செய்ய வேண்டியது அரசி ஊற வைப்பது தான். எனவே 1/2 கப் பச்சரிசி எடுத்து 1 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். பிறகு அவற்றை மிக்சியில் நொறுநொறுவென அரைத்துக்கொள்ளவும்.
அதன் பின்னர், கேழ்வரகு மாவை எடுத்து மாவு கரைக்கும் பாத்திரத்தில் இடவும். பிறகு அதில் முன்னர் அரைத்து வைத்துள்ள பச்சரிசி மாவையும், சிறிதளவு மோரையும் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
இப்போது, வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை ஆகியவற்றை நன்கு பொடிப்பொடியாக நறுக்கிக்கொள்ளவும். பிறகு தோசைக்கல்லை சூடேற்றி அதில் கடுகு, உளுந்தம் பருப்பு சேர்த்து பொரிந்ததும், வெங்காயம் கருவேப்பிலையை சேர்த்து நன்கு வதக்கவும். பொன்னிறமாக அவற்றை வதக்கிய பின்னர், கலந்து வைத்துள்ள மாவுடன் சேர்த்துக்கொள்ளவும். அதோடு பொடிப்பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகளையும் சேர்த்துக்கொள்ளவும்.
இப்போது தோசைக்கல்லை சூடு செய்து அதில் தோசைகளாக ஊற்றவும். அவற்றை ஒரு மூடியால் மூடி நன்கு வெந்ததும் இட்லி பொடி, தேங்காய் அல்லது கார சட்னிகளுடன் சேர்த்து ருசிக்கவும்.

“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறt.me/ietamil“