Rasam Recipe Tamil News: நம்முடைய அன்றாட உணவுகளில் ரசம் சேர்த்துக்கொண்டால் உடலுக்கு நல்லது. அதிலும் குறிப்பாக மிளகு ரசம் எடுத்துக் கொண்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மேலும் ஜுரம், சளி, கபம் போன்ற பிணிகளை அண்ட விடாது.
ரசத்தில் நாம் மிளகு சேர்ப்பதால், அவை இருமல், தலை சுற்றல் போன்ற பாக்டீரியாவால் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்கின்றது. அதோடு சுவாசப் பிரச்சினைகளுக்கு இவை ஒரு சிறந்த மூலிகை மருந்தாகவும் செயல்படுகிறது.
இவ்வளவு நன்மைகளையும், எண்ணற்ற ஊட்டசத்துக்கள் மற்றும் மருத்துவ பயன்களையும் கொண்டுள்ள மிளகில் ரசம் எப்படி செய்யலாம் என்பதை இங்கு காணலாம்.
தேவையான பொருட்கள்
2 ஸ்பூன் – மிளகு
1 ஸ்பூன் – சீரகம்
4 – காய்ந்த மிளகாய்
கால் டீஸ்பூன் – கடுகு
25 கிராம் – புளி
1 டேபிள் ஸ்பூன் – நல்லெண்ணெய்
தேவையான அளவு – துவரம் பருப்பு வேக வைத்த தண்ணீர்
நீங்கள் செய்ய வேண்டியவை
ஒரு சிறிய பாத்திரம் எடுத்து அதில் 2 ஸ்பூன் மிளகு சேர்த்து மிதமான சூட்டில் நன்கு வறுக்க வேண்டும். பிறகு சீரகத்தையும் இதேபோல் தனியாக வறுத்து எடுத்துக்கொள்ளவும். இவை இரன்டும் நன்கு ஆறிய பின்னர், மிக்சியில் இரண்டையும் சேர்த்து அரைக்கவும்.
இப்போது ஒரு கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் நமக்கு தேவையான அளவு நல்லெண்ணெய் சேர்த்துக் கொள்ளவும். பின்னர் அதில் காய்ந்த மிளகாய்களை சேர்த்து நன்கு வதக்கவும். அதனை தொடர்ந்து கடுகு, கறிவேப்பிலை சேர்த்து பொரிய விட்டு, நறுக்கி வைத்துள்ள தக்காளி பழங்களை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். இங்கு நாம் எந்த அளவிற்கு தக்காளிகளை வதக்குகிறோமோ அந்த அளவிற்கு நாம் வைக்கும் ரசம் டேஸ்டியாக இருக்கும்.
நாம் சேர்த்த தக்காளிகள் நன்கு வதங்கிய பின், ரைத்து வைத்துள்ள புளி கரைசலை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். அதன் பிறகு வேகா வைத்த துவரம் பருப்பு தண்ணீரை ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்க்கவும். பிறகு கொத்தமல்லி தழைகளைத் தூவி, பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.
இறுதியாக நாம் ஏற்கனவே அரைத்து வைத்துள்ள மிளகு மற்றும் சீரகம் கலந்த பொடியை லேசாகத் தூவி, அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
உங்களுக்கு கண்டிப்பாக இங்கு ஒரு சந்தேகம் எழலாம். நாம் ஏன் வெள்ளை பூண்டு சேர்க்கவில்லை என்று, மிளகு ரசம் தயார் செய்ய பூண்டு தேவையில்லை. ரசம் இனிப்பாக இருக்க வேண்டும் என விரும்புபவர்கள் சிறிதளவு வெல்லம் சேர்த்துக்கொள்ளலாம்.
உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தரும் இந்த சுவையான ரசத்தை நீங்கள் ஒரு முறை முயற்சிக்கலாமே மக்களே!!!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற ” (https://t.me/ietamil)