Ramprassana Chellamuthu weds Akhila without Mangalsutra : கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராம்பிரசன்னா செல்லமுத்து. அவர் தன்னுடைய காதலியை சமீபத்தில் மணம் முடித்தார். அந்த திருமணம் தமிழர்களின் முறைப்படி அரங்கேறியுள்ளது. இவர் அமெரிக்காவில் சொந்தமாக யெஸ்பாஸ் க்ளௌவ்ட் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவருடைய துணைவியார் அகிலா அமெரிக்காவில் உள்ள பிரபல சாஃப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அமெரிக்காவின் சிக்காக்கோ மாகாணத்தில் இவர்கள் இருவரின் திருமணம் திருக்குறள் ஒலிக்க, பறை இசைக்க, தாலியின்றி நடைபெற்றது. இதில் என்ன தமிழ் முறை என்கிறீர்களா? மந்திரங்கள் ஒலிக்க, நெருப்பின் முன் அமர்ந்து திருமணம் செய்தால் மட்டும் தான் திருமணமா?
மேலும் படிக்க : உ(இ)றுதியாகும் தூக்கு மேடை; அனைத்து மனுக்களும் தள்ளுபடி – முற்றுப்பெறுமா நிர்பயா வழக்கு?
நூறு ஆண்டுகளுக்கும் மேலாக தமிழங்களில் நடைபெற்று வரும் சாதிமறுப்பு, சுயமரியாதை திருமணங்களில் ஒன்றாக இதை பார்க்கலாமே என்று தான் சொல்லத் தோன்றுகிறது. ஆணும் பெண்ணும் பழகினாலே அந்த நட்பினை நாம் நட்பு என்ற ரீதியில் எடுத்துக் கொள்வதில்லை. ஆனாலும் நாம் நம்முடைய கலாச்சாரத்தை என்றும் விட்டுத்தருவதில்லை. அதனால் தான் இந்த திருமணத்தில் மணமகளுக்கு தோழனும், மணமகனுக்கு தோழியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் திருவள்ளுவர் சிலைகள் அமைக்கப்பட்டு, 5 திருக்குறள் ஒலிக்க திருமணம் நடைபெற்றது. தாலி ஏதும் கட்டாமல், மாலை மாற்றி இந்த திருமணம் நடைபெற்றிருக்கிறது.
இந்த திருமணத்தில் மிகவும் கவனிக்கத்தக்க வகையில் நடந்த நிகழ்வு என்னவென்றால், அன்பளிப்புகள் ஏதும் வாங்கி வரவேண்டாம் என்று அன்பு கட்டளையே விடுத்துள்ளனர் மணமக்கள். அதையும் மீறியும் சிலர் வாங்கி வந்திருக்கின்றனர். ஆனால் இவர்கள், திருமண விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு, ப்ளாஸ்டிக் ஒழிப்பினை முன்னெடுக்கும் வகையில், மெட்டல் வாட்டர் பாட்டில் வாங்கிக் கொடுத்துள்ளனர். திருமணத்தின் ஒரு அங்கமாக பறை இசை மேடையில் இசைக்கப்பட்டுள்ளது. குடும்ப வாழ்க்கையில் ஒருவருக்கு ஒருவர் உற்ற துணையாய் இருக்கின்றோம். ஆனால் இந்த சமூகத்திற்கு இருவரும் சேர்ந்து என்ன செய்யப் போகின்றோம் என்பதையும் அவர்கள் உறுதிமொழியாய் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”