Rasam recipe in tamil: ‘உணவே மருந்து’ என்பார்கள். நாம் அன்றாட சாப்பிடும் உணவுகளில் சில மருத்துவ குணங்கள் கொண்ட மூலிகை பொருட்கள் சேர்க்கப்படுவதால் அவை நமது உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை தருகின்றன. அவற்றில் ரசத்தை நாம் குறிப்பிட்டு கூறிவிடலாம்.
மதிய உணவுகளில் நிச்சயம் இடம்பிடிக்கும் இந்த ரசத்தில் பல வகை உள்ளது. இதில் முற்றிலும் வித்தியாசமான சுவையைக் கொண்டது பருப்பு ரசம். இத்தைகைய ரசத்தை நாம் எளிதில் தயார் செய்து விடலாம். இந்த சுவையான மற்றும் ஆரோக்கியமான ரசத்திற்கு சிம்பிள் செய்முறை மற்றும் முக்கியமாக தேவைப்படும் பொருட்களை இங்கு பார்க்கலாம்.

பருப்பு ரசம் செய்யத் தேவையான பொருட்கள்:
தக்காளி – 1 (பெரியது மற்றும் நறுக்கியது)
பச்சை மிளகாய் – 1
துவரம் பருப்பு – 1/2 கப் (வேக வைத்து ஓரளவு நன்கு மசித்தது)
புளிச்சாறு – 1 டேபிள் ஸ்பூன்
பூண்டு – 5 பற்கள்
ரசப் பொடி – 1 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
சர்க்கரை – 1 டீஸ்பூன்
கொத்தமல்லி – சிறிது
தாளிக்க
எண்ணெய் – 1 டீஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
பெருங்காயத் தூள் – 1/4 டீஸ்பூன்
வரமிளகாய் – 1
பருப்பு ரசம் செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து தாளிக்கவும்.
பின்னர் அவற்றுடன் தக்காளி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
தொடர்ந்து அவற்றுடன் உப்பு, சர்க்கரை மற்றும் ரசப்பொடி சேர்த்து நன்கு கிளறி கொள்ளவும். அதன்பின் தண்ணீர், புளிச்சாறு, பூண்டு ஆகியவற்றை சேர்த்து கொதிக்க விடவும்.
பிறகு அதில் முன்னர் வேக வைத்துள்ள பருப்பை சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விடவும்.
இப்போது கொத்தமல்லி தழைகளை தூவி இறக்கினால், நீங்கள் எதிர்பார்த்த சுவையான மற்றும் ஆரோக்கியமான பருப்பு ரசம் தயராக இருக்கும். இவற்றை சூடான சாதத்துடன் சேர்த்து ருசித்து மகிழவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil